சீவகசிந்தாமணி, உரையாடல்

பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு

சிந்தாமணி

அன்புள்ள ஜெ

காவியங்களை வாசித்தல் சீவக சிந்தாமணி உரை உங்களுடைய எல்லா உரைகளையும் போல சிறப்பாக இருந்தது. சீவக சிந்தாமணி என்றல்லாமல் பிற காவியங்களை வாசிக்க பேருதவியாக இருக்கும். இந்த வாரம் சீவக சிந்தாமணி குறித்து கொஞ்சம் வாசிக்கலாம் என்பதற்காக குழுமத்தில் கேட்ட போது சில நூல்களை பரிந்துரைத்தார்கள். கதை அறிமுகத்திற்காக ராம் சுரேஷ் நாவல் வடிவிற்கு மாற்றிய கிழக்கு பதிப்பாக வெளியிடாக வந்த நாவலை வாசித்தேன். ஆனால் அதை வாசித்து பின் நண்பரிடம் உரையாடிய பொழுது தான் நேரடியாக வாசிக்காது பயனில்லை என உணர்ந்தேன். ஆனால் ஒரு மிகை கற்பனை கதை கொடுக்கும் துள்ளலுக்காக பதின்பருவத்தில் வாசிக்கலாம். பின்பு செவ்வியலாக்கம் நோக்கி வர ஒரு விதையாக அமையும். நீங்கள் செய்யுள்களை வாசித்து காட்டி, அது இன்றைக்கு வழங்கப்படும் தமிழ் பண்பாட்டில் இருந்து எத்தனை தூரம் விலகியிருக்ககிறது என்பதை உணர முடிந்தது. இந்த உரை வடிவ நாவலே இன்றைக்கேற்ப பல இடங்களில் உருமாற்றப்பட்டு இருக்கிறது. ஒரு அறிமுகம் என்ற அளவில் இளம் வயதில் வாசிக்கலாம்.

அதை தாண்டி வாசித்தவுடன் அதன் கூறுமுறை, வெளிப்பாடு என எல்லாவற்றையும் நவின நாவல் வடிவத்தோடு குழப்பி கொண்டேன். பின்னர் நண்பர் ராஜகோபாலன் அவர்களிடம் தொடர்பு கொண்டு விளங்கிய பிறகு தான் ஒரு புரிதல் வந்தது. காவியங்களுக்கென்று ஒரு அழகியல் உள்ளது. அவை அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு புருஷார்த்தங்ககளை பேச வேண்டும். அவற்றிற்கு பேசப்படும் கதைகள் பொதுவான சூழலிலிருந்து எடுத்து கொள்ளப்படலாம். எனவே தர்க்க ஒழுங்கு குலையாதபடி பேசுவது அவற்றின் நோக்கம் அல்ல. மிகை கற்பனைகளை குறியீட்டு பொருள் கொண்டவையாக பார்க்கலாம் என்றெல்லாம் புரிந்து கொண்டேன்.

இந்த உரை மிக விரிவாக சீவக சிந்தாமணிக்கு எப்படியெல்லாம் நவீன வாசிப்பை கொடுக்கலாம் என்பது என் போன்ற மரபிலக்கியம் வாசிக்கதவனுக்கு மிக உதவியானது. எட்டு திருமணங்களை எட்டு பிறவிகள் என,ஆதி நாதரின் தொன்மத்தோடு இணைத்து மனித வாழ்க்கையின் எட்டு வளர்ச்சி நிலைகளென, அதே போல அஷ்ட பரிக்ரேயா என்ற கருத்துருவோடு இணைத்து புரிந்து கொள்ளுதல் என்பவை ஒரு நவீன வாசிப்புக்கான திறப்புகள்.

இந்த கிருஷ்ணனின் எட்டு மனைவியர் என்பது மட்டும் மேலோட்டமான கதை வாசிப்பின் போது தோன்றியது.அதன் விரிவை தாங்கள் சொன்னதன் மூலம் அதை தேடிச் சென்று விரித்தெடுக்க புதுவாயில் கிடைத்துள்ளது.

அதே போல உரையின் தொடக்கத்தில் சீவக சிந்தாமணி ஏன் வாசிக்கப்படவில்லை என்பது இக்காப்பியத்திற்கு மட்டுமல்லாது ஒரு செவ்விலக்கியம் ஒரு பண்பாட்டில் எவ்வண்ணம் நிலைகொள்கிறது என்பதற்கான விளக்கமாகவும் இருந்தது. அதை என்னளவில் இப்படி சொல்லி பார்க்கிறேன். எந்த செவ்வில்லக்கியமும் காவிய வடிவில் இருந்து பேச்சு வடிவிற்கு வந்தால் தான் நிலைக்கொள்ளும். அதே போல அப்பண்பாட்டில் உள்ள அக்காவியத்தின் மதத் தொடர்ச்சி அதை எப்போதைக்குமான வாயிலாக அமையும். உதாரணமாக கம்பராமாயணத்திற்கு தமிழகத்தில் உள்ள வைணவ பண்பாட்டு தொடர்ச்சி.

சீவக சிந்தாமணி தன் அடித்தளமாக கொண்டுள்ள தமிழ் சமணம் ஏறத்தாழ காணமலே ஆகிவிட்டது. அதன் விளைவாக அதன் பேச்சு வடிவங்களும் இல்லை. எனவே சீவகத்தை அணுகுவதற்கான மரபான வாயில்கள் நமக்கு இல்லை. அதற்கு பதிலாக ஐரோப்பா மறுமலர்ச்சி காலத்தில் தன் பண்பாட்டு தொகையான ஒடிசி, இலியட் ஆகியவற்றை எடுத்து முற்றிலும் புதிய கோணத்தில் தன்னுடைய பண்பாட்டு தொகையின் வளர்ச்சியை அறிவதற்கு, வேர்களை நீட்டி மறு ஆக்கம் செய்தது போல் நாம் சீவக சிந்தாமணிக்கு ஒரு வாசிப்பை உருவாக்கி கொள்ள வேண்டும். ஏனெனில் சீவக சிந்தாமணி வடக்கே இருந்து தன் கதையை பெற்று கொண்டிருந்தாலும் கற்பனை இடங்களை கொண்டிருந்தாலும் அது பேசுவது அன்றிருந்த தமிழ் பண்பாட்டை தான். இன்றை அறிய கட்டாயம் அன்றை அறிந்து தான் ஆக வேண்டும்.

இதை விளக்க சீவக சிந்தாமணியின் அகத்துறை பாடல்களும் போர் வர்ணனைகளும் சங்க பாடல்களின் அதே நீட்சியை கொண்டுள்ளன என்பதை விளக்கியும், ஒரு வாசகன் ஏன் இவற்றை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என் போன்றவனுக்கெல்லாம் முக்கியமாக தேவைப்படுகிறது. ஏனெனில் பழைய காப்பியங்களை வாசிக்க தொடங்கலாம் என நினைக்கும் போது சில தானே முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. அங்கு ஆசிரியர்கள் வந்து சொல்ல வேண்டியிருக்கிறது. இலக்கியம் என்பதே அறுபடாத தொடர்ச்சி தான் என்று.

அதே போல நீங்கள் சொன்ன நுண்தகவல்களில் அணிகளில் பறவையின் நிழல் முன்வினைக்கு உவமையாவது நினைத்து நினைத்து வியந்தேன். இவற்றை படிக்க நுனிவிரல் தொட்டுள்ளேன். இந்த உரை அவற்றிற்கு தொடக்கமாக அமைந்து மரபிலக்கியத்தில் என்னை செலுத்துவதாக.

இந்த கடிதத்தை கேட்டவற்றை எனக்கு நானே நினைவு கொள்வதற்காகவே எழுதினேன். ஆரம்பத்தில் பெரிதாக ஏதும் வரவில்லை. எழுத எழுத சொற்கள் வந்து நிறைத்துவிட்டன. சில இடங்களில் நானே போட்டவையும் வருகின்றன. இன்னும் நிறைய சம்பவங்கள் துணுக்குகளாக உள்ளன. இவை விதைகள் நீருற்றி வளர்ப்பது வாசகனாக என் கடமை. இவ்வருமையான உரைக்கு நன்றி ஜெ.

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைஏற்றுக் கொள்ளுதலும் அதுவாதலும்- கடிதம்
அடுத்த கட்டுரைமதிப்புரை எழுதுவது…