ஸ்ரீனிவாச கோபாலன் – கடிதங்கள்

ஸ்ரீனிவாச கோபாலன் பேட்டி

முகம் விருது,ஸ்ரீனிவாச கோபாலனுக்கு

இனிய ஜெயம்

நண்பர் அழிசி பதிப்பகம் திரு ஸ்ரீனிவாச கோபாலன் அவர்ககள் பெறும் முகம் விருதுகான அறிவிப்பைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. செயலை மட்டும் காட்டி முகமே காட்ட மறுப்பவர் ஒருவருக்கு ‘முகம்’ விருது.

குக்கூ அமைப்பினர் இதுவரை முகம் விருது வழியே கெளரவப்படுத்திய ஆளுமைகள் வரிசையில் நிச்சயம் மற்றொரு பெருமிதம் கோபாலன். குக்கூ அமைப்பினரின் இத்தகு முன்னெடுப்பு மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. எவர் எவரெல்லாம் நமது பெருமிதம் என்றும் நமது பதாகை என்றும் உயர்த்திப் பிடிக்கப்பட்ட வேண்டுமோ அவர்களை தேடிச்சென்று, அந்த போதம் கொண்ட சிறுபான்மை சார்பாக இத்தகு விருதுகளை அளிக்கிறார்கள் என்பது கலாச்சார முக்கியத்துவம் கொண்டது.

ஒரு வணிக சினிமா இங்கே எந்த அளவு பேசிப் பேசி உயர்த்திப் பிடிக்கப்படுகிறது, ஒரு அரசியலும் அதன் தலைமையும் எவ்வாறு பேசிப் பேசி பிடிக்கப்படுகிறது. பெரும் பொருட்செலவில் நிகழும் இதில் சினிமா எனில் பணமும் புகழும் உண்டு, அரசியல் என்றால் பேர் புகழ் பணம் அதிகாரம் வரலாற்று தடம் என என்னென்னவோ கிடைக்கும்.

ஆனால் களப்பணிக்கு? இலக்கியத்துக்கு? அரசியல் போல சினிமா போல சேவையில் இலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபடும் பலர் இங்கே உண்டு. பணம் இல்லை புகழ் இல்லை. இலக்கியம் என்றாலோ இன்னும் கீழே, கொள்ஹே யில்  சம்சாரமே இன்றி   வாழும் மடையன் எவனுடைய வசை மட்டுமே கிடைக்கும். இவற்றுக்கு வெளியே இவற்றை செய்வதால் எழும் நிறைவு இவை மட்டுமே இத்தகு ஆளுமைகள் கண்ட மிச்சம்.

இத்தகு சூழலில் தான் தன்னரம் போன்ற நண்பர்கள் முன்னெடுக்கும் இத்தகு விஷயங்கள் முக்கியத்துவம் கொள்கிறது. தன்னரம் நண்பர்களுக்கும் விருது பெறும் நண்பர் ஸ்ரீனிவாச கோபாலன் அவர்களுக்கும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள்.

கடலூர் சீனு

***

அன்புள்ள ஜெ

முகம் விருது வழியாகவே ஸ்ரீனிவாச கோபாலனைப் பற்றி அறிந்துகொண்டேன். இந்தத்தலைமுறையில் அத்தனைபேரும் லௌகீக வெற்றிக்கு பின்னால் வெறிபிடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நானெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போதுகூட இத்தகைய இளைஞர்கள் இருப்பதும், அவர்களை அடையாளம் காணும் இளைஞர் அமைப்புக்கள் இருப்பதும் மிகவும் மனநிறைவையும் நம்பிக்கையையும் அளிக்கின்றது. என் வாழ்த்துக்கள். அவர்களை அடையாளம் காட்டும் உங்கள் தளத்துக்கும் நன்றி

ஜெயராம் ஸ்ரீனிவாஸ்

***

முந்தைய கட்டுரைசீவகசிந்தாமணி- கடிதம்
அடுத்த கட்டுரைராமப்பா கோயில்- ஒரு கடிதம்