பத்துலட்சம் காலடிகள்

பத்துலட்சம் காலடிகள் வாங்க

ஔசேப்பச்சனை எங்கே சந்தித்திருக்கிறேன்? பலமுறை சந்தித்திருக்கிறேன் என்றே சொல்லவேண்டும். நான் நன்கறிந்த மூவரின் கலவை. அவர்களில் ஒருவர் மெய்யாகவே போலீஸ் உயரதிகாரி. துப்பறிவாளர். அந்தக் கதாபாத்திரத்தில் கேரள சிரியன் கிறிஸ்தவர்களுக்குரிய அலட்சியமான உலகப்பார்வை, இயல்பான கிண்டல், ஆண்மை மிக்க நல்லுணர்வு ஆகிய பண்புகள் உள்ளன.அந்தக் கதாபாத்திரம் இத்தனை புகழ்பெற்றது இயல்பானதுதான்.

இளமையிலேயே நான் ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளின் பெரிய வாசகன். துப்பறியும் கதைகள் பல வந்துவிட்டன என்றாலும் ஹோம்ஸ் கதைகளின் முதன்மை குறையவில்லை. அதற்கு பலகாரணங்கள். ஹோம்ஸ் கதைகளின் நடை, குற்றத்தை ஹோம்ஸ் விவரிக்கும் முறை ஆகியவை வசீகரமானவை.

அதைவிட ஹோம்ஸ் கதைகள் பெரும்பாலும் துப்பறிந்து சென்றடையும் இடமென்பது எளிய குற்றம் அல்ல. மனித உள்ளத்தின் ஆழத்தில், உறையும் நஞ்சு. சுயநலம், பிறரை வெல்வதிலும் அழிப்பதிலும் இன்பம் காணுதல், ஒளிந்திருக்கும் மகிழ்ச்சி ஆகிய பல்வேறு நோக்கங்களுக்காக குற்றங்கள் செய்யப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக மீறிச் செல்வதற்காக. எது ஒன்று நிபந்தனையாக்கப் படுகிறதோ அதைக் கடத்தலில் இருக்கும் அடிப்படையான மானுட சாகசத்துக்காக.

இந்தக்கதைகள் அவ்வகையில் மானுட ஆழம் நோக்கிச் செல்லவேண்டும் என்று எண்ணினேன். இவை மானுடனை துப்பறியும் கதைகள் என்பேன். துப்பறியும் கதை என்பதே ஓர் அழகிய வடிவம். ஒரு சிறு தொடக்கத்தில் இருந்து விரிந்து விரிந்துசெல்லும் அவ்வடிவில் நாம் வரலாறு, பண்பாடு, மானுட உளவியல் என எல்லாவற்றையும் இயல்பாக உள்ளே கொண்டுவந்துவிட முடிகிறது.

இந்தக் கதைகள் வெளிவந்தபோது மிக உற்சாகமான வாசக வரவேற்பைப் பெற்றன. அதற்கு இக்கதைகளில் இருக்கும் விளையாட்டுத்தனம் ஒரு காரணம். சாதி மத எல்லைகளைக் கடந்து ஒருவருக்கொருவர் கேலிசெய்துகொள்கிறார்கள். நான் மலபாரில் இருந்த நாட்களில் அதைக் கண்டு ஆரம்பகட்ட துணுக்குறலை அடைந்திருக்கிறேன். இன்றும் கேரளத்தின் நட்புக்கூடல்களில் அது மிக இயல்பானது.

சராசரி தமிழர்களால் அதை கற்பனைசெய்ய முடியாது. அவர்கள் விழிப்புநிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் பேசிக்கொள்வார்கள். தன்னிலை மறைந்ததும் வசைபாடிக்கொள்வார்கள். இயல்பான நட்பார்ந்த கிண்டல் இங்குள்ள நட்புக்கூடல்கள் எதிலும் இருப்பதை நான் கண்டதில்லை.

ஆகவே இந்தக் கதைகளிலுள்ள சாதி-மதக் கிண்டல்கள் இங்குள்ள போலி முற்போக்கினரின் விமர்சனத்துக்கு ஆளாயின. அவற்றின் மெய்யான பொருளைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதையும் நேர்ப்பொருளில் மட்டுமே எடுத்துக்கொள்பவர்கள். நகைச்சுவை என்பதே வளைந்து பொருள் கொள்வதென்றுகூட அறியாத எளிய உள்ளத்தவர் என்றே அவர்களைக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்னும்கூட சில ஔசேப்பச்சன் கதைகளை நான் எழுதலாம். ஏனென்றால் அந்த நட்புக்கூடலின் அரட்டை, அதிலிருக்கும் உற்சாகம் எனக்கு பிடித்திருக்கிறது.

இந்த நூலை இயக்குநர் பாலாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

ஜெ

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை அந்த முகில் இந்த முகில் முன்னுரை
முந்தைய கட்டுரைசெயலும் கனவும் – கடிதம்
அடுத்த கட்டுரைதளிர்வலையோ?