அ.முத்துலிங்கமும் ஈழப்போரும்
அன்பள்ள ஜெயமோகன்
அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்து பற்றிய கடிதமும் அதற்கு நீங்கள் எழுதிய பதிலும் படித்தேன் நன்றி.
இன்றைக்கு எழுதும் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவரும் மூத்தவருமாகிய முத்துலிங்கம் பற்றி இப்படியொரு கருத்தை திட்டமிட்டு நீண்ட காலமாக சொல்லி வருகிறார்கள். ஈழப்போரட்டம் பற்றி நல்ல நாவலை, சிறுகதைகளை எழுதியவர்கள் பலர் கொடுமையான போர் நடந்த நாள்களில் அங்கு வாழ்ந்தவர்கள் அல்ல. சண்டைக்கை நின்றுதான் எழுதவேணும் என்றால் அது “றிப்போட்”. இலக்கியம் என்றால் கிட்டமும் தூரமும் பிரச்சனை அல்ல என நினைக்கின்றேன்.
முத்துலிங்கமும் நீண்டகாலம் வெளி நாடுகளில் வாழ்கின்றார். அதற்காக அவர் தன் தாயகத்தை மறந்தவர் அல்ல தன் கொக்குவில் வாழ்வைs சொல்லும் அருமையான அக்கா சிறுகதை தொடக்கம் தன் ஊரையும் நாட்டையும் பின்னணியாக்க் கொண்டு பல படைப்புக்களை எழுதியிருக்கினறார். அவர் ஏறத்தாழ 150 சிறுகதைகள் எழுதியிருக்கலாம். போர் உக்கிரமான காலத்தில் வந்த கதைகளில் “எல்லாம் வெல்லும்” “புதுpபெண்சாதி” ” வெள்ளிக்கிழமை இரவுகள்” “நிலம்என்னும் நல்லாள்’. போன்ற கதைகள் என் ஞாபகத்தில் வருகின்றன.இக்கதைகளை தவிர தேடினால் ஊரும் போரும் பற்றிய படைப்புக்களை இன்னும் பட்டியல் இடலாம் : இதைவிட எத்தனையோ கட்டுரைகள்……
ஓர் இலக்கியகாரன் என்றதை தாண்டி தமிழுக்கும் தான் சார்ந்த சமுகத்திற்கும் ஒய்வு எடுக்க வேண்டிய இந்தக் காலத்திலும் பலவற்றை செய்த கொண்டிருக்கின்றார். ஒரு நண்பனாய் நான் பலவற்றை அறிவேன். இதனால் அவருக்கு தமிழுலகில் சிறிய புகழ் கிடைத்திருக்கலாம் அதனால் அவருக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை. ஒரு பரோபாகாரியான் அவர் மீது சிலருக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால் பலர் காழ்ப்பினால் அநியாயம் சொல்கின்றார்கள். அவர் தானும் தன பாடுமாய் தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருப்பவர்.
எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருது. பாரிசில் வாழேக்கை என் நண்பன் ஒருவன் தீடிரென வந்து “உங்கடை றூமிலை தங்கட்டோ?” எனக்கேட்டான். “என்ரா நீயிருக்கிற றூமுக்கு என்ன நடந்த்து?” என்று கேட்டேன்.
“ஒரு அண்ணனும் தம்பியும் அடிபடாக்குறையாய் தங்கள் குடும்பம் சம்மந்தமாய் ஏதோ சண்டைபிடிச்சுக் கொண்டிருந்தாங்கள். றூமிலை வேறு பெடியள் இல்லை, நான்தான் இருந்தேன். உந்த குடும்ப சண்டையை ஏன் கேட்பான் என்று ஏதோ எரு புத்தகத்தை படித்துக.கொணடிருந்தேன். தீடிரென தம்பிக்காறன் வந்து எனக்கு அடிச்சு போட்டு புண்ஃஃஃஃ நானும் அண்ணனும் சண்டைபிடிக்கிறோம் நீ புஸ்தகம் வாசிக்கிறாயா என்று விட்டு பேந்தும் போய் கதிரையை தூக்கிறான்” என்றான்.
இண்டைக்கு ஏறத்தாழ தமிழ் சமுகத்தின் ஒரு பகுதி இப்படித்தான் இருக்குது.
பிரியமுடன்
செல்வம்
கனடா
***
அன்புள்ள ஜெ
முப்பதாண்டுகளாக நீங்கள் அ.முத்துலிங்கம் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் நீங்கள் இந்தியா டுடேயில் அவரைப் பற்றி எழுதிய வாசகர்கடிதத்தையே வாசித்தவன். இன்னும்கூட அ.முத்துலிங்கம் தமிழ்ச்சூழலில் சரியாக வாசிக்கப்படவில்லை. அவரை வாசிப்பதற்கான கலைப்பயிற்சி நம் சூழலில் இல்லை. இங்கே பூடகமாக இருக்கும் ஒன்று என்றால் காமம் மட்டும்தான். வேறு எது மறைந்திருந்தாலும் நம்மவர்களால் வாசிக்க முடியாது. ஆகவே அவர்கள் ஆளுக்கு தோன்றியதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
முத்துலிங்கம் கதைகள் பெரும்பாலும் அன்னியநிலங்களில், அன்னிய வாழ்க்கைச்சூழல்களில் நிகழ்கின்றன. அவை உருவாக்கும் உணர்ச்சிகளும் சாதாரணமாக தமிழர்களால் அனுபவிக்கப்படுவன அல்ல. அவை புலம்பெயர்தலைச் சார்ந்தவை. அவற்றை கொஞ்சம் கற்பனையுடன் அந்த வாழ்க்கைக்குள் சென்றாலொழிய வாசிக்கமுடியாது. அத்துடன் அவர் உருவாக்கும் படிமங்களும் வழக்கமாக தமிழ்க் கதை கவிதைகளில் வருவன அல்ல. . அதை வாசிக்க உலக இலக்கியவாசிப்பும், கொஞ்சம் நவகவிதைப் பயிற்சியும் தேவை.
உதாரணமாக, மாபெரும் வாஷிங்மெஷின் ஒன்று ஒரு கதையில் அற்புதமான படிமமாக வருகிறது. அதன் பெயர் பூமாதேவி. சலிக்காமல் அது கீழிழுந்து வாழ்க்கையை அலசி தூய்மைசெய்துகொண்டே இருக்கிறது. அப்படி எத்தனையோ சொல்லலாம். உங்கள் குறிப்பு கூர்மையானது. நல்ல வாசகர்களுக்காக அதைச் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டியிருக்கிறது
ஸ்ரீனிவாஸ்
***