ஆலயம் எவருடையது?
நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்
அன்பின் ஜெ
வணக்கம்
மை ஆர் ஒண்கண்ணார் மாடம்
நெடுவீதிக்
கையால் பந்து ஒச்சும் கழி சூழ்
தில்லையுள் (திருமறை 1866.1 -2 )
திருஞானசம்பந்தரின் பாடல் வரிகளை கொண்டே தில்லை நடராசர் கோயிலின் தொன்மையை அறிந்து கொள்ளலாம். அத்தகைய தொன்மையான கோயிலை சோழர்களுக்கு பிறகு பாண்டிய மன்னர்களும் அதன் பிறகு கிருஷ்ணதேவராயரும் அடுத்து நாயக்கர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. யார் யாரெல்லாம் திருப்பணிகள் செய்தார்களோ அதற்கான கல்வெட்டுச் சான்றுகள் இருக்கிறது. நாயக்கர் காலத்தின் போது புராதனமும் தொன்மையும் கலந்த அற்புதமான ஓவியங்கள் கிட்ட தட்ட முழுவதும் அழிந்து விட்டது. காரணம் கோயில் புனரமைப்பு என்று சொல்லப்பட்டது. நந்தனர் வந்த தெற்கு கோபுர வாசலை மேற்பூச்சு கொண்டு பூசி பல நூறு ஆண்டுகள் ஆகிறது. நந்தனார் வழிவந்த வாயிலை மூடிய பழியும் காலம் காலமாக இருந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் சொல்லும் ஆகம விதி இங்கு மீறப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆகிறது. தெற்கு கோபுர வாசலை அடைத்திருப்பதால். நந்தியோடு நடராசனை தரிசிப்பது இயலாத விஷயம். நந்தியை புறம் தள்ளி கோயில் கொடி ஏற்றி திருவிழா காணும் கோயில் தில்லை நடராசர் கோயில் தான்.
செப்டம்பர் 2019 ல் ராஜசபை என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் மரபிற்கு மாறாக வெகு விமர்சையாக தொழிலதிபர் ஒருவரின் திருமணம் நடைபெற்றது. அதுவரை வரலாற்றில் நிகழாத ஒன்று. அதையெல்லாம் தாண்டி இப்பொழுது கோயிலின் நான்கு புறமும் பூங்காக்கள் நீர்வீழ்ச்சிகள் கழிப்பறைகள் என்று கோயிலின் உட்புறமாகவே கட்டுமானங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிக வேகமாக கட்டுமானங்கள் நடைப்பெற்று இருக்கிறது.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வராத கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்பட்டு புராதனங்களை அழிக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் தில்லை நடராசர் கோயில். நீங்கள் இங்கு வரும் போது அதை உணர்ந்து கொள்வீர்கள்.
தொன்மத்தின் பிரமாண்டத்தை அழித்து செயற்கை அலங்காரங்களால் பிரமாண்டப்படுத்திக் கோயிலை வணிக மையமாகும் தனிநபர் குழுக்களிடம் கோயில் நிர்வாகம் ஒரு போதும் சேரக்கூடாது.
இரா. சசிகலாதேவி
***
அன்புள்ள ஜெ.
ஆலயம் சம்பந்தமாக உங்கள் பதிவையும், அதனை தொடர்ந்து வரும் கடிதங்களையும் நான் படித்தேன். நான் சுமார் 30 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இந்தியா வருவேன். சிகாகோ பகுதியில் பல ஆலயங்கள் கட்டப்பட்டு, நன்கு பராமரிக்கப்பட்டாலும் அவை முழுதாக ஆகம விதிகளுக்கு ஏற்ப இருப்பதாக எனக்கு தெரியவில்லை (நீங்கள் சொல்வதை பார்க்கும் போது). உதாரணமாக முக்கால்வாசி கோவில்களில் அங்கு “பேஸ்மென்ட் லெவலில்” கழிப்பறை இருக்கும். ஆனால் அங்குள்ள பழக்கங்களாலும், கூட்டம் குறைவு என்பதாலும் எல்லாம் சுத்தமாகவே இருக்கும். ஆனால் அங்கும் தேவைக்கு அதிகமாகவே ஆலயங்கள் கட்டப்படுகின்றன என்பது என் கருத்து. பணமும் இடம் இருந்தால் இந்துக் கடவுள்கள் அனைத்துக்கும் கோவில் கட்டி முடித்துவிட்டுத் தான் நிற்பார்கள் போல.
நான் நாத்திகன் அல்ல. ஆனால் இந்துக்கள் உண்மையான பக்தியை விட்டு விட்டு சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். இந்தியாவில், கூட்டம் சமாளிக்க வேறு வழியில்லாமல் புதிதாக கட்டுமானம் செய்கிறார்கள் போல. மேலும், இங்கு ஊருக்கு ஒரு கோவில் ஏற்க்கெனவே இருக்க எதற்காக மேலும் மேலும் நினைத்த போதெல்லாம் கிடைத்த இடத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். (பாரம்பரியம் மிக்க பழம் கோவில்கள் கேட்பாரற்று சிதிலமாய் இருக்க). இந்து மதத்தில் ஒரு “சென்ட்ரல் அதாரிடி” இல்லாதது பெரும் குறை என நான் நினைக்கிறேன்.
அது தவிர, இப்போது எல்லாம் பல இடங்களில் சிலை திருட்டு, கடத்தல் எல்லாம் நடப்பது வேதனைக்கு உரியது. என் நண்பர் ஒருவர், சிகாகோவில் கோவில் பராமரிப்பில் பங்கேற்பவர். (சிகாகோ அருகில் அரோரா என்ற நகரில் இருக்கும் ஸ்ரீ பாலாஜி கோவிலை கட்டுவதில் பெரும் பங்கு வகித்தவர் அவர்) அவருக்கு இந்தியாவில் இருக்கும் ஸ்தபதிகளைப் பற்றி நன்கு தெரியும். மிக பிரபலமான ஸ்தபதி ஒருவர் இந்தியாவில் சிலை மாற்றும் விவகாரத்தில் சிக்கிக்கொண்ட போது அவர் சொன்னார் “நாம் தான் சார் சாமி அப்படின்னா பயந்துக்குறோம். அவங்களுக்கு அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார்.”
கோவில்களில் இருப்பவர்களே இப்படி எல்லாம் இருப்பது வேதனைக்கு உரியது தான். சமீப காலமாக செய்தித்தாள்களில் அடிக்கடி வரும் செய்தி “கோவில் நிலங்கள் மீட்டு எடுக்கப்பட்டன.”. மேய்ப்பனிடம் இருந்தே ஆட்டை மீட்டு எடுப்பதும் வேலியே பயிரை மேய்வதும் போன்றதாக இருக்கிறது இது!! கோவில் சொத்துகளை திருடினால் என்ன ஆகும் என யாருமே அச்சம் கொள்வதாக தெரியவில்லை!! “கோவில் சொத்து குலநாசம்” என கதை கேட்பதிலேயே நாம் காலம் போய் விடும் போல.
கோவில்களில் அசுத்தம் பற்றி ஒரு வாசகர் கடிதம் படித்த போது என் மாமன் முறை உறவினர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தன் மகள் வீட்டில் ஒரு ஆறு மாதம் தங்கி பின் இந்தியா திரும்பினார். அப்போது இரவு பல மணி நேரம் சென்னை விமான நிலையத்தில் தங்க வேண்டி இருந்தது.
அவருடன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த சக பயணியர் குடும்பமும் இருந்தது. அந்த குடும்பத்தில் இருந்த சிறுவர்களும் பெரியவர்களும், உணவுப் பொருட்கள் வாங்கி வந்த காகிதம் மற்ற குப்பைகளை உட்கார்ந்த இடத்திலேயே போட்டு அசுத்தம் செய்ய, இவர் கேட்டிருக்கிறார். “என்னங்க அங்க அமெரிக்காவுல எங்க போனாலும் நீங்க குப்பை போடுறது இல்ல, குழந்தைகள் உள்பட; ஆனா இங்க இப்படி பண்றீங்களே”. அதற்கு அவர்கள் சொன்ன பதில் “அட போங்க சார். இது நம்ம ஊரு.”
இந்த மன நிலை எப்போது மாறும்? (ஆனால் சில வருடங்கள் முன்பு நான் சென்னை விமான நிலையம் வந்த போது உட்புறம் சுத்தமாகவே இருந்தது. இந்த மாற்றம் மற்ற கோவில்கள் உட்பட மற்ற பொது இடங்களுக்கும் வரவேண்டும்.
அன்புடன்
மரு.ப.சந்திரமவுலி
***
அன்புள்ள ஜெ
ஆலயங்கள் பற்றிய மிக நீண்ட விவாதம் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம்போல நீங்கள் ஒரு கட்டுரை எழுத, அதை பலரும் பலவாறாகத் திரிக்க, நீங்கள் அழுத்தமான விளக்கங்கள் அளிக்க, அதன்பின் பேச்சே இல்லாமல் அப்படியே அது ஒருவகை ஏற்பைப் பெற்றுவிடுவது நடந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் எல்லாம் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுவது பிழை. இங்குள்ள ஆலயங்களில் மன்னர்களால் கட்டப்பட்டவை மட்டுமே அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. பல்லாயிரம் குலதெய்வ, ஊர்தெய்வ, சாதிதெய்வக் கோயில்கள் தனியார் அறக்கட்டளைகள், அறங்காவலர் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அவையே கோயில்களில் 80 சதவீதம்.
அந்த ஆலயங்களில் என்னென்ன சண்டைகள், வம்பு வழக்குகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்று பார்த்தாலே ‘பக்தர்களிடம் ஆலயங்களை ஒப்படைப்பது’ என்றால் என்ன பொருள் என்று புரியும். தமிழக தனியார் ஆலயங்களின் வழக்குகள் ஆயிரக்கணக்கில் நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக தேங்கிக் கிடக்கின்றன. சண்டை வழக்குகள் இல்லாத தனியார் ஆலயங்களே இல்லை என்பதுதான் நிலைமை.
ஆர்.என்.ராஜ்குமார்
***