ஞானி நினைவுகள் – மீனாம்பிகை

ஞானி நூல் வாங்க

2013-ல் நான் என் முகநூல் நண்பரான யுகமாயினி சித்தன் அவர்களை நேரில் சந்தித்தேன். என்னுடைய குடியிருப்புப்பகுதியில் வசித்தார். சில நாட்கள் மாலை நடை சேர்ந்து போவதுண்டு. அவர் அப்போது பகிர்ந்துகொள்ளும் எழுத்தாளர்கள் ஒரு கருத்தியல் சார்ந்து இயங்கியவர்கள். என் இளமை முதலே நான் எதையாவது வாசித்துக்கொண்டிருந்தாலும் வாசிப்பு என்பதே எனக்கு அதிலுள்ள தகவல்களை, மனித இயல்பை, அகத்தை அறிந்து கொள்ளும் ஒன்றாகவே இருந்தது, அதற்கப்பால் இருந்த கருத்தியல்கள் நிலைபாடுகள் எனக்கு அந்நியமாக இருந்தன. காதல் போல ஈர்ப்பும், விலக்கமுமாக அறிந்து கொள்ள விரும்பியும், புதியவற்றின்மீது சலிப்புமாக தொடர்ந்து வாசித்துக் கொண்டும் இருந்தேன்.

இணைய வழி வாசிப்புகளின் அறிமுகம் இருக்கவில்லை. வாசிப்பதை வகைப்படுத்திக் கொள்ளவும், அதன் நுட்பங்களை அறிந்துகொள்ள வழிப்படுத்தும் ஆசிரியர்களை கண்டடையவும் இல்லை. ஜெயமோகன் என்ற பெயர் முகநூல் வம்புகளில் கண்டிருந்தாலும் அத்தகைய விவாதங்களில் ஈடுபாடற்றிருந்ததனால் அவற்றின் பின்சென்று அது என்ன என்று படிக்கவும் இல்லை. முழுநேர வேலையை விட்டபின் எப்படி வாசிப்பது என்றும் எதை வாசிப்பது என்றும் பள்ளிக்கூடம் போல எவரிடமாவது முறையாகப் பயில வேண்டுமென்ற ஆவல் எழுந்தது.

முகநூல் வழியாக அறிந்த பொன் இளவேனில், இளஞ்சேரல் ராமமூர்த்தி அவர்கள் நரசிம்மலுநாயுடு பள்ளியில் நடத்திக்கொண்டிருந்த மாதாந்திர இலக்கியக்கூட்டத்திற்கு 2012-ல் சென்றேன். என்னுடைய முதல் இலக்கியக்கூட்டம் அது. இன்று நான் அறிந்த பல நண்பர்களை அன்றுதான் சந்தித்தேன். அந்தக்கூட்டங்களுக்கு அப்போது ஞானி வந்து கொண்டிருந்தார். அன்று தமயந்தி என்பவர் சிறப்புப் பேச்சாளர். தன்னை எழுதக்கூடாது என்று தன் வீட்டினர் விரல்களை ஒடித்ததைப்பற்றி அவர் சொன்னதும் இடைமறித்து ஞானி “எந்த வயதில்?” என்று கேட்டார். அவர் பத்தாவது படிக்கும்போது என்று சொன்ன நினைவு. அந்தக்கேள்வியும் அதன் பின் வந்த அமைதியும் அவர் என்ன எண்ணுகிறார் என்று புரியாமல் மயங்கச்செய்திருந்தன. அதே கூட்டத்தில் நாஞ்சில் நாடனும், ஃபிர்தௌஸ் ராஜகுமாரனும் பேசினார்கள். எனினும் எவரையும் சந்தித்து அறிமுகப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு வாசித்திருக்கவில்லை என்று எண்ணியதால் அருகில் சென்று பேசவில்லை.

ஒருமுறை மாலை நடையில் சித்தனிடம் பேசும்போது அவர் மறுநாள் ஞானியை சந்திக்கப் போவதைப் பற்றிச் சொன்னார். நான் ஞானியின் அருகில் இருந்தால் அல்லது அடிக்கடி சந்தித்தால் எதையாவது கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அவரைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். அவர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தவர் என்பது எனக்கு ஆறுதலான தகவலாக இருந்தது. சித்தன் அழைத்துச் செல்வதாகச் சொன்னார்.

மறுநாள் கிளம்பியபோது ஒரு எழுத்தாளரை, ஒரு முதியவரை சென்று பார்க்கப் போகிறேன் என்ற பதற்றம் மட்டுமே இருந்தது. எவ்வகையிலும் அவரிடம் உரையாடும் அளவுக்கு எதையும் வாசித்திருப்பதாக நான் எண்ணவில்லை. இருப்பினும் ஓர் ஆர்வத்தில் கிளம்பியிருந்தேன். இருவரும் பேருந்தில் ஏறி அவரது குடியிருப்புப்பகுதியில் இறங்கினோம். மேடும் பள்ளமுமான மழைநீர் தேங்கி நின்றிருந்த மண் சாலையில் நடந்து இரண்டு திருப்பங்களுக்குப்பிறகு அவர் வீட்டை அடைந்தோம்.

வாசலில் செருப்புச் சத்தத்தை அவர் கேட்டிருக்கவேண்டும். உள்ளறையிலிருந்து மிக மெலிதாகக் குரல் கொடுத்தார். செருப்பைக் கழற்றியபடி சித்தன் பதில் சொன்னார். அன்று அவர் மட்டும் தான் வீட்டிலிருந்தார். வாங்க என்றழைத்தபடி உள்ளிருந்து எழுந்து முன் அறைக்கு வந்தார். தூய வெண்ணிற சட்டை வெண்ணிற வேட்டி அணிந்திருந்தார். ஒடுங்கிய உடல். சிந்தனையா, புன்னகையா என்று வகைப்படுத்திக்கொள்ள இயலாத முகம். அவரது துணைவியார் மறைவுக்குப்பின் மனம் நலிந்திருக்கிறார் என்று சித்தன் சொல்லியிருந்தார். நலம் விசாரித்தபின் ஞானி அவரை நாற்காலியில் அமரும்படி நாற்காலி இருந்த திசையில் கைகாட்டினார். அங்கு நான்கு ப்ளாஸ்டிக் நாற்காலிகள் இருந்தன. நான் வேகமாக உள்நுழைந்து அந்த நாற்காலிகளை எடுத்துப் போடப்போனபோது சித்தன் என்னை மெதுவாக அவர் கைகாட்டிய இடத்தில் போடும்படி சொன்னார். மெல்ல நடந்து அவற்றில் ஒன்றில் நாற்காலியின் கைபற்றி ஞானி அமர்ந்தார். அவருக்கு அருகில் அமர்ந்தபடி சித்தன் என்னை அறிமுகப்படுத்தினார். நான் கைகூப்பி வணக்கம் சொன்னேன்.

“நீங்களும் மீனாவா?” என்று ஞானி சிரித்தார். அவருடைய உதவியாளர் பெயரும் மீனா என்று அறிந்தேன். சித்தன் என்னை அவர் கைகளைப் பற்றும்படி ஜாடை காட்டினார். நான் அப்போதுதான் அவர் அந்த உணர்தலின் வழியாகவே அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் என்று உணர்ந்து திகைத்தேன். அருகில் சென்று என் கைகளை அவர் கையின் மேல் வைத்தேன். அவர் தன் இன்னொரு கையை என் கைகளின் மேல் வைத்தார். மிக மென்மையான வெம்மையான கைகள், சிறுகுழந்தையின் கைகள் போல. என் முரட்டுக் கைகளைப்பற்றிச் சற்று வெட்கமடைந்தேன். “உக்காருங்கம்மா” என்று சொன்னார். “கீழ உக்காந்துக்கறேன்” என்று அமரப்போன என்னை நாற்காலியில் அமரும்படி மீண்டும் சொன்னார். அங்கு புழங்குவதன் அச்சம் மீதூற நாற்காலியில் அமர்ந்தேன்.

என்னுடைய வேலை படிப்பு குடும்பம் பற்றி மெல்லிய குரலில் கேட்டார். என் வாசிப்புப் பற்றிக் கேட்டார் நான் பாலகுமாரனை ஜெயகாந்தனை அசோகமித்திரனை வாசித்திருந்தேன், சொன்னேன். சில கவிஞர்கள் முகநூலில் படித்தவர்களை சொன்னேன். அவருடன் அன்று நான் எதுவும் சரியாக உரையாடவில்லை. அன்று பாலகுமாரன் என்னுடைய பிடித்த எழுத்தாளராகவும் ஜெயகாந்தன் பிடித்தவராக, புதிரானவராகவும் இருந்தனர். அந்த வாசிப்புகளின் மீதான என்னுடைய அறிதல்களை வரையறுத்து அவரிடம் சொல்ல எனக்குத் தெரியவில்லை. சித்தன் அவரிடம், தான் கொண்டு வந்திருந்த காகிதங்களை படித்துக்காட்டி விவாதித்துக் கொண்டிருந்தார். அது இலக்கியம் சார்ந்ததாக இருந்தாலும், அரசியல் விவாதம் போல எனக்குத் தோன்றியது. எஸ்.பொ என்கிற பெயரை அங்குதான் கேட்டேன்.

நாங்கள் சென்று அமர்ந்த முன்னறையில் ஒரு உணவருந்தும் மேசையும் நாற்காலிகளும் இருந்தன. அவ்வறையில் கட்டப்பட்ட கொடியில் அவரது உலர்ந்த துணிகள் போடப்பட்டிருந்தன. அவரது அந்நிலையில் அந்த வெண்ணிற துணிகளை அணிவதும் அதை அவ்விதமே பேணுவதும் வியப்பாக இருந்தது. மேசையின் இறுதியில் சமையலறை. முன்னறையின் வலதுபுறம் திரும்பினால் ஒரு படிப்பறை இருந்தது. அதில் மரத்திலும் இரும்பிலுமான அலமாரிகள் முழுக்க புத்தகங்கள் நிறைந்திருந்தன. தரையிலிருந்து இடையளவு உயரத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. படிப்பறை நடுவில் மேசை போடப்பட்டிருந்தது. அதன் இருபக்கமும் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேசைமீது அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் இருந்தன, பாதி வேலை செய்து எழுந்து போகும்போது வகைப்படுத்தி எடுத்து வைத்தவை போல. ஷெல்புகளுக்கும் மேஜை நாற்காலிகளுக்கும் இடைப்பட்ட இடங்கள் முழுக்க தரைமீது புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. பெரிய புத்தகங்களினாலான அடுக்கு இடைவரை இருந்தது. சிறிய புத்தகங்களின் அடுக்கும் முழங்காலுக்கும் மேல் வந்தது. புத்தகங்களாலான ஒரு குளம் நடுவே இடம் தெரிந்து போடப்பட்டவை போல மேஜை நாற்காலிகள் அமைந்திருந்தன.

அவர்களின் உரையாடல் முடிந்து கிளம்பும்போது அவரது உதவியாளர் விடுப்பு எடுக்கும் நாட்களில் நான் வந்து அவருக்கு பத்திரிக்கைகள் படித்துக்காட்ட விரும்புகிறேன் என்று சொன்னேன். எப்படியும் படித்துக்காட்டும்போது அவர் அதைப்பற்றிப் பேசுவார் என்றும் எனவே எனக்கு இலக்கியம் புரிய வாய்ப்பிருக்கும் என்றும் எண்ணினேன். நான் சொன்னதும் “அவர் உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நீங்கள் அவ்வளவு தூரத்திலிருந்து இங்கு இதற்காக வரவேண்டும்” என்றார். நான் மீண்டும் வற்புறுத்தியபின் சரி என்றார். என் குரல் அவருக்குப் பிடித்திருந்தது என்று சொன்னார். அவரை இணக்கமானவராக உணர்ந்தேன்.

சில நாட்கள் கழித்து மீனா, தான் ஒரு நாள் விடுப்பு எடுப்பதாகவும் அன்று நான் வரமுடியுமா என்றும் போனில் கேட்டார். சிறு பதற்றத்துடன் வருகிறேன் என்று சொன்னேன். என் வீட்டுக்கும் அவரது வீட்டுக்கும் 10.கி.மீ தூரம். என்னுடைய டி.வி.எஸ் 50 வண்டியில் கிளம்பி கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கழித்து சென்று சேர்ந்தேன். (அப்போதுதான் வண்டி ஓட்டப் பழகியிருந்தேன்.) நான் சென்றபோது அவர் மட்டுமே இருந்தார். நான் வாசலில் நின்று வணங்கி வந்துவிட்டதைச் சொன்னேன். கைகளைப்பற்றி வரவேற்றார். அன்று ஹாலிலேயே அமர்ந்து படித்தோம். அவரது படிப்பறையில் முந்தின நாள் வேறு வேலைகள் செய்து கொண்டிருந்ததை மீனா அப்படியே விட்டுச்சென்றிருந்தார். அதைக்கலைக்க வேண்டாம் என்று ஹாலிலேயே அமர்ந்தோம்.

அன்று வந்திருந்த பத்திரிக்கைகளையும் முந்தின நாள் மீனா எடுத்து வைத்திருந்த புத்தகங்களையும் எடுத்து வைத்தேன். அவர் என்னை முதலில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்படி சொன்னார். சற்று நேரத்தில் அவர் அமர்ந்திருந்த நாற்காலி அருகில் தரையில் அமர்ந்தேன். நாற்காலியில் அமரச்சொல்லி வற்புறுத்தினார். எனக்கு தரை வசதி என்பதால் தரையில் அமர்ந்தேன். நான் தலைகுனிந்து படிக்க அவருக்கு அது சரியாகக் கேட்காமல் பிறகு அவருக்கு என் குரல் கேட்கும்படி உயரத்தில் அமர்ந்தேன். அவரே ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து படிக்கும்படி சொன்னார். நான் புத்தகத்தை எடுத்து முதல் கட்டுரையின் முதல் பக்கத்தை படிக்கத் துவங்கியதும் என்னைத் தடுத்து அது எந்தப் பதிப்பகம் என்றும் யாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்று விவரங்களையும் படிக்கச் சொன்னார். நான் படிக்கத் துவங்கியதும் “மெதுவாக நிறுத்திப் படிங்க” என்றார். மிக மெதுவாகப் படித்தபோது  “இப்படி இல்ல…” என்று சொல்லி திருத்தினார். நான் பதறிய குரலில் வாசிக்க என்னை சமனப்படுத்தினார்.

ஹாலில் நாற்காலியில் அமர்ந்து நான் படிப்பதைக் கேட்கும்போது தரையைப் பார்த்தபடி முன்சாய்ந்து அமர்ந்து காதைச் சற்றே சரித்துக் கேட்டுக்கொண்டிருப்பார். கைகள் இரண்டையும் நாற்காலியின் கைப்பிடியில் வைத்தபடி அல்லது ஒற்றைக்கையை மடக்கித் தாடையில் வைத்தபடி கேட்டிருப்பார். அப்படி அமர்ந்திருக்கையில் அவருடைய முகபாவனைகளை நாம் முழுவதும் பார்க்க முடியாது. சற்றே அருகமர்ந்து முன்சாய்ந்து அமர்ந்திருக்கும் அவர் முகத்தை நாம் பார்க்கலாம். ஆனால் எப்போதும் நாம் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே நம்முடைய அசைவுகளைத் தீர்மானிக்கிறது. அவரிடமும் கூட அவர் நம்மைப் பார்ப்பதில்லை என்பதை மறந்துவிடுவேன். எனவே பார்வையுடையவர்கள் முன்பு எப்படி நடந்து கொள்வேனோ அதைப்போலத்தான் நடந்து கொள்வேன்.

அவருக்காக மேசையின் ஃப்ளாஸ்கில் மூன்று டம்ளர் பாலும் சர்க்கரையும் இல்லாத காபி வைக்கப்பட்டிருந்தது. அதைத் தனக்கு ஒரு டம்ளரில் ஊற்றித் தருமாறும், எனக்கு மேசை மேல் இருந்த சர்க்கரையை கலக்கிக் கொள்ளும்படியும் சொன்னார். மிக மெதுவாக சுவரைப்பிடித்தபடி நடந்து உள்ளறைக்குச் சென்று வந்தார். விழியற்றவரின் உலகத்தில் வேறு துணைகளின்றி பொருந்த முடியாத பதற்றம் எனக்கு இருந்தபடியே இருந்தது.

பிறகு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தார். முகநூல் பற்றி பேசிய நினைவு. எந்த வகையான எழுத்துக்கள் பதிவாகின்றன என்றும் முகநூலின் சாத்தியங்கள் பற்றியும் பேசிய நினைவு. பிறகு ஒரு கதைப்புத்தகம் படித்தேன். அதுவும் சில அத்தியாயங்கள். அதன்மீதான விவாதங்களென எதுவும் நினைவில்லை. என் மனநிலைக்கு முற்றும் அயலான ஒன்றையே வாசித்துக்கொண்டிருந்தேன்.

மதிய உணவு பற்றி நான் எதுவும் எண்ணியிருக்கவில்லை. நான் வெளியே செல்கிறேன் என்றபோது தடுத்து அவருக்கு வந்திருந்த உணவையே இருவரும் பகிர்ந்து உண்ணலாம் என்றார். எழுந்து சென்று கைகழுவி வந்து நாற்காலி பற்றி அவரே அமர்ந்து கொண்டார். அங்கிருக்கும் பாத்திரங்களில் என்ன உணவு வைக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டார். சாதம், குழம்பு, பொரியல், ரசம் இருந்தது. அவருடனே அமர்ந்து உண்ண வற்புறுத்தினார். நோய் காரணமாக மிகக்குறைவான உணவு உண்டார். அவர் உதவிக்கு ஆட்களில்லாமல் தனியாகத் தானே இவற்றை கையாள்வதைப் பற்றிய எண்ணமும் பதற்றமும் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. உண்டபின் தட்டுகளைக் கழுவ சமையலறைக்குச் சென்றேன். அப்போது அங்கு சமையல் நடக்கவில்லை என்றாலும் நேர்த்தியாக ஒருவர் கையாண்ட அறை என்பது அதன் அமைப்பிலிருந்து தெரிந்தது. சிறிது நேரத்தில் அவர் ஓய்வெடுக்கச் செல்லவும் நான் கிளம்பினேன்.

திரும்பும்போது அவருக்கு உகந்தவாறு அன்றைய நாளை அமைத்துக்கொள்ளத் தவறியதன் குற்ற உணர்ச்சியே இருந்தது. அவருக்கு வாசித்துக் காட்டிய எல்லாமே வெறும் வார்த்தைகளாகவே இருந்தன. ஒரு கருத்தாக எதையும் நான் தொகுத்துக் கொள்ளவில்லை. பிறகு சிலமுறை அழைப்பின் பேரிலும் அழைப்பில்லாமல் நானே அழைத்து அனுமதி பெற்றும் அங்கு சென்று கொண்டிருந்தேன். எதையாவது அடைந்தேன் என்று அல்ல, ஆனால் வெறுமே அவர் அருகே இருக்க விரும்பிச் சென்றேன். ஒரு பெரிய மனிதரை மரியாதை நிமித்தம் சந்திப்பதாகவே அவை அமைந்தன.

பிந்தைய சந்திப்புகளில் அவரது மனைவி பற்றிச் சொன்னார். ‘அவங்க’ என்ற விளியில் தான் பேசினார். அவர் கண்கள் பார்வை குன்றியதைப்பற்றி அவர் மனைவி, அவர் மீது கொண்டிருந்த அக்கறை பற்றி, அவரது பள்ளி நாட்கள் பற்றிப் பேசியது நினைவிருக்கிறது. அவரது முதல் நினைவு நாளையொட்டி வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றை எனக்களித்து அடுத்த முறை வரும்போது அதைப்படித்துவிட்டு என் கருத்தைச் சொல்லும்படி சொன்னார். அவர் தன் சகியாகத் தன் மனைவியை எண்ணியிருந்தார் என்பது அவர் பேச்சில் தெரிந்தது. ஒருபோதும் தன்னிரக்கம் கொண்ட வார்த்தைகளை அவர் சொன்னதில்லை என்று இன்று நினைவுறுகிறேன். சில நேரங்களில் நாம் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்கையுடனே அவர் முகபாவம் இறுகி இருக்கிறதோ என்று நான் எண்ணியிருக்கிறேன்.

கவிதைகள் மீது மிக அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகளை வாசித்துக் காட்டும்போது முகம் மலர்ந்திருக்கும், முகம் பரவசமும் ஆர்வமும் கொண்டதாக இருக்கும். எனக்குப் பிடித்த கவிதைகளையும் அன்று நான் கவிதை என்று எண்ணி எழுதியவற்றையும் அவருக்கு வாசித்துக் காட்டியிருக்கிறேன். அதிலிருந்த உணர்வுகளைப் பற்றி, எழுத நேர்ந்த மனநிலை பற்றி பேசியிருக்கிறார். சாம்ராஜ் எழுதிய ஒரு கவிதை பற்றிச் சொன்னார். என் முகநூல் நண்பர் என்று சொன்னபோது அவரைச் சந்திக்க விரும்புவதாக என்னிடம் சொன்னார். நான் சாம்ராஜிடம் பேசும்போது சொன்னேன். பிறகொருமுறை அந்த சந்திப்பும் நிகழ்ந்தது.

அவர் நாம் படிப்பதற்கு உடனே எதிர்வினையாற்றுபவர் அல்ல. அவர் நாம் வாசிப்பதன்பின் நமது கருத்தென்ன என்றுதான் முதலில் கேட்பார். பிறகு அதைப்பற்றிய அவர் கருத்தை சொல்வார் என்று எதிர்ப்பார்க்கும்போது மேல படிங்க என்பார். அவருக்குகந்த பதிலை அல்லது அவர் பதிலுரைக்கத்தக்க கருத்தை நான் சொல்லவில்லை என்று புரிந்துகொள்வேன். அவருடன் உரையாடும் அளவுக்கு நான் படித்திருக்கவில்லை, அறிந்திருக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருந்தது. ஆனால் அவர் கருத்துக்கு ஒட்டியவர்களை மட்டுமே பாராட்டுவார் என்றும் மற்றவர்களை நிராகரிப்பார் என்றும் என்னுடைய மற்ற நண்பர்கள் சொன்னபோது எனக்கு அது சமாதானமாகவே இருந்தது. அவர் ஒரு விரிந்த நிலையில் அனைத்தையும் ஏற்றுக்கொள்பவரல்ல என்ற எண்ணத்தை அன்று ஏற்படுத்தியது. இன்று ஞானி தொகுப்பை படிக்கையில் அவரை நான் புரிந்துகொள்ளத் தவறியது தெரிகிறது.

அவருக்கு உவப்பான எதையாவது படித்து ஒருமுறையாவது அவரிடம் உரையாட விரும்பினேன். என் தோழி சுஜாதா, தான் வாசித்த ஒரு நாவலைப்பற்றி என்னிடம் பேசினார். நான் அந்த நாவலை அவரிடமிருந்தே வாங்கிப் படித்தேன். அடுத்த முறை ஞானியைச் சந்திக்கச் சென்றபோது அந்த நாவலைப் பற்றிச் சொன்னேன். கொண்டு வந்திருந்தால் வாசிக்கும்படி சொன்னார். அவர் முதல் மூன்று நான்கு பக்கங்கள் வாசிக்கக் கேட்டார். பின்னர் பத்து பக்கங்கள் தள்ளிப் படிக்கும்படி சொன்னார். ஒரு ஐந்து பக்கங்களுக்கு பிறகு மீண்டும் சில பக்கங்கள் தள்ளிப் படிக்க சொன்னார். பிறகு மீண்டும் ஒரு கற்றை தள்ளிப் படிக்க சொன்னார். நாவலின் த்வனி மாறியிருக்கவில்லை. காதலிக்காக ஏங்கும் ஒரு ஏழைப் பத்திரிக்கையாளனைப் பற்றிய கதை. ஓர் இரவில் தான் இருக்குமிடத்திலிருந்து காதலியின் இல்லம் வரை தரையை முத்தமிட்டுக்கொண்டே செல்வதாக அதில் வரும். அத்துடன் அந்த நாவலை நிறுத்தச்சொன்னார்.

“பின்னர் நீங்களும் ஒரு பெண், இந்தக்கதையில் வரும் நாயகியின் இடத்தில் நீங்கள் இருந்தால் இப்படி ஒருவரை நீங்கள் காதலராக ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டார். எனக்குப் பின்னந்தலையில் அடித்தது போல இருந்தது. ஒருபோதும் அப்படி ஒருவரை பொருட்படுத்த மாட்டேன் என்றும் முழுக்க முழுக்க அவரைப் புறக்கணிப்பேன் என்றும் சொன்னேன்.

எனக்கு அது ஒரு திறப்பு. அவரிடம் அன்றுதான் உண்மையில் நான் கற்க ஆரம்பித்தேன் என்று இன்று அறிகிறேன். அதுவரை ஒரு நாவலை என் வாழ்க்கையில் நான் போட்டுப் பார்த்தது கிடையாது. அது எவருடையவோ சாத்தியமான வாழ்க்கை என்ற நிலையில்தான் படித்துவந்தேன். அந்த நாவல் என் அறிதலை எவ்வாறு மேம்படுத்துகிறது என்று எண்ணிப் பார்த்ததில்லை. அதுவரை நான் வாசித்த அத்தனை கதைகளுமே பிறருடையவை, பிறர் வாழ்க்கையில் நடந்தவை. அவற்றை நான் யாரோவாக நின்று அவர்களைப் பார்த்தேன்.

அதற்குப்பிறகு வாசித்த அத்தனை கதைகளுமே என் கதைகள். அவற்றில் நாயகியோ நாயகனோ வில்லனோ அல்லது ஏதேனும் விலங்கோ இருந்தால் கூட அது நானே. கதைசொல்லியும் நானே. வெவ்வேறு வேடங்களை போட்டுக்கொள்வது போல ஒவ்வொரு இடத்திலிருந்தும் அக்கதாபாத்திரத்தின் கருத்துக்களை வகைப்படுத்திக் கொண்டேன். வெளியே நின்று பார்வையாளனாகவும் அதைப் புரிந்துகொண்டேன். ஏதேனும் ஒரு அறிதல் சாராத, உணர்வுகள் மட்டுமே வெளிப்படுத்தப்பட்ட நூல்களைத் தவிர்க்க அந்த உரையாடல் வழியமைத்தது என்று இன்று உணர்கிறேன். அதன் பிறகு நிறைய வாசித்தேன். அவை எனக்குள் புதிய விவாதங்களை தோற்றுவித்தன. அவற்றுடன் பேசிப்பேசி என் அறிதலை மேம்படுத்திக்கொண்டேன். ஏற்கனவே படித்திருந்தவையும் விரியத்தொடங்கியிருந்தன. தனிப்பட்ட முறையில் ஒன்றிரண்டு நண்பர்களுடன் வாசிப்பது பற்றி விவாதித்தாலும் நிறைவுறாமல் சுழன்றுகொண்டிருப்பதும் நிகழ்ந்துகொண்டிருந்தது.

இச்சம்பவத்துக்குப் பிறகு எனக்கு ஞானியைப் புரிந்துகொள்ள முடியும், கற்றுக்கொள்ளமுடியும் என்று தோன்றியது. சில நாள் மீனா இருக்கும் போதே செல்வதுண்டு. ஈஷா பற்றி அவரிடம் சிலமுறை பேசியிருக்கிறேன். அவர்களின் வழிபாட்டு முறைகள் பற்றி அனைவரும் பேதங்களற்ற முறையில் நடத்தப்படுவது பற்றி பேசியிருக்கிறேன். அவர் கடவுள் பற்றி பிறர் எனக்குச் சொன்னது இல்லாமல் நான் உண்மையில் என்ன நினைக்கிறேன், என்ன அறிந்திருக்கிறேன் என்று கேட்டார். என்னுடைய ஒரு அனுபவத்தைச் சொன்னேன். அதையொட்டி என்னுடைய எண்ணத்தையும் சொன்னேன். சிறிது நேரம் அமைதியாக இருந்தார். நான் பேச முற்பட்டபோது தடுத்தார். என் சொற்கள் ஒலித்தபோது தாக்கப்பட்டது போல பதறினார். நான் பேசுவதை அவர் கைநீட்டி தடுத்தபோது அவரது தோல் மயிர்க்கூச்செறிந்திருப்பதைக் கண்டேன். மிக நுட்பமான ஒரு மனநிலைக்குள் சென்றுவிட்டிருந்தார் என்று தோன்றியது. பிறகு சிறிதுநேர அமைதிக்குப்பின் அவரவர் அனுபவங்களை தமக்குத்தாமே மறுதலித்துக் கொள்ள முடியாது. பிற்பாடு அதற்கு அறிவியல் ஏதேனும் பொருள் கொடுப்பினும் இவை அதற்கும் மேல் நிற்கும் என்று சொன்னார்.

இன்று நினைத்துப் பார்க்கும்போது இவ்விரு சந்திப்புகளே மிக முக்கியமான சந்திப்புகளாக என் பொருட்டு, என் கற்றலின் பொருட்டு நினைவு கூர்வனவாக இருக்கின்றன. பிறகொருமுறை நான் வேறு வேலைக்குச்சென்ற பின் அவரைச் சென்று பார்த்தேன். அன்று அவருடைய மகன் பாரி இருந்தார். அவர் அன்று புகைப்படக் கலைஞராக இருந்தார். என்னை ஞானியுடன் நிறுத்தி அவரது படிப்பறையில் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பிக் கொடுத்தார். வேறு ஊர்களுக்கு வேலைக்குச் சென்றதும் என்னுடைய போதாமையின் அளவை உணரத்தொடங்கியதும் அவரைச் சந்திக்க முடியாமலாக்கின. எனினும் முடிந்தபோது போனில் அவரும் பேசுவார், நானும் அழைத்திருக்கிறேன். “இங்க வந்தா வாங்க” என்பார்.

உங்களை வாசிக்கத் தொடங்கியபின் அவரைச் சந்திக்க விரும்பினேன். அப்போது நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். ஒரு வாசகியாக அவரை சந்திக்க உரையாடத் தகுதி கொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். அவருடைய உடல்நிலை காரணமாக எவரையும் அவர் சந்திகாமலாகிவிட்டிருந்தார். அன்று முயன்று சந்திக்காதது இன்று ஒரு இழப்பாக சுமையாகக்கூட என்னுள் இருக்கிறது.

உங்கள் ஞானி தொகுப்பை முழுமையாக இன்று படிக்கையில் என் குலமூதாதை ஒருவரின் இழப்பு போல கனமாக அந்த இழப்பு உள்ளத்தில் படிந்திருக்கிறது. நான் படிக்க அவர் அமர்ந்து கேட்பதும் சிரிப்பதும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. அவருடைய இறப்பு செய்திகேட்டு போனபோதும் மிக சம்பிரதாயமான ஒன்றாக இல்லாமல் எனக்கு அணுக்கமான ஒருவரின் இழப்பாக ஒரு நிஜத்துயரமாகத்தான் அது இருந்தது.

விழாக்களில்  சந்திக்கும்போது கூட கைகளைப்பற்றிக் கொள்வார். இன்று ஆசிரியரென அவரை எண்ணி நெகிழும் இப்பொழுதில் அந்த வெம்மையான மென்மையான கைகள், என் நினைவில் அழுந்தப் பதிகின்றன.

மீனாம்பிகை

ஞானி முன்னுரை
முந்தைய கட்டுரைசினிமாவில் எழுத்தாளன்
அடுத்த கட்டுரைதொழில், இலக்கியம்