வெண்முரசு, அருண்மொழி- கடிதம்

அன்பு ஜெயமோகன்,

அருண்மொழி அக்காவின் வெண்முரசு உரையாடல் இரண்டாம் பகுதி கேட்டேன். முதல் பாக உற்சாகம் மேலும் கூடியிருப்பதாகத் தெரிந்தது. வெண்முரசு நாவல்களை அவர் விரைவாக அறிமுகம் செய்ததை ஒரு பருந்துப் பார்வையாகவே கொள்ளலாம்.

உரையாடலின் ஓரிடத்தில் குருஷேத்திரப் போர் குறித்துப் பேசும்போது வேதங்கள் எதிர் வேதாந்தம்(வேதங்கள் முரணியக்கம் வேதாந்தம் என்பதே பொருத்தமான பதம்) என ஒரு திறப்பைச் சாதாரணமாகச் செய்திருப்பார். உரையை அங்கேயே நிறுத்திவிட்டு, அமைதியாக அமர்ந்திருந்தேன். சமீபமாய் கீதையைக் குறித்து பலநூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதால், அவரின் திறப்பை எளிதாகக் கடந்து போக இயலவில்லை

திரையில் உறைந்திருந்த அருண்மொழி அக்காவின் முகம் கண்களில் நிலைத்திருக்க, சிந்தனை கீதைக்குத் தாவியது. உலகியல் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான சடங்கு உத்திகளைக் கொண்ட பூர்வ மீமாம்சம் எனும் வேத வேள்வித்தரப்போடு பிரம்மம்(படிமம்) வழியாக உலகியல் கடந்த தரிசனத்தை வலியுறுத்தும் உத்தர மீமாம்சம் எனும் வேதாந்தத் தரப்பின் மோதலாகக் கீதையை விரித்த போது.. திணறலால் திணறினேன். இதுவரை கீதைக்குத் தரப்படிருக்கும் வியாக்கியானங்கள் அதை வைதீக அதிகாரப் பிரதியாக நிறுவும் தத்துவக்கருத்தியல்களில் மும்முரமாக இருக்க.. வைதீக முரணியக்க வரலாற்றுப் பரப்பின் பின்புலத்தைக் கருத்தியலாகச் சொல்லாமல் ஒரு தரிசனமாகக் காண்பதற்குத் தூண்டும் அக்காவின் வாக்கியம் எனக்குள் திமிறிக் கொண்டிருந்த பல அடைப்புகளை ஆசுவாசப்படுத்தியது.

உலகியல் விருப்பங்களை நிறைவேற்றுவதன் பொருட்டு மேற்கொள்ளப்படுபவை வேள்விகளும், யாகங்களும்(சடங்குகள்). அதாவது, புறவிளைவைக் கணக்கில் கொண்டு செய்யப்படும் வினைகளே பூர்வமீமாம்சச் சடங்குகள். இன்றுவரை உலகியல் பயன்களுக்காகவே அச்சடங்குகள் நடைபெறுவதைக் கவனிக்கலாம். பூர்வ மீமாம்சம் முழுக்க புறவயத்தை மட்டுமே கவனத்தில் கொள்கிறது. மானுடவரலாற்றின் துவக்க்கட்டம் அவ்வாறான அறிவுநிலையிலேயே இருக்க இயலும். காலமும் அறிவும் வரலாறும் தொடர்ந்து இயங்குவதன் காரணமாக உத்திர மீமாம்சம்(பூர்வமீமாமசச் சடங்குகளுடன் அறிவுத்தரப்பின் வளர்ச்சி கொள்ளும் முரணியக்கத்தால்) உருகொள்கிறது. உத்திர மீமாம்சம் முழுக்க முழுக்க அகப்பார்வைக்கு முக்கியத்துவம் கொடுப்பது. அதனால்தான், அது உலகியல் பயன்களைப் பின்னுக்குத் தள்ளி அகநிறைவை முதன்மையாக்குகிறது. சுருங்கச் சொல்வதாயின், புறவிளைவைக் காட்டிலும் அகமலர்ச்சியே உண்மையானது என்பதே உத்திரமீமாம்சம். இதை, விளைவைக் கருத்தில் கொள்ளாது அகமலர்ச்சிக்காகச் செயல்படுதல் எனலாம். நேரடியாகச் சொல்ல வேண்டுமானால் செயல்படுதலே பலன் அல்லது விளைவு.

கீதைப் பின்புலத்தை சமூகவரலாற்றுத்தளத்தில் வைத்து நோக்கும்போது பூர்வமீமாம்சம்(இனக்குழு காலம்) துவங்கி உத்திரமீமாம்சம்(நவீன காலம்) வரையிலான சமூக முரணியக்கங்களைத் தரிசனமாகக் கண்டடைய இயலும். சமூகவரலாற்று முரணியக்கங்களைத் தரவுகளாக அல்ல.. தரிசனங்கள் வழியாக நெருங்குதலே சிறப்பானதாக இருக்கும். தரவுகள் சார்புக்கு உட்படுத்தப்பட்டு குறுகல்வாதங்களாகவே எஞ்சி நிற்கும் தன்மை கொண்டவை. தரிசனங்களோ சார்பு-சார்பின்மை கடந்து வரலாற்று நிகழ்வுகளைக் காணும் வாய்ப்பைச் சாத்தியப்படுத்தும். காப்பியங்களையும், புராணங்களையும் தரிசனங்களாக நெருங்கும் வாய்ப்பை பகுத்தறிவுகால குறுகல்வாதங்களால் தவறவிட்டு விட்ட கொடுமை நிகழ்ந்திருக்கிறது. இங்கு, காப்பியங்களையும் புராணங்களையும் மதப்பிரதிகளாகப் பெருமிதம் கொள்வதும் குறுகல்வாதத் தரப்பே.

கீதைக்கான வியாக்கியானங்கள் மதத்தளத்திலும், சித்தாந்தத்தளத்திலும், அரசியல்தளத்திலும் அதை ஒரு ’புனிதநூலாகவே’ நம்பி மண்டையை உடைத்துக் கொண்டிருக்கின்றன. அதனாலேயே, கீதையில் இல்லாதது எங்கும் இல்லை என மதத்தரப்பினர் முட்டி தட்டுகின்றனர். சித்தாந்தத்தளத்தில் அது உளவியல் சிக்கல்களைச் சீர்படுத்தும் நெறிநூல் என்பதாக கண்ணாமூச்சி காட்டுகினற்னர். அரசியல் தளத்திலோ சொல்லவே வேண்டாம்.. மத, சாதி அதிகார நிறுவன அரசியலுக்கு கீதையே விதையிட்டு நீர் பாய்ச்சியது எனக் கொக்கரிப்பு. இவற்றுக்கு நடுவே அல்லல்பட்டு அவதியுறுவதைத் தவிர நமக்கு வேறு வழி? அருண்மொழி அக்கா கீதையை ‘புனிதநூல்’ எனும் பிம்பத்தில் இருந்து விடுவித்து நம் யோசனையைக் கிளறுகிறார்.

வேதங்கள் எதிர் வேதாந்தம் எனும் அக்காவின் பார்வை வழியாக கீதையின் புனிதநூல் பிம்பம் உடைபட்டு அது சமூகவரலாற்று வெளியின் விசாலத்தை உத்தேசிக்க உதவும் கருவியாகிறது. கீதையைப் பேசினாலே முகஞ்சுழிக்கும் அறிவுத்தரப்பாகி இருப்பவர்கள் கொஞ்சம் மனது வைத்து இக்கோணத்தில் யோசிப்பார்களானால் பல பயனுள்ள வரலாற்றுச் சாத்தியப்பாடுகளைக் கண்டடைய இயலும். அதன் வழி, உறையவைக்கப்ப்பட்டிருக்கும்(ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேற்பட்டு) மானுடச்சமூக வரலாற்றின் திரிபுப்பக்கங்கள் அம்பலமாகலாம்.

வேதாந்தம் என்பது பிரம்மத்தையே முதன்மைப்படுத்தினாலும் அதுவும் ஒற்றைத்தரப்பாக இல்லை. அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் என மூன்று கோணங்களில் பிரம்மம் அணுகப்படுகிறது. இங்கு ஒன்றை அழுந்தச் சொல்வது அவசியமாகிறது. பிரம்மம் என்பது பொருளன்று, கருத்தன்று; தரிசனக் குறியீடு. அதில் தெளிவாகாமல் வேதாந்தத்துக்குள் நுழையும் அறிவுஜீவிகளால் திரிபுக்கருத்தியல்களே அல்லது கருத்தியல்திரிபுகளே கால்கொள்ளும்.

மத்வம் தாமச குணமுள்ளவர்களுக்கும், விசிஷ்டாத்வைதம் ராஜச குணம் உள்ளவர்களுக்கும், அத்வைதம் சத்துவ குணம் உள்ளவர்களுக்கும் இணக்கமாக இருக்கும் என நான் கருதுவதுண்டு. என்றாலும், ஒருவருக்குள் இருக்கும் முக்குணங்களால் அவரால் மூன்று வகையான வேதாந்த அனுபவங்களையுமே வெவ்வேறு சூழல்களில் எதிர்கொள்ளும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

சைவசித்தாந்தத்தில் சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் எனச் சொல்வார்கள். பூர்வமீமாம்சம் என்பது சரியை மற்றும் கிரியை. உத்தரமீமாம்சம் என்பது யோகம் மற்றும் ஞானம். சரியை > கிரியை > யோகம் > ஞானம் என்பதான படிநிலைகளைச் சமூகக் கூட்டு நனவிலி வழியாக நோக்கும் ஒருவருக்கு வேட்டை > மேய்ச்சல் > வேளாண் > நவீனச் சமூக வரலாற்றின் நிகழ்வுகள் புலப்படக்கூடும். அந்நிகழ்வுகள் பல்வேறு சமூகக்குழுக்களின் முரணியக்க வெளிப்பாடுகளாகவும் விளங்கக் கூடும். அதன்வழி கட்சி அரசியல் சிந்தனை முறைமைகளின் தகிடுதத்தங்களும் அப்பட்டமாகலாம்.

பிரம்ம வேதாந்தம் எதிர் சைவ சித்தாந்தம் எனும் கூக்குரல் சமீபமாய் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. வேதாந்தம் இறுதியாக முன்வைக்கும் பிரம்மத்தை மனிதஅறிவால் நெருங்கிவிடவே முடியாது. சித்தாந்தம் முன்வைக்கும் சிவமும் அத்தகையதுதான். உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் எனும் பெரியபுராணப் பாடலை நினைவுக்குக் கொண்டு வருவோம். மேலதிக விளக்கங்களுக்கு, தத்துவ வியாக்கியான நூல்களை வாசிக்கலாம்.

பிரம்ம வேதாந்தத்தின் ஒரு கோணமான அத்வைதம் உலகைப் பொய் எனச் சொல்லவில்லை. மாறாக, தோற்றம் என்றே அறிவிக்கிறது. தோற்றம் என்றால் உண்மையும் இல்லை, பொய்யும் இல்லை; உண்மையும்தான், பொய்யும்தான். கானல்நீர் உருவகத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். பிரம்மத்தை மட்டுமே அத்வைதம் உண்மை என்கிறது. அதன் நோக்கில் மற்றவை எல்லாம் தோற்றங்களே. சைவசித்தாந்தத்தைப் பொறுத்தவரை, கடவுள்(சிவம்), உயிர்கள், அவற்றுக்கிடையேயான தொடர்பு எனும் மூன்றுமே உண்மைகள். எனினும், அங்கும் சிவமாகிய கடவுளே முழுமுதல் உண்மை; மற்றவை எல்லாம் பகுதி உண்மைகளே. சுருக்கமாய் வரையறுக்கப் பார்க்கிறேன். கால-வெளி எல்லைக்கு அப்பாற்பட்ட கோணத்தில் நின்று மானுட இருப்பை(கால-வெளி அமைப்பை) வியாக்கியானம் செய்வது அத்வைதம். மானுட இருப்பின்(கால-வெளி அமைப்பின்) கோணத்தில் இருந்து கால-வெளி எல்லை கடந்திருக்கும் சிவத்தை வியாக்கியானம் செய்வது சைவசித்தாந்தம்.

திராவிடக் கருத்தியலனாக இருந்தபோது தமிழ்ச்ச்மூகத்தை பிராமணன் எதிர் பிராமணர் அல்லாதோர் என்பதாகவே நம்பி இருந்தேன். பிறகு, தமிழ்த்தேசிய அறிமுகம், அப்பார்வை தமிழர் எதிர் தமிழர் அல்லாதொர் என உருமாறியது. மார்க்சியம் பக்கம் வந்தேன். சுரண்டப்படுவோர் எதிர் சுரண்டுவோர் எனும் பொருளியல் பார்வையானது. அம்பேத்கரியத்தைக் கவனித்த போது, தலித் எதிர் தலித் அல்லாதோர் எனும் கோணம் புலப்பட்டது. காந்தியிடம் வந்தால் கிராமம் எதிர் நகரமாக அப்பார்வை மாறியது. நவீன அறிவியலிடம் வந்தால் நிரூபணஅறிவு எதிர் மூடநம்பிக்கை எனும் பார்வை துலங்கியது.

திராவிட மையக்கருத்தியலின் அபத்தங்களை கோ.கேசவன் வழியேயும்(சாதியம் நூல்), தமிழ்த்தேசிய மையக்கருத்தியலின் அபத்தங்களை சேலம் தமிழ்நாடன் வழியாகவும்(தமிழன் என்றோர் இனமுண்டா என்பதான ஆய்வுக்கட்டுரை), மத மையக்கருத்தியலின் அபத்தங்களை வ.அழகுமுத்து வழியாகவும்(விதி என்றால் என்ன, நான் கடவுள் ஆன்மா பிரபஞ்சம் போன்ற நூல்கள்),ஆன்மீக மையக்கருத்தியலின் அபத்தங்களை ஓஷோ(பல நூல்கள்) வழியாகவும், மார்க்சிய மையக்கருத்தியலின் அபத்தங்களை கோவை ஞானி மற்றும் எஸ்.என்.நாகராசன்(பல நூல்கள்) வழியாகவும், அம்பேத்கரிய மையக்கருத்தியலின் அபத்தங்களை டி.தருமராஜ்(அயோத்திதாசர் நூல்) வழியாகவும், காந்திய மையக்கருத்தியலின் அபத்தங்களை ஜெயமோகன்(இன்றைய காந்தி நூல்)  வழியாகவும், நவீன அறிவியலின் அபத்தங்களை பேராசிரியர் க.மணி(மனித ஜீனோம் உள்ளிட்ட பல நூல்கள்) வழியாகவும் விளங்கிக் கொண்டேன்.

தெளிவாகவே சொல்கிறேன். கருத்தியல்களின் வழியாகவே சமூக வரலாற்றின் முரணியக்கங்களை நெருங்க முடிந்தது. அவ்வகையில், கருத்தியல்கள் அவசியம். அவற்றில் ஏதேனும் ஒன்றை மையஅதிகாரமாக்கி அல்லது நிறுவனஅமைப்பாக்கி அதை அரசியல் செயல்பாட்டுக் களமாக நடைமுறைப்படுத்த்த் துடிக்கும் சர்வாதிகார அபத்தத்தை விளங்கிக் கொள்வது அதைவிட அவசியம்.

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்

முந்தைய கட்டுரைதன்னறமும் செயலும் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநிலவும் மழையும்- 4