தருமபுரி இளவரசனின் மரண புகைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இறந்துவிட்ட மகனின் செருப்பணிந்திருக்கும் காலை நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி அவரது அம்மா அலறுகின்ற புகைப்படம். யார் பார்த்தாலும் பார்க்கின்ற அந்த நொடியில் சாதிய பாகுபாடுகள் மறைந்து, சட்டெனெ ஒரு நொடி மனிதத்திற்குத் திரும்பவைக்கின்ற புகைப்படம். இளவரசனின் மரணத்தின்போது மறக்கப்படுவதற்காகவே மறைக்கப்பட்ட பலவிசயங்களைப்போலவே, மனிதத்தின் அடிப்படைக் கருணைக்குக்கூட யாரும் திரும்பிவிடக்கூடாது என்பதற்காகவே நாளிதழ்களால் புறக்கணிக்கப்பட்ட புகைப்படம்.
அடிப்படையான சமூகநீதி என்பது ஒருவன் மற்றொருவன்மீது காட்டும் கருணையில் இருந்து உருவாகக்கூடாது என்பது என் புரிதல் அல்லது விருப்பம். சமூகநீதி என்பது சமூகமாவதற்கான ஒத்துழைப்பை இரு மனிதர்கள் ஏற்றுக்கொண்டவுடன் இயல்பாக உருவாகவேண்டிய ஒரு விசயமும்கூட.
தாழ்த்தப்பட்டவர்களின் மீதான தண்டனைகளின்போது மட்டும் ஒரு இடைநிலைச் சமூகம் ஏன் குரூர திருப்தியும், சூழல் புனரமைக்கப்பட்டு விட்டதான ஒரு சுயமைதுனத்தையும் மனதுக்குள் நிகழ்த்திக்கொள்கிறது.
இந்த திருப்தி என்கின்ற கண்ணுக்குப் புலனாகாத வஸ்துவை அப்போது அவர்களது மனதில் வேறுவேறு ஊடகங்களின் வழியாக யார் உருவாக்குகிறார்கள் என்கின்ற அரசியலும் மிக முக்கியமானது.
தூக்கில் போடுவதற்கு முன்பான ஒத்திகைக்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதபொம்மை குறித்த ஜெமோவின் கதை “பேசாதவர்கள்” சமீபத்தில் நீலம் இதழில் வந்துள்ளது.
திரும்பத் திரும்ப எவ்வித முகாந்தரமுமின்றி தூக்கில்போடப்படுகின்ற ஒரு பொம்மையின் உடலில் இருக்கின்ற துடிப்பின் கேவல். எந்த கேள்வியும் கேட்காமல் அதனைத் தூக்கில் போட்டு,போட்டு அதன் உறுப்புகளற்ற முகத்தில் வந்துவிடுகின்ற மரத்த தன்மை. சற்றே சில நிமிடங்கள் அதனை வெறுமையாகப் பார்க்கின்ற மனிதன் ஒருவனிடம் அந்த பொம்மை உணர்த்துகின்ற, நானும் ஒரு உயிர்ப்பொருள் என்கின்ற புலன்தொடுகையை அது நிகழ்த்தும்போது அந்த சிறை அதிகாரி தனக்குள் உணர்கின்ற குற்றவுணர்ச்சி எனப்போகின்ற சிறுகதை.
தூக்கில் போடப்பயன்படுத்தும் டம்மி மனிதபொம்மை என்பது நமது சமூக நீதியில் தாழ்த்தப்பட்டவர்களின் இடம் என்பதற்கான துல்லிய உருவகம். சர்வாதிகாரமும், அடக்குமுறையும் லத்தீன் அமெரிக்காவில் மிகுந்திருந்த காலத்தில் அங்கிருந்து எழுந்த பல கதைகள் இதுபோன்ற உருவகங்களின் வழியாக தங்களது சமூகச்சீரழிவை ஆட்சியாளர்கள் அறியாவண்ணம் ரகசியமாக இலக்கியபிரதிக்குள் புதைத்துவைத்து வெளி உலகிற்கு அளித்துவந்திருக்கின்றன என்பதை ஆர்.சிவக்குமார், அமரந்தா மொழிபெயர்த்த பல லத்தீன் அமெரிக்கக் கதைகளின் வழியாக நாம் அறிகிறோம்.
நம் சூழலில் ஜெயமோகன் எதிர்ப்பதற்கோ, ஆதரிப்பதற்கோ முக்கியமான வலுகொண்ட எழுத்தாளர். வெளிவந்து இவ்வளவு நாளாகியும் அவர் எழுதியிருக்கும் இந்த சிறுகதை குறித்து யாரேனும் குறிப்பிட்டிருக்கிறார்களா எனத்தேடி அயர்ந்துவிட்டேன்.
இந்த சிறுகதை மீதான சூழலின் மௌனமும், அமைதியும் கவனிக்கவேண்டிய ஒன்று. பத்து லட்சம் காலடிகளை அவர் எழுதியபோது பெருமிதமும்,காதலுமாக அதனை பகிர்ந்த நல்லுள்ளங்கள் எங்கேயெனத் தெரியவில்லை.
பெருவாரியான சமூகம் தனது எந்த புள்ளியில் ஒருமித்த அன்பையும்,விருப்பையும் அளிக்கின்றதோ,அதற்கு வெளியே யாராலும் கவனிக்கப்படாத மீச்சிறு உலகின் மனிதர்களிடம் செல்வதே கலையின்,கலைஞனின் தன்னியல்பென நான் நம்புகிறேன்.
அவ்வகையில் ” பேசாதவர்கள் ” முக்கியமான சிறுகதைகளில் ஒன்று.
பா.திருச்செந்தாழை [முகநூல் குறிப்பு]