இந்தியாவில் நடந்த அகிம்சைப் போராட்டங்களின் உச்சம் என ஒரு போராட்டம் உள்ளதெனில், அது 1930 முதல் 1934 வரை நடந்த உப்புச் சத்தியாக்கிரகமாகும். முழுமையான வரலாற்றுப் பார்வையும், தகவல்களும் இருந்து, இந்தப் போராட்டம் பற்றி ஒருவர் எழுதினாலும், அது குறைபட்ட சித்திரமாகத்தான் இருக்கும். இந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பதை விடவும் பெரிய இடத்தை, இந்தப் போராட்டம், வருங்கால வரலாற்றில் அடையும். எனினும், இதை மேலும் புரிந்து கொள்ள, 1930 ஆம் ஆண்டு போராட்டம் பற்றிய இரண்டு செய்திக் குறிப்புகளை இங்கே தருகிறேன் (ரிச்சர்ட் பார்லெட் க்ரெக்)
வெப் மில்லர் என்னும் முக்கியமான பத்திரிகையாளர், நியூயார்க் டெலிகிராமுக்காக அனுப்பிய நீளமான பத்திரிக்கைக் குறிப்பின் ஒரு பகுதியை மட்டும் இங்கு பார்க்கலாம், பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரை விடவும், அமெரிக்கப் பத்திரிக்கையாளர், நடுநிலையாகவும், முழுமையாகவும் இந்தப் போராட்டத்தைப் பற்றிய செய்திகளைத் தருவார் என்பது என் நம்பிக்கை. எனவே நான் வெப் மில்லரின் செய்திக் குறிப்பைத் தருகிறேன்.
தரசானா கேம்ப், சூரத் மாவட்டம், பம்பாய் மாநிலம் மே-22 (தபால் வழியாக)
நேற்று, காவலர்களின் கடுமையான கட்டுப்பாடுகளை மீறி, 2500க்கும் மேற்பட்ட காந்தியத் தொண்டர்கள், தரசானா உப்பளங்களுக்குள் செல்ல முயன்ற போது, நம்பவே முடியாத சம்பவங்களைக் காண நேரிட்டது.
இன்று வெளியான, அரசாங்க அறிவிப்பு, சுமார் 170 பேர் காயமுற்றார்கள்; அவர்களில், சிலர் படுகாயமுற்று கவலைக்கிடமாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சி அளித்த தகவல் சொன்னதாகக் குறிப்பிடுகிறது.
நேற்று மதியம், காங்கிரஸ் கட்சி அமைத்திருந்த தாற்காலிக மருத்துவமனைக்குச் சென்று, காயமுற்றவர்களைக் கண்டேன்.. எனது எண்ணிக்கையின் படியே, 200 க்கும் அதிகமானோர் காயமுற்று அங்கே வரிசையாகப் படுத்திருந்தார்கள்.. காயமுற்றோரின் எண்ணிக்கை 320 என, சில பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
வன்முறைக்குப் பதில் வன்முறை எனப் போர்களையும், கலவரங்களையும், பார்த்துப் பழகிய மேற்கத்திய மனநிலைக்கு, நேற்று தரசானவில் நடந்த அகிம்சை மறியல், குழப்பமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. நூற்றுக்கணக்கான அடிகள் அகிம்சைப் போராட்டக்காரர்கள் மீது வீழ்ந்தன.. ஆனால், போராட்டக்காரர்கள், ஒரு அடி கூடத் திருப்பி அடிக்கவில்லை.
காந்தியத் தொண்டர்கள், காந்தியின் அகிம்சைப் போராட்ட விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடித்தார்கள். தன் மீது விழும் அடிகளைத் தடுக்கக் கூட, அகிம்சைப் போராட்டக்காரர்கள், தங்கள் கைகளை உயர்த்தவில்லை. காவலர்களால், அடித்து வீழ்த்தப்படுகையில், அவர்களிடமிருந்து அலறல்கள் கேட்கவில்லை.. காவலர்களின் வன்முறைக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்ட உடல்களில் இருந்து முனகல்கள் மட்டுமே கேட்டன.
அகிம்சைப் போராட்டக்காரர்களின் நோக்கம், காவலர் தங்கள் மீது வன்முறைத் தாக்குதலை நிகழ்த்தத் தூண்டுவதாகவே இருந்தது. காவலர்களின் அச்சுறுத்தலைக் கண்டு கலைந்து போகாமல், உப்பளங்களை முற்றுகையிட முன்னேறும் காந்தியர்களின் படையை எப்படி எதிர்கொள்வது என்னும் சிக்கலில், காவல் துறை மாட்டிக் கொண்டு திகைத்துப் போனது.
முன்னேறும் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில், காவலர்கள் தங்கள் கைகளில் உள்ள லத்திகளை ஓங்கி மிரட்டுகிறார்கள்.. ஆனால், அதற்கு அஞ்சாமல், போராட்டக்காரர்கள், உறுதியுடன் முன்னேறுகிறார்கள்.. பின் வாங்க மறுக்கும் அவர்களின் உடல்களை லத்திகள் பதம் பார்க்கின்றன.. போராட்டக்காரர்களின் உடல்கள், அந்த அடிகளை எதிர்க்காமல் வாங்கிக் கொள்கின்றன.. ரத்தம் வழிய அடிபட்டுக் கீழே விழும் உடல்களை, ஸ்டெரச்சர்கள் எடுத்துச் செல்கின்றன. அடுத்து முன்னேறக் காத்திருக்கும் போராட்டக்காரர்கள், ஓடோடிச் சென்று, அடிபட்டு வீழ்ந்து களத்தை விட்டு வெளியேறும் போராட்டக்காரர்களைப் பாராட்டி விட்டு வருகிறார்கள். காயம்பட்டவர்கள், தங்கள் காயங்களைப் பெருமிதமாகக் கருதுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ‘இந்தப் போராட்டக்காரர்கள் தேசத்துக்காக தங்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள்’, என ஒரு தலைவர் சொல்வதைக் கேட்டேன்.
‘பெரும்பாலான நேரங்களில், உள்ளூர்க் காவலர்கள் போராட்டக்காரர்களை அடிக்கத் தயங்குவதைக் கண்டோம்.. போலீஸ் உயரதிகாரிகளின் கவனம் வேறு இடத்துக்குச் செல்கையில், முன்ணணிக் காவலர்களின் வன்முறைப் போக்கு குறைவதையும், மீண்டும் உயரதிகாரிகள் வரும் போது மிரட்டலும், அடிகளும் அதிகரிப்பதையும் கண்டேன். பல இடங்களில், தங்களுடன் சேர்ந்து போராடுமாறு போராட்டக்காரர்கள், காவலர்களிடம் வேண்டுகோள் விடுத்ததையும் கேட்டேன்’.
’ஒரு சில சமயங்களில், காவலர்கள் கோபமுற்று, கடுமையாகத் தாக்கினார்கள். தரையில் அமர்ந்தோ, படுத்துக் கொண்டோ, வெளியேற மறுக்கும் போராட்டக்காரர்களை காவலர்கள் உதைத்தார்கள்; லத்தி முனையால் அவர்கள் வயிற்றில் குத்தினார்கள்’.
ஒரு சமயத்தில், அடித்துச் சாக்கடையில் வீழ்த்தப்பட்டு, சேற்றில் சிக்கிக் கொண்ட ஒரு போராட்டக்காரரை, ஒரு காவலர் கோபத்தில் மேலும் அடிப்பதைக் கண்டேன்.. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற போராட்டக்காரர்கள், பெரும் கொந்தளிப்பை அடைந்தார்கள்.
‘காவலர்கள், போராட்டக்காரர்களின் மீது நிகழ்த்திய இந்த வன்முறையைக் கண்ட போது, வாயில்லா ஜீவன்கள் அடித்துத் துன்புறுத்தப்படுவது போல, கோபத்திலும், அவமானத்திலும் அருவெறுப்பாக உணர்ந்தேன். நான் எழுதிய இந்த வரிகளை, பம்பாய் சென்சார் அதிகாரிகள் கடுமையாக ஆட்சேபித்தார்கள். அரசுத் தரப்புக்கும் பிரச்சினைகள் இருந்தன. காங்கிரஸ் தொண்டர்கள் சட்டத்தை மீறினார்கள், போராட்டத்தை விலக்கிக் கொள்ளக் காவலர்கள் கேட்ட போது மறுத்தார்கள். தடுப்பரண்களை கயிறுகள் கட்டி, இழுத்து விலக்க முயன்றார்கள்’.
‘நான், கடந்த 18 ஆண்டுகளில், 22 நாடுகளில், பல்வேறு சமூகப் பிரச்சினைகளை, கலவரங்களை, வீதிச் சண்டைகளை, கிளர்ச்சிகளை நேரில் கண்டுள்ளேன்.. ஆனால், தரசானா உப்பளத்தில் காங்கிரஸ் போராட்டக்காரர்களுக்கு நடந்த வன்முறையைப் போன்ற கொடூரத்தை வேறெங்கும் கண்டதில்லை. வன்முறையை வன்முறையால் எதிர்கொள்வதை, போரை ஒரு மேற்கத்திய மனம் புரிந்து கொள்ள முடியும்.. ஆனால், மனிதர்கள், மிகவும் அமைதியாக, ஒரு நோக்கத்துடன் முன் சென்று, எந்த வித தற்காப்பு முயற்சிகளும் செய்யாமல், தங்கள் உடல் மீது செலுத்தப்படும் வன்முறைத் தாக்குதலை ஏற்றுக் கொள்ளும் காட்சியைக் கண்டு என் மனம், குழம்பித் தடுமாறிப் போனது. சில சமயங்களில் அதைக் காணச் சகிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்’.
‘என்னை மிகவும் வியப்படைய வைத்த இன்னொரு விஷயம், போராட்டக்காரர்களின் ஒழுக்கம்..அவர்கள் அனைவருமே, காந்தியின் அகிம்சைக் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கியவர்கள் போலிருந்தார்கள்.. போராட்டக்குழுத் தலைவர்கள், போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள்.. காந்தியின் ஆன்மா, நம்முடன் உள்ளது எனச் சொல்லிப் போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
சிகாகோ தினசரிச் செய்தி, தனது சிறப்பு நிருபர் நெக்லே ஃபார்சன் (Negley Farson) வழியே பெற்று வெளியிட்ட அறிக்கை:
ஜூன் – 21, பம்பாய்
தங்கள் மீது மழை போல் பொழியும் லத்தி அடிகளால் ரத்தம் கொட்டிய நிலையிலும், தங்களைக் காத்துக் கொள்ள, தங்கள் கிர்பான்களை (புனித வாள்) எடுக்காமல், அடிகளை வாங்கிக் கொண்டு அமைதியாக நின்றார்கள் வீரம் நிறைந்த சீக்கியர்கள்
தியாகத்தைக் குறிக்கும் ஆரஞ்சு நிற உடையணிந்த இந்து இளம்பெண்கள், காங்கிரஸ் போராட்டக்காரார்களைத் தாக்க வரும் குதிரைப்படைக்கு முன்னால், விழுந்து மறித்தார்கள்.
ஸ்வ்ராஜ்யக் கொடியை ஏந்தியப் பெண்களைச் சுற்றி, உறுதியாக, பின்வாங்கும் நோக்கம் எதுவுமின்றி, காங்கிரஸ் போராட்டக்காரர்கள், அமைதியாக அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள்.. காயம் ஏற்பட்டால், அவர்களை எடுத்துச் செல்ல ஸ்ட்ரெச்சருடன் ஒரு குழு அருகில் தயாராக இருந்தது.
மும்பை எஸ்ப்ளனேட் பகுதியில், கடலை நோக்கிய ஒரு அழகிய பூங்காவில், ஆறு நாட்களாக, மகாத்மா காந்தியின் தொண்டர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே பெரும் போராட்டம் நடந்தது. மேலே சொன்னவை அங்கே நடந்த காட்சிகளில் சில.
காவல் துறையின் தாக்குதல், நம்பவே முடியாத அளவுக்கு கொடூரமாகவும், முட்டாள்தனமாகவும் இருந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் அதை அமைதியாக, மன உறுதியுடன் ஏதிர்கொண்டவிதம் வீரம் நிறைந்த ஒன்றாக இருந்தது.
போராட்டத்தின் முதல் காட்சி, காலை ஆறு மணிக்கு, எஸ்ப்ளனேடுக்கு வெளியே, பூங்காவுக்கு எதிரே உள்ள காவல் நிலையத்தில் தொடங்குகிறது. தொப்பியும் சீருடையும் அணிந்த சில ஆங்கிலேயே சர்ஜெண்ட்ஸ்களின் ஆணைக்கு அடிபணிந்து, பயமுறுத்தும் மூங்கில் லத்திகளுடன், மஞ்சள் தலைப்பாகை அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மராத்திக் காவலர்கள், வெறுங்கால்களில், பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
காலை 6:45 மணிக்கு, மரங்களடர்ந்த சாலையில், தொண்டர்களின் முதல் பகுதி, அணிவகுத்து வருகிறது. காக்கி உடையில், சட்டையில் செஞ்சிலுவைச் சின்னங்களை அணிந்து, முதலில் வரும், சிறுவர்களும் இளைஞர்களும் அடங்கிய இந்தக் குழு, ஆம்புலன்ஸ் அணியாகும். அவர்கள், காத்திருக்கும் காவலர் படையைக் கடந்து சென்று, தங்கள் ஊர்திகளை நிறுத்தி விட்டு, ஸ்ட்ரெச்சர்களை வெளியே எடுத்து வைத்தார்கள். அந்தக் காட்சி, அறுவை சிகிச்சைக்காக, செவிலியரும், உதவியாளர்களும், அறுவை சிகிச்சை அறையைத் தயார் செய்வது போல இருந்தது.
சரியாக 7 மணிக்கு, வெள்ளை உடை அணிந்து, கைகளில், சிவப்பு, பச்சை வெள்ளைநிறங்களில் பதாகைகளை ஏந்தி, போராட்டக்காரர்கள், ‘இந்தியா எங்கள் தாய்நாடு; ஸ்வராஜ்யத்தை அடைந்தே தீருவோம்’, என்னும் பாடலைப் பாடிக் கொண்டு ஊர்வலமாக வரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு அணியையும், ஆரஞ்சு நிற உடை அணிந்த பெண்கள் குழு முன்னின்று வழிநடத்தியது. அவர்களில் பலர் கழுத்தில் மல்லிகை மாலைகளை அணிந்திருந்தார்கள். அவர்கள், காவலர்களைக் கடந்து சென்று, அங்கே ஆம்புலன்ஸ் அணி வைத்திருந்த ஸ்ட்ரெச்சர்களுக்குப் பின்னால் சென்று அமைதியாக அணிவகுத்து நின்றார்கள்.
அதையடுத்து நடந்த நிகழ்ச்சிகள் என்னால், என்றுமே மறக்க முடியாதவை. வெள்ளை சர்ஜெண்ட்களால் வழிநடத்தப்பட்ட, மஞ்சள் தலைப்பாகை அணிந்த கரிய மராத்திக் காவலர்கள், அங்கே காத்துக் கொண்டிருந்த போராட்டக்காரர்களின் கூட்டத்தை நோக்கிச் நடக்கத் தொடங்கினர். கூட்டத்தை, நெருங்க நெருங்க, காவலர்கள் நடக்கும் வேகம் அதிகரித்தது. மரணத்துக்குத் தயாராக இருந்த போராட்டக்காரர்கள், வன்முறையினால் விளையப்போகும் விளைவுகளை எதிர்பார்த்து, மருண்ட விழிகளுடன் எதிர் வரும் காவலர்படையை நோக்கினார்கள். காவலர் படை, தடியடியைத் தொடங்கியது.
சிலர் வீதிகளில் இறங்கி ஓடத் தொடங்கினார்கள்.. ஆனால், பெரும்பாலான போராட்டக்காரர்கள் அசையாமல் அங்கேயே நின்றார்கள். லத்திகள் மனித உடலில் இறங்கும் சத்தம் எங்கும் கேட்டது. கூட்டம் கலையத் தொடங்கியது. அடிபட்டுக் கீழே விழுந்த மனிதர்களின் பின்னால், ஆரஞ்சு உடையணிந்த பெண்கள் குழு மட்டும் அமைதியாக நின்றிருந்தது.
காங்கிரஸ் ஆம்புலன்ஸ் குழுவின் மணிச்சத்தம் பலமாகக் கேட்டது. ஸ்ட்ரெச்சரை எடுத்துக் கொண்டு தொண்டர்கள், அங்குமிங்கும் ஓடினார்கள்.. லத்திகள் மனித உடலில் இறங்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.
சில நிமிட அமைதிக்குப் பின்னர், போராட்டக்காரர்களின் அடுத்த அணி பதாகைகளை ஏந்தி வரத் தொடங்கியது. மராத்தியக் காவலர் படை அவர்களை எதிர்நோக்கி அணிவகுத்து நடக்கத் தொடங்கியது. மீண்டும் மோதல் தொடங்கியது. பயந்த சிலர் சிதறி ஓட, பெரும்பாலான மனிதர்கள், காவலர்களின் லத்தியடிகளை எதிர்ப்பின்றி, வாங்கிச் சரிந்தார்கள். அவர்களின் பின்னே, ஆரஞ்சு நிற உடையணிந்த பெண்கள், இந்திய ஸ்வராஜ்யக் கொடியை ஏந்தியபடி, அமைதியாக நின்றார்கள்.
இன்னொருபுரம், ஒரு சிறு குழுவினர், வெளியேற மறுத்து, தங்கள் தலைகளைக் குனிந்து கொண்டு அமைதியாக, மயங்கி விழும் வரை, காவலர்களின் லத்தி அடிகளை வாங்கிக் கொண்டிருக்கிருந்தார்கள். அப்படி விழும் போராட்டக்காரர்களை எடுத்துச் செல்ல சில அடிகள் தொலைவில் ஸ்ட்ரெச்சர்கள் காத்துக் கொண்டிருந்தன.
அடுத்ததாக, 50 பேர் கொண்ட ஒரு சீக்கியக் குழு வந்தது. சீக்கியர்கள் போர் மரபினர். அவர்கள் தம் தலைமுடியைப் பெண்கள் போல நீளமாக வளர்த்து, அதை முடிந்து, அதன் மீது தலைப்பாகை கட்டியிருப்பார்கள்.இவர்கள், அகாலிகள் என்னும் அடிப்படைவாதப் பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்கள் கிர்பான் என்னும் புனித வாளை ஏந்திய வண்ணம் வந்தனர்.
அவர்களுடன் 15 சீக்கியப் பெண்களும் வந்தனர். அவர்கள் பருத்தி கால் சராய்களை அணிந்து, அதன் மீது இந்துப் பெண்களைப் போலவே ஆரஞ்சு நிறச் சேலையை உடுத்தியிருந்தனர். ஆண் சீக்கிய வீரர்களைப் போலவே கிர்பான் ஏந்தி வந்தனர். அழகான அந்த சீக்கியப் பெண்கள், இந்துப் பெண்கள் போல உரக்கப் பேசாத மென்மையான குரலை உடையவர்களாக இருந்தனர். ஆபத்தை விரும்பி ஏற்றுக்கொண்டு வருவது போலப் புன்னகையுடன் வந்தனர்.
அதில் ஒரு பெண், தன்னிடம் இருந்த குழந்தையை, காவலரை நோக்கி உயர்த்தி, வந்து பார் எனச் சவால் விட்டார். இது போன்ற போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது ஆபத்தானது என நான் சொன்னது அவருக்கு மொழிபெயர்க்கப்பட்டது. அதைக் கேட்ட அவர் சிரித்தார்.
பஞ்சாப் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த சீக்கியர்கள், ‘புனித வாளான கிர்பானை தற்காத்துக் கொள்ளப்பயன்படுத்த மாட்டோம்.. ஒரு போதும் போராட்டக்களத்தை விட்டு வெளியேறவும் மாட்டோம்’, எனச் சூளுரைத்தார்கள்.
‘ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்.. மரணம் வந்தால், ஏற்றுக் கொள்வோம்’, என்னும் அவர்களின் போர்க்குரல், இந்துச் சகோதரர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது. காவலர்கள், சீக்கியர்களைத் தாக்கத் தயங்கினார்கள். போராட்டக் களத்தை விட்டு வெளியேறுமாறு, சீக்கியப் பெண்களை வேண்டினார்கள்.
சீக்கியப் பெண்கள், ‘எங்கள் ஆண்களை விட்டுப் போக மாட்டோம்.. அவர்களுடனே சாவோம்’, எனப் பதிலுரைத்தார்கள்.
குதிரை மீதமர்ந்து, களத்தில், போராட்ட வீரர்களின் தலைகளைக் கண்மண் தெரியாமல் அடித்து உடைத்து முன்னேறிய காவலர் படை, நடுவே நீல நிறத் தலைப்பாகைகளை அணிந்த சீக்கியர் குழுவைக் கண்டு திகைத்து நின்றது.
‘சீக்கியர்கள் வீரமிகுந்தவர்கள்; அவர்களை எப்படித் தாக்குவது?.
காவலர்கள் குரலில் இருந்தது பயமல்ல, மரியாதை!
சிறிது நேரத் தயக்கத்துக்குப் பிறகு, சீக்கியர்களை களத்தை விட்டு வெளியேற்றியாக வேண்டும் என முடிவெடுத்த காவலர்கள், சீக்கியப் பெண்களைத் தவிர்த்து, அங்கே நின்றிருந்த ஆண்களைத் தாக்கத் தொடங்கினார்கள். சீக்கியர்களின் குழுத்தலைவர் அடிகளை வாங்கத் தொடங்கியிருந்தார்.. நான் அவரிடம் இருந்து ஐந்து அடிகளே தள்ளியிருந்தேன். அவர் கொஞ்சம் உயரம் குறைவானவர், ஆனால், கட்டுமஸ்தான உடல் கொண்டவர்.
காவலர்கள் அடிக்கத் தொடங்கினர். அவர் அசையாமல் நேராக நின்றார். தலைப்பாகை தட்டிவிடப் பட்டது. நீண்ட கருங்கூந்தல் அவிழ்ந்து வீழ்ந்தது. கண்களை மூடிக் கொண்டார். அமைதியாக அடிகளை வாங்கிக் கொண்டேயிருந்தார். ஒரு கட்டத்தில் சரிந்து விழுந்தார்.
மற்ற சீக்கியர்கள் அவரைப் பாதுகாக்க முயலவில்லை.. மாறாக போர்க்குரல் எழுப்பிக் கொண்டே, அவர் வாயில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தார்கள்.. இந்துச் சகோதரர்கள், அவர் கண்களைச் சுற்றியிருந்த காயங்களின் மீது வைக்க ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். அந்தச் சீக்கியர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். மேலும் டிகளை வாங்கிட எழுந்து நின்றார்.
காவலர்கள் சோர்ந்து போய் அடிப்பதை நிறுத்தி விட்டார்கள்.. ’எதிர்த்து, மரம் போல நிற்பவனை எவ்வளவு நேரம்தான் அடித்துக் கொண்டேயிருப்பது?’.
(ரிச்சர்ட் பார்லெட் க்ரெக் எழுதிய ‘அகிம்சையின் வலிமை’, நூலில் ஒரு பகுதி)