கோவை ஞானியை நான் என் ஆசிரியர்களில் ஒருவராகச் சொல்லிவந்திருக்கிறேன். ஏறத்தாழ முப்பதாண்டுகளாக, எல்லா பேட்டிகளிலும் நூல்களிலும். அவரும் எங்கும் எவரிடமும் என்னைப் பற்றிச் சொல்லாமலிருந்ததில்லை. என் பொருட்டு ஒரு பெருமையை அவர் வெளிப்படுத்தாமலும் இருந்ததில்லை.
திட்டவட்டமான மார்க்சிய நோக்கு கொண்டவர் ஞானி. மார்க்ஸிய அறிஞர், பண்பாட்டுச்செயல்பாட்டாளர் என்பதே அவருடைய வரலாற்று இடம். நான் மார்க்ஸிய அரசியலை, அழகியலை எவ்வகையிலும் ஏற்றுக்கொண்டவன் அல்ல. ஆனால் மார்க்ஸிய வரலாற்றாய்வுக்கோணம் நவீனமானது, பல கூறுகளை தொகுத்து முழுமைநோக்கை அளிப்பது என்று நினைப்பவன். அதன்மேல் என் பண்பாட்டுப்பார்வையை, தனிமனிதனின் ஆன்மிக மீட்பு பற்றிய புரிதலை அமைத்துக்கொள்பவன்.
ஞானி என் பார்வைகளை ஏற்றுக்கொண்டவர் அல்ல. எல்லா இடங்களிலும் என் பார்வையை திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் என்னை தமிழின் முதன்மையான படைப்பாளியாக நினைத்தார். நான் என் பெரிய படைப்புக்களை எழுதிய பின்னர் அல்ல. எழுதத் தொடங்கியபோதே அவர் என்னை அவ்வண்ணம் கணித்தார். அதை திட்டவட்டமாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.என் ஆரம்பகால கதைகளை வெளியிட்டு என்னை அறிமுகம் செய்தவர் ஞானி. இறுதிவரை என்னை முன்வைத்தவர்.
இவ்வண்ணம் ஓர் உறவு பண்பாட்டுச் சூழலில் சாத்தியம் என்பதை எளிமையான ஒற்றைப்படை அரசியல் உள்ளங்களால் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் ஞானியை இதன்பொருட்டு வசைபாடியும் அவதூறு செய்தும் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். ஞானி தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டதில்லை. எதிர்காலத்தில் இலக்கியத்தால் மட்டுமே உருவான இந்த உறவு பேசப்படும் என்றே நான் நினைக்கிறேன்.
ஞானியுடன் என் உறவு என்பது முழுக்க முழுக்க இலக்கியம்- வரலாறு சார்ந்தது. தனிப்பட்ட பிரியம் இருந்தது. ஆனால் அவருடைய குடும்பம், தனிவாழ்க்கை பற்றி எதுவுமே தெரிந்துகொள்ளவில்லை. அவருடனான உரையாடல்களே அவர் குறித்த என் நினைவுகள். ஆகவே இந்நூலில் அவருடன் என் உரையாடல் சார்ந்த சித்திரம் மட்டுமே உள்ளது
அவரை அவருடைய உரையாடல்கள் வழியாக தொகுத்துக்கொள்வதை, வகுத்துக்கொள்வதை இந்நூலில் செய்திருக்கிறேன்.இத்தகைய ஒரு நூல் எந்த எழுத்தாளனும் தன் ஆசிரியனைப் பற்றிச் செய்யவேண்டியது. இது ஓர் எளிய கடமை.
இந்நூலை பிரியத்திற்குரிய கல்பற்ற நாராயணன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெ
***