பேசாதவர்கள், கடிதங்கள்-2

பேசாதவர்கள்[சிறுகதை]

அன்புள்ள ஜெ,

பேசாதவர்கள் கதையை இன்னொரு முறை படிக்க முடியவில்லை. அந்த கொடிய சித்திரவதைக் கருவிகள். அந்த தூக்கு கூண்டை நான் பத்மநாபபுரம் அரண்மனையில் பார்த்திருக்கிறேன். அதை கவசம் எனறு நினைத்தேன். தூக்கு போடுவது என்றார்கள். பத்மநாபபுரம் அரண்மனையிலுள்ள சித்திரவதைக் கருவிகளே கொடூரமானவை.

பேசாதவனாகிய டம்மி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தூக்கில்போடப்படுகிறது. பேசாமலிருந்ததுதான் அது செய்த பிழை.

ஆஸ்டின் ராஜ்

***

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்

நலம்தானே பேசாதவர்கள் சிறுகதை படித்தேன். இதுவரை தமிழ் வாசகர்கள் காணாத முற்றிலும் மாறுபட்ட தளம். அதனாலேயே கதை எல்லாருக்குமே வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கும். தூக்கில் போடுவதில் இத்தனை சடங்குகள் இருக்கும் என்று பெரும்பாலும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக அந்த டம்மி பொம்மை. வயதானவர்கள் எப்பொழுதும் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்; கண்ணீர் விட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பது மிகவும் யதார்த்தம்.

சித்ரவதைகளில் காதுகளின் அருகே ஒலி எழுப்புவதும், கண்களுக்கருகே ஒளி பாய்ச்சுவதும் உண்மையில் பயங்கரமானவை. அந்தப் பழைய அறை உள்ளே தானப்பன் போகும்போதே இது ஒரு புதுமாதிரியான கதை எனப் புரிந்துவிடுகிறது. அதுவும் அந்தப் பொம்மையைக் காட்டியவுடன் இதில் அமானுஷ்யம் வரும் என்றும் உணர்ந்துவிட்டேண். ஆனால் அதை மிக அளவுடன் பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதனாலேயே கதை வெற்றி பெறுகிறது.

உண்மையில் பண்டிட் கறம்பன் அதனுள் புகுந்து குடிகொண்டிருக்கிறான். அதனாலேயே மருத்துவருக்கு நாடித்துடிப்பு கேட்கிறது. வாசகன் இதை ஊகித்து உணர்கிறான். ஒரு நல்லவனை செல்வந்தர்கள் தூக்கில் போடவைத்தது அதுவும் அவன் ஒரு குற்றமும் செய்யாமல் இருந்ததால் அவன் ஆவி ஓர் இடம் தேடி அங்கே குடிகொண்டு விட்ட்து. அப்பொம்மையைக் கொளுத்தி மலையத்தி அதற்கு விடுதலை அளிக்கிறாள். தங்களின் அண்மைக்கதைகளில் புதுமாதிரியான அற்புதமான சிறுகதை இது.

வளவ துரையன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

பேசாதவர்கள் கதையைப்படித்து மனம் கலங்கியது. கொடுமையான வதைக்கூடங்கள் ஹிட்லரின் ஜெர்மனியில் தான் இருந்து என்று வசதியாக எண்ணி இருந்ததற்கு மாறாக நமது நாட்டில் நமக்கு மிக அருகிலேயே இருந்திருக்கின்றன என்ற அறிவு அச்சமூட்டியது. உலகம் முழுவதும் இத்தகைய வதைக்கூடங்கள் காலம் காலமாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு மனிதன் செய்த அல்லது செய்யாத குற்றத்திற்கான தண்டனையாக அவன் உயிரை ஒரு நொடியில் பறித்து விட இயலும் போது அணு அணுவாய் சித்திரவதை செய்து கொல்லுவதற்கான குரூரத்தை சகமனிதன் எங்கிருந்து பெறுகிறூன்? மனித மனதின் அடி ஆழத்தில் எப்போதுமே இவ்வியல்பு மறைந்து உள்ளது போலும்.

ஆராய்ந்து பார்த்தால் எங்கெல்லாம் அதிகாரம் குவிந்துள்ளதோ அங்கெல்லாம் குருரம் எனும் பேய் உறைந்துள்ளது. அது மனிதனை ஆளுகிறது. மானுட இயலபையே சிதைத்து அவனையும் ஒரு பேய் போலாக்கி விடுகிறது.

பேய்கள் வாழும் உலகம் !

நெல்சன்

பேசாதவர்கள்- திருச்செந்தாழை

பேசாதவர்கள் கடிதங்கள்

முந்தைய கட்டுரைதுவந்தம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆலயம் – எஞ்சும் கடிதங்கள்