தமிழ்ச்சூழலில் ஒரு விசித்திரமான முரண்பாட்டைக் காணலாம். இங்கே பொதுவெளியில் அனேகமாக அனைத்து அறிவுஜீவிகளும் சாதிக்கெதிராகவே பேசுவார்கள். சமூக ஊடகங்களைக் கொண்டு பார்த்தால் தமிழ்ச்சமூகமே சாதிக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருப்பதான சித்திரமே எவருக்கும் எழும். இங்குள்ள அரசியல்கட்சிகளில் சாதிக்கட்சிகள் சில தவிர எல்லாமே சாதியெதிர்ப்புக் கொள்கை கொண்டவை. இங்கே போற்றப்படும் சிந்தனையாளர்கள் பலர் சாதியை ஒழித்தமைக்காக அந்த புகழை அடைந்தவர்கள்.
ஆனால் தமிழ்ச்சமூகம் மூர்க்கமான சாதி மனநிலை கொண்டது. அத்தனை தேர்தல்களும் சாதியக்கணக்குகளுடனேயே நிகழ்கின்றன. தொழிற்சங்கங்கள், கூட்டுறவு அமைப்புக்கள் கூட சாதிய அடிப்படையிலேயே பிரிந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு அலுவலகத்திலும் சாதிக்குழுக்களாகவே வேலை நடைபெறுகிறது. ஒவ்வொரு வணிகமும் சாதிகளாகப் பிரிந்துள்ளது.
ஆனால் அதைப்பற்றி இங்கே பேச்சே எழுவதில்லை. அந்தச் சங்கடமான தலைப்பை அப்படியே உள்ளே மறைத்துக்கொள்வார்கள். சாதி இன்றி இங்கே ஒன்றுமில்லை. அந்த உண்மையை மழுப்புவதற்கான ஒரு பொது உத்தியாகவே இங்கே சாதியொழிப்பு பொதுவெளியில் பேசப்படுகிறது. அது ஒரு கூட்டுப்பாவனை மட்டுமே. எந்த அளவுக்கு அனல்கக்குகிறார்களோ அந்த அளவுக்கு ஏற்பு உண்டு. எவரும் தனிவாழ்க்கையில் அவர் எப்படி சாதிக்கு அப்பாற்பட்டவராக வாழ்ந்தார் என்று கேட்கப்போவதில்லை. அந்தக் கேள்வியே இங்கே சங்கடமான ஒன்று.
அதேபோன்று இன்னொரு முரண் இங்குள்ள இடைநிலைச் சாதி அரசியல். இங்கே இன்றைய அரசியலதிகாரம் முழுக்கமுழுக்க இடைநிலைச் சாதிக்குரியது என அனைவருக்கும் தெரியும். அரசதிகாரம், நிலவுடைமை, சமூகத்தலைமை மூன்றுமே அவர்களிடம்தான். அவர்கள்தான் எண்ணிக்கையில் பெரும்பான்மை என்பதனால் ஜனநாயகத்தில் அதுவே இயல்பானது.
ஆனால் அத்தனை களங்களிலும் ஆதிக்கம் கொண்டு சுரண்டும் இடைநிலைச் சாதிகள் தங்களை சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்களாக ஒரு பாவனையை கொண்டுள்ளார்கள். அறிவுஜீவிகள்கூட பொதுவெளியில் அவ்வண்ணம் நடிக்கிறார்கள். அவர்கள் சாதியை கற்பித்ததன் பழியை பிராமணர் மேல் போடுவார்கள். ஆனால் சாதியை தங்கள் அடையாளமாகவும் வைத்திருப்பார்கள். அதைக்கொண்டே அதிகாரத்தையும் அடைவார்கள். இந்த முரண்பாடு பற்றி இங்கே பேசப்படுவதே இல்லை.
இங்குள்ள இடைநிலைச் சாதி அரசியல் இருமுகம் கொண்டது. ஒரு பக்கம் அது பிராமணர்களிடம் நீங்கள்தான் சாதியைக் கற்பித்தீர்கள் என்று சொல்லி இழித்தும் பழித்தும் ஒடுக்க முயல்கிறது. இன்னொரு பக்கம் அது தலித்துக்களிடம் உங்களிடமிருக்கும் குறைந்த பட்சக் கல்விகூட நாங்கள் போட்ட பிச்சை என்கிறது. தமிழக இடைநிலைச் சாதியினர் எந்தக் காலகட்டத்திலும் தலித் விடுதலைக்காக ஏதும் செய்ததில்லை, அவர்கள் போராடியதெல்லாம் தங்களுக்காக மட்டுமே. தலித்துக்களுக்கான இட ஒதுகீடு, கல்வி முதலியவை பெரும்பாலும் இங்கே பிராமணர் உட்பட முற்போக்கு எண்ணம்கொண்ட சில உயர்சாதியினரின் பங்களிப்பால் அமைந்தவை. அந்த வரலாற்று உண்மை இந்தப்பேச்சால் மறைக்கப்படுகிறது.
சாதிபற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் இங்கே அப்பேச்சுக்கள் எழுந்த சென்றநூற்றாண்டின் வரலாற்றுப் புரிதலின் அடிப்படையில் அமைந்தவை. அதற்குப்பிந்தைய வரலாற்றுக்கொள்கைகள், சமூகவியல் கொள்கைகளை கருத்தில் கொள்ளாதவை. மிகமிக உள்நோக்கம் கொண்டவை. அரசியல் உள்நோக்கம், அதற்குள் தன் சாதி- மதம் சார்ந்த உள்நோக்கம்.
இக்கட்டுரைகள் வெவ்வேறு காலகட்டங்களில் சாதி குறித்து என் வாசகர்கள், நண்பர்களுடன் நிகழ்ந்த உரையாடல்களின் தொகுப்பு. ஓர் அறிவார்ந்த உரையாடலுக்கான அடிப்படையாக இவை அமையலாம். இதை நண்பர் மயிலாடுதுறை பிரபுவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெ
***