இந்திய இலக்கியத்தை அறிய…-கடலூர் சீனு

இந்திய இலக்கிய வரைபடம்

இனிய ஜெயம்

இந்திய இலக்கிய வரைபடம் பதிவு கண்டேன். அன்றைய தலைமுறையில் ‘இந்திய இலக்கியங்கள்’ எனும் தலைப்பில் க.நா.சு எழுதிய இந்திய நாவல்கள் குறித்த ரசனைப் பரிந்துரை நூல் ஒரு முன்னோடி எனக்கொண்டால், ஜெயமோகன் எழுதிய ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ இன்றைய தலைமுறைக்கு ஒரு முக்கியமான பரிந்துரை நூல். இந்த நூல் அளித்த தாக்கத்தின் பொருட்டே வனவாசி, நீலகண்ட பறவையைத் தேடி, ( அரை நூற்றாண்டு கடந்து மறுபதிப்பு)  மண்ணும் மனிதரும் போன்ற இந்தியப் புனைவுகள் மறுபதிப்பு கண்டன. நீங்கள் எனக்கு முதன் முதலாக எழுதி கையெழுத்திட்டு அளித்த நூலும் கூட அதுதான்.

ஆனால் அதற்கு முன்பாகவே ‘ இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ எனும் தலைப்பில் சிவசங்கரி அவர்கள் தொகுத்த நான்கு பாக தொகுதியில் ஏதோ ஒன்றினை வாசித்திருந்தேன். அந்த நான்கு பாக தொகுப்பு ஒரு முக்கியமான முன்னோடி முயற்சி என்று சொல்லுவேன். 97 இல் துவங்கி எட்டு வருடங்கள் உழைத்து, பல பயணங்கள் செய்தும், பல இந்திய எழுத்தாளர்களை நேரில் கண்டு நேர்காணல் செய்தும்,  சிவசங்கரி அவர்கள் கொண்டு வந்த அந்த நான்கு பாக தொகுதியின் செயல்திட்டம் என்பது, 18 இந்திய மொழிகளிலும் இலக்கியதில் இன்று வரை நிகழ்ந்தவற்றை ஒரு நெட்டோட்டமாக தமிழில் அறிமுகம் செய்வது. (இதன் ஆங்கில மொழியாக்கமும் உண்டு). 18 இல் ஒவ்வொரு மொழியிலும் தேர்வு செய்யப்பட்ட சில சிறுகதைகள், கவிதைகள், அந்த மொழியின் எழுத்தாளர்கள் சிலரின் நேர்காணல், ஒட்டு மொத்தமாக அந்த மொழியில் இன்று வரையிலான இலக்கியப் போக்குகள் குறித்த கட்டுரை என அமைத்த நான்கு தொகுப்புகள்.

இது ரசனை மதிப்பீட்டின் வழியே உருவான தொகுப்பு அல்ல.சிறந்த ஆளுமைகள் படைப்புகளுடன், ஒரு சூழலில் எவையெல்லாம் மேலெழுந்து வந்ததோ அவையும் குறிப்பிடப்பட்ட தொகுப்பு. (உதாரணமாக  பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகனும்  ஜோ டி க்ரூஸ் எழுதிய ஆழி சூழ் உலகு இரண்டும் சூழலில் பேசப்பட்டு எழுந்து வந்த சூழலில் இரண்டுமே இடம் பெறுவதை போல). இதில் உள்ள வங்க  இலக்கிய அறிமுகத்தில்  மகாசுவேதா தேவி, சுனில் கங்கோபாத்யாயா தெரியும், நபரூன் பட்டாச்சார்யா வை இதில்தான் முதன் முதலாக கேள்விப்படுகிறேன். முன் சுவடில்லா புதிய பாதையில் முன்னோடி முயர்ச்சி என்ற வகையில் குறைகள் நிகழவே செய்யும். அதை விலக்கி வாசகர்கள் இலக்கியத்தில் இந்திய அளவில் தொடக்க நிலையில் ஒட்டுமொத்த முதல் வரைவை உருவாக்கிக்கொள்ள, (சுருக்கமான நேபாளி நவீன இலக்கிய அறிமுகம் , மணிப்பூரி இலக்கிய வரலாறு இப்படி) இந்த தொகுப்புகள் கொண்டுள்ள உள்ளடக்கம், புரிதல் வழிகாட்டியாக உதவலாம்.

கீழ் கண்ட வாடகை மின் நூலகத்தில் இந்த நான்கு தொகுப்புகள் வாசிக்கக் கிடைக்கிறது.

https://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

இப்பதிவினை எழுதிய பிறகு  என்வசமிருந்த தொகுதியை தேடினேன். கிடைத்தது. முதல் தொகுப்பு. அன்றைய நிலவரப்படி பழைய புத்தக கடையில் வாங்கிய கசங்கிய தொகுப்பு. ஆந்திரம், கர்நாடகம், மலையாளம், தமிழ் அடங்கிய தொகுப்பு.

மலையாளத்தில் பஷீர், எம்டிவி, தகழி, சேது, இவர்களின் விரிவான நேர்காணல், இவர்களின் கதை, கவிதைக்கு சுகுத குமாரி அவரது விரிவான நேர்காணல், மலையாள நவீன இலக்கிய வரலாறு குறித்து ஐயப்ப பணிக்கர் அவர்களின் கட்டுரை.

கன்னடத்தில் பைரப்பா, சிவராம காரத், அனந்த மூர்த்தி இவர்களின் நேர்காணல் கதைகள் நவீன கவிதை, மற்றும் கன்னட நவீன இலக்கிய வரலாறு குறித்த கட்டுரை.

தமிழில் ஜெயகாந்தன், இந்திரா பார்த்த சாரதி, பிரபஞ்சன்,  நேர்காணல்கள் கதைகள், திராவிட இலக்கியம் குறித்து தமிழ்க் குடிமகன், இடதுசாரி இலக்கியம் குறித்து பொன்னீலன் நேர்காணல், கவிதைகள் குறித்து அப்துல் ரகுமான், நவீன தமிழ் இலக்கிய வரலாறு குறித்து நீல பத்மநாபன் கட்டுரை. முன்னுரை குஷ்வந் சிங்.

ஆக ஒரு நிலத்தில், அதன் கலாச்சார சூழலின் பிரதிநிதியாக முன் நிற்கும் தரப்புகளின் முன்னணி முகங்கள் வழியே உருவான தொகுப்பு என்று இதைக் கொள்ள முடியும். இடரற்ற மொழி பெயர்ப்பும் கூட. இப்படியே பிற மூன்று தொகுப்பும் இருக்கும் எனில் நிச்சயம் இது தீவிர இலக்கியத்துக்கு வெளியே அன்றைய வெகுஜன பொது இலக்கியத்தின் நட்சத்திர முகங்களில் ஒருவரான சிவசங்கரி அவர்களின் தீவிர இலக்கிய நோக்கிலான தவிர்க்க இயலா முக்கிய முன்னோடி முயர்ச்சி என்றே கொள்ளவேண்டும்.

கடலூர் சீனு

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு தொகுப்பு சிவசங்கரி

முந்தைய கட்டுரைபேசாதவர்கள், கடிதங்கள் -4
அடுத்த கட்டுரைஇலக்கியத்தின் நுழைவாயிலில்