ஈகலிட்டேரியன்ஸ் – உதவிகள், கடிதம்

https://youtu.be/U_XH4SADt3A 

அம்பேத்கர் உரை- கடிதம்

கல்வி நிலையங்களில் சாதி

அம்பேத்கர் நினைவுப்பேருரை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நீங்கள் தொடங்கி வைத்த ஈகலட்டேரியன்ஸ் குழுவுக்கு சில உதவிகள் சென்றிருக்கின்றன..

உங்களுடன் தொடர்பு கொண்ட அன்பு, நான் படித்த இர்மாவில் பணியாற்றி வருகிறார். அவர்,  When will Dalit lives matter என எழுதிய தீபக் மால்கனின் மாணவர்.. (அந்தக் கட்டுரையை வெளியிடுவீர்களா? கொஞ்சம் சுமாரான மொழிபெயர்ப்புதான் – ஆனால், நல்ல கட்டுரை)

அவர்கள் தகவல் உரிமைச் சட்டத்தை உபயோகித்து, மத்திய மற்றும் மாநில உயர்கல்வி நிலையங்களில் இருக்கும் Diversity defecit பற்றிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.. ஐஐடி மும்பை, ஐஐடி கரக்பூர், கோயமுத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் புள்ளி விவரங்களை, பொறுமையாக கேட்டுப் பெற்று வெளியிட்டிருக்கிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு,அவர்களுடன் நான் ஜூம் கால் வழியே பேசினேன். எனது பங்களிப்பாக ஒரு விஷயத்தை முன் வைத்தேன்.. ஐஐடி /ஐஐஎம் போன்ற ஒரு உயர்தரக் கல்வி நிலையத்தில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைக்கும் நம் குழந்தைகள், அந்தச் சூழலைக் கண்டு மிரண்டு விடுகிறார்கள்.. அது இயல்பு.. இர்மாவில், முதல் டெர்மில், தோல்வியுற்று விடுவேன் என பயந்து ஓடி வந்து விட்டேன்.. அங்கிருந்த எந்தப் பேராசிரியரும் எனக்கு ஒரு ஆலோசனை சொல்லித் தேற்ற வில்லை..  எனக்கு, நல்லூழாக என் அம்மாயி இருந்தார்.. போயிப் படிடா.. ஃபெயிலானா, நான் சாகற வரைக்கும் உனக்கு சோறு போடறன்னு சொன்ன ஒரு தேவதை..  அது பெரும் உதவி.

எனது நண்பர் தேசிகாமணி கோபாலதேசிகன் – நினைவிருக்கிறதா – சென்னை வெண்முரசு விழாவுக்கான டீஸரில் பேசியவர் -மனித வள மேம்பாட்டு ஆலோசகர் – ஈகலட்டேரியன்ஸ் குழுவில் இருக்கும் எந்த ஒருவருக்கும், எந்தப் பிரச்சினை என்றாலும், ஆலோசனை சொல்ல ஒத்துக் கொண்டிருக்கிறார்..  அவரை இந்தக் குழுவுக்கு அறிமுகப்படுத்தி உள்ளேன். எந்தப் பிரச்சினை என்றாலும், அதை எதிர்கொள்ளும் நேர்நிலை மனநிலையை உருவாக்கிக் கொள்ள உதவும் மனிதர்.

அப்புறம், மேல் படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் முக்கியப் பிரச்சினை,  அவர்களுக்கான பாதைகள், தங்கள் நோக்கத்தைத் தெளிவாக எழுத வேண்டிய வழிமுறைகள் (statement of Purpose) முதலியவற்றில் தடுமாறுகிறார்கள். எடுத்துக்காட்டாக, என் உறவினன் ஒருவர் அமெரிக்காவில் படிப்புக்குச் சென்றான். அவனை விட அதிகம் GRE யில் ஸ்கோர் செய்த என் இன்னொரு உறவினன், அமெரிக்கா உயர் கல்வி நிலையங்களில் அட்மிஷன் பெறத் தவறினான்.

இதைச் சரி செய்ய,  முகநூல் வழியே நண்பரான பேராசிரியர் கோபி ரெத்தினராஜ் அவர்களை இணைத்துக் கொடுத்திருக்கிறேன்.. அவர் தஞ்சாவூரைச் சார்ந்தவர்.. அமெரிக்காவில் வசிக்கும் உயர்சாதித் தமிழர்களில் பலர், தமிழகத்தில் இருந்து செல்லும் விண்ணப்பங்களின் விலாசத்தில் இருந்தும், பெயர்களில் இருந்தும், அவர்கள் சாதியைத் தவிர மற்றவர்களை அப்ளிகேஷன் ஸ்டேஜிலேயே வடிகட்டும் ஒரு நிரூபிக்க முடியாத  சாதிச் சல்லடை இருப்பதைச் சொன்னார்.. ஈகலட்டேரியன் நண்பர்களை, அந்தச் சுழல்களில் மாட்டிக் கொள்ளாமல் செல்லும் வழிகளைச் சொல்லித்தர முன்வந்துள்ளார்..  இப்போது இந்தக் குழுவில் 2-3 பேர் உயர்கல்விக்காக அமெரிக்கா செல்லும் எண்ணத்தில் உள்ளனர்.

நம் நண்பர் சரவணன் விவேகானந்தனும் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். இவை கொஞ்சம் நேர்நிலையாகத் தொடங்கியுள்ள விஷயங்கள்.. யாரேனும் சிகரம் தொட்டுவிட்டால், கொண்டாடலாம்

அன்புடன்

பாலா

முந்தைய கட்டுரைஅரசன் ராமாயணம் தொடக்கம்
அடுத்த கட்டுரைவெண்முரசு எழுதிய பின்…