யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’- அனங்கன்

கானல் நதி- வாங்க

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

சூடுவதற்க்காக பூப்பதில்லை எல்லா மலர்களும்
நாவில் கரையவென்று கனிவதில்லை எல்லா கனிகளும்
எந்த நதியின் நீரும் மொத்தமாய் சென்று சமுத்திரம் சேர்வதில்லை
பாடப்படாத சங்கீதத்திற்கு ஈடு இணையும் இல்லை.

இந்த நான்கு வரிகள் தான் யுவன் சந்திரசேகரின் “கானல் நதி” நாவல்.ஜெயமோகன் அரசியலே அற்ற எழுத்து அவருடையது என்று சொல்லிருந்தார். அவர் எழுத்தை வாசிக்கும் அனைவரும் உணரக்கூடிய ஒன்று இது. நானூறு பக்கம் இருக்கும் இந்த நாவலில் எந்த விதமான ஒரு எதிர் குரல் கூட எனக்கு கிடைக்கவில்லை.  இத்தனைக்கும் தன் இசை வாழ்க்கை, உலகியல் வாழ்க்கை என்று அனைத்துவகையிலும் வெற்றியே அற்றவனாக இருக்கும் மையபாத்திரம் தான்  தனஞ்சய் முகர்ஜி.

நாவலுக்குள் ஒரு நாவல் கதாபாத்திரமாகத்தான் தனஞ்சய் முன்னுரையுடன் அறிமுகமாகிறார். நாவலின் ஒளியாலான தனஞ்சயின் பால்ய காலம் நமக்குள்ளும் பைரவியாக பொழிகிறது. வங்காளத்தின் மாமுட்பூர் கிராமத்தில் காரி நதியும் நெல் வயலும் கடுகு பயிர்களும் பரந்த விரிந்த உருளைக் கிழங்குச் செடியும் வீரேஸ்வர் கோஸ்வாமியின் நந்தவனமும் கால்பந்து மைதானமும் என்று  சுதந்திரத்திற்கு பின்னான வங்காள கிராமம் நமக்குள் விரிகின்றது. இசை தனஞ்சயில்  இயல்பாகவே இருக்கிறது. வேப்பமரத்தில் காற்று வீசுவது போல இயல்பாகவே இசை அவனிடத்தில் இருக்கிறது. இசையை பெண்ணாக கண்டுகொண்டனோ என்று தோன்றுகிறது. அன்னை ஜயா, அத்தை மித்தாலி , ஸரயு , சண்டாளியான காஞ்சனா தேவி , அனைவரும் அவனுக்கு இசையே, இந்த வழியாக அவன் தன் குரு பிஷ்னுகாந்தை ஒர் அன்னையாக உணர்வது அவன் அடையும் தரிசனம்.  சாஸ்திரிகள், இசையை தனஞ்சயனுக்கு கனிவுடனும் பாசத்துடனும் நீட்டிய கரம், அவன் அடைந்த பேரருள். அது அவனுடன் கடைசி  வரைக்கும் உடனிருந்தது. என்றுமே இசை அவனுக்குள் பெண்ணாகவே எழுந்து வருகிறது. பால்யத்தில் அன்னையாகவும், வாலிபத்தில் ஸரயுவாகவும் முகம் சூடியபடி இசை அவனை இழுத்து சென்று கொண்டே இருக்கிறது . முகங்கள் வழியாக அவன் முகமற்ற இசை சாந்நித்யமே அனல் வடிவமாக உருமாறிய முகத்தை சென்றடைகிறான். அனல் வடிவ ரூபத்திற்கு பதில் வேறொரு முகம் அவன் அடைந்திருந்தால்,  காற்றடிக்கும் போது கம்பத்தில் கட்டப்படாமால் விட்ட கொடிதுணிபோல் நழுவி பறந்திருக்க மாட்டான்.

ஆண்களுடன் என்றுமே இசைந்து வாழமுடியவில்லை தனஞ்சயனுக்கு. தந்தை இசை வந்தவுடன் அன்னியமாகிறார் ,அண்ணன் சுப்ரதோ இவனிடம் என்றும் நெருங்கவே முடியாத  வஞ்சத்துடன் இருக்கிறான் . குருசரண் தாஸ் அவன் புரிந்துகொள்ள முடியாத, வென்று மேலேறி செல்ல முடியாத உலகியல் முகமாகத்தான் தெரிகிறான். குருசரண் காட்டும் அன்பும் அரவணைப்பும் தனக்கு தேவை பட்டாலும் அதில் சகஜமாக இருக்க முடியவில்லை. அவனால் எப்பொழுதெல்லாம் குருசரணை குத்திகிழிக்கமுடியுமோ அப்பொழுதெல்லாம் அதை தன்னியல்பாக செய்கிறான். குரசரண் தாஸ் என்றும் தனஞ்சயன் ஏங்கும் சமநிலையுடையவன், உலகியலை வென்று மேலேருபவன் தன்னை பலவிதமாக பகுக்கத்தெரிந்தவன், இசையுடன் இச்சமநிலைத் தான் தனஞ்சயன் தேடிக் கொண்டிருந்தானோ என்னவோ.

ஸரயு தனஞ்சனுக்கு கனவின் இசை பூபாலி . பால்யத்திலிருந்து அவன் தன்னுள் வளர்த்தெடுத்த ஆனந்தத்தின், வாலிபத்தின், காமத்தின் இசை. இசையில் ஸ்ருதி சேராதது போல் அவளுடனான அவன் வாழ்க்கை அபஸ்வரமாகிவிட்டது. அவள் ஒர் இடத்தில் நிராகரிக்கவே செய்கிறாள் இவனை,   இவன் எந்த அளவு உலகியலில் வெற்றியடை முடியும் என்று அவள் உள்ளூர சந்தேகித்துக் கொண்டுதான் இருக்கிறாள். தனஞ்சயனுக்கு அவள் கிடைக்கவில்லை என்பதை அவனுடைய உலகியல் தோல்வியாகத்தான் எடுத்துக்கொள்கிறான். அவளை கடைசிவரை அனுபவிக்காமல் இருந்து முட்டாளாக இருந்ததற்கு வருத்தமடைகிறான். மீண்டும் அவளை வேசியாகப் பார்க்கும் போது உள்ளூர மகிழ்ந்து அவளுக்கு வாழ்க்கை தர முன் வந்த போதிலும் அவள் மீண்டும் அவனை கையாலாகதவனாகவே பார்த்து வசை பொழிகிறாள். அந்த கனவின் இசை முகத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியாமலேயே போகிறது தனஞ்சயனுக்கு.

தன்னை மீண்டும் வாழ்க்கையில் பொருத்திகொள்ள முயற்சி செய்கிறான். பிபாஸ் ராகத்தின் அலைக்கழிப்பின் உச்சியில் அன்னையும் தந்தையும் காண தன் ஊருக்கு போகும் தனஞ்சயன், தன்னுடைய சுழியில் அவர்களையும் இழுக்க மனமில்லாமல் ஊரை விட்டு கிளம்பிப்போகிறான். விஷ்ணுகாந்த் சாஸ்த்திரியின் வீட்டின் முன் சில நிமிடம் நின்று சென்றுவிடுகிறான். அவன் ஒரு வேளை உள்ளே நுழைந்திருந்தால் அவனின்  வாழ்வு வேறுவிதமாக மாற வாய்ப்பிருக்கிறது. அவன் இசை மூலமாக சென்றடைய வேண்டிய எல்லை ஜனாப் அஸ்லாம் கான். ஆனால் கசப்பின் மூலமாகவும் கழிவிரக்கத்தின் மூலமாகவும் சென்றடைகிறான். அனைவரிடத்திலும் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் அன்பு காட்டும் அஸ்லாம் கானை தன்னில் கண்டடைந்தவுடன் தன் இறுதியை அடைகிறான் தனஞ்சயன்.

ஆம் பாடப்படாத சங்கீதத்திற்கு ஈடு இணையும் இல்லை.

அனங்கன்

யுவன் சந்திரசேகரின் ‘கானல்நதி’- கலைச்செல்வி

கானல் நதி – மதுரைவாசகன்

முந்தைய கட்டுரைபொன்னியும் கோதையும்
அடுத்த கட்டுரைசாதி ஓர் உரையாடல்