ஒரு புதிய வீச்சு

’காதலெனும் கலையை சிவன் பார்வதிக்குக் கற்பித்தான். குருதட்சிணையாக அக்கல்வியையே அவனுக்கு அவள் அளித்தாள்’ என்ற காளிதாசனின் வரியை சம்ஸ்கிருத அறிஞர்கள் மேற்கோளாக்குவதுண்டு. ஆணும்பெண்ணும் கொள்ளும் ஆடலில் உள்ள நுட்பங்கள் அளவிறந்தவை. மீளமீள உலக இலக்கியங்கள் எழுதிக்காட்டும் லீலை. பா.திருச்செந்தாழையின் இக்கதை முற்றிலும் புதிய ஒரு சூழலில் அதை மீண்டும் நிகழ்த்துகிறது.

தானியவணிகம் நிகழும் சூழல். நாம் எண்ணுவதற்கு மாறாக அது வணிகர்களும் விவசாயிகளும் நிகழ்த்தும் ஆடலால் ஆனது. அந்தக் களத்தின் உளவியல் நுட்பங்கள் இதுவரை தமிழில் எழுதப்படாதவை. தானியவணிகத்தில் ஒரு பெண் வந்தமர்ந்து இயல்பாக ஏன் என்று கேட்கும்போதே அங்குள்ள சூழ்ச்சிகள் சிதறிவிடுவது, சார் என்னும் சொல்லினூடாகக் கடத்தப்படும் கூரிய தாக்குதல்.

அந்த வணிகக்களத்தினூடாக ஆடையில் சரிகை என ஒரு காமத்தின் இழை ஓடுகிறது. அதிலும் ஓர் ஆடல். ஆண்பெண் ஆடலின் களத்தில் நிகழும் ஓர் உச்சப்புள்ளியை தானியவணிகத்தின் உச்சப்புள்ளியுடன் சரியாக இணைத்து கதையை நிகழ்த்திவிட்டிருக்கிறார் ஆசிரியர். பெண் வென்று செல்கிறாள், அது எப்போதுமே அப்படித்தானே?

பா.திருச்செந்தாழையின் கதைகள் எல்லாமே தொடர்ச்சியாக சிறப்பாக வெளிவந்துகொண்டிருப்பது வியப்பூட்டுகிறது. இது அவருடைய ஒரு ஆழ்ந்த புனைவுக்காலகட்டம். இத்தகைய ஒன்று கந்தர்வனுக்கு நிகழ்ந்தது. மிகக்குறுகிய காலகட்டத்தில் எழுதிய எல்லாமே சாதனைக் கதைகளாக நிகழ்த்திக் கடந்து சென்றார். அன்று அக்கதைகளை உடனடியாக அடையாளம் கண்டு நான் எழுதிக்கொண்டே இருந்தேன். இன்றும் அதைச்செய்ய விரும்புகிறேன்.

இத்தகைய காலகட்டம் நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. வருவதைப்போலவே மறைந்துவிடவும்கூடும். முடிந்தவரை அதைப் பேணிப் பெருக்கவேண்டும். அதிலேயே திகழவேண்டும். எவ்வகையிலும் அவர் அதைத் தளரவிடக்கூடாது. இரண்டு வகைகளில் அந்த விசை தளரும். ஒன்று, ஆசிரியர் தானாகவே வேறேதும் உலகியல் காரணங்களால் அதை ஒத்திப்போடுதல். இன்னொன்று, கலையுணர்வற்றவர்கள் உள்ளே புகுந்து அரசியலையோ வேறெதையாவதையோ சுட்டிக்காட்டி அபத்தமான விவாதங்களினூடாக ஆசிரியரின் தன்னம்பிக்கையை குலைத்து திசைதிருப்புதல்.

இரண்டுக்கும் எதிராக திடமான நிலைபாடு தேவை. முற்றிலும் புதியதோர் உலகம், இன்றுவரை சொல்லப்படாத கூர்மையுடன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இக்கதைகளில். வாழ்த்துக்கள்.

த்வந்தம் – பா.திருச்செந்தாழை


சிறுகதைகள்-செந்தில் ஜெகன்னாதன்,திருச்செந்தாழை

கதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்

முந்தைய கட்டுரைபொன்னி,கோதை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்