நீலகண்டப் பறவையின் நிலம்

அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’
நீலகண்டப் பறவையைத் தேடி- நவீன்
நீலகண்டப் பறவையைத் தேடியின் மறுபகுதிகள்…

அன்புநிறை ஜெ,

அதீன் பந்த்யோபாத்யாய வங்காள மொழியில் எழுதி தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ நாவல் கடந்த பத்து நாட்களாக ஒரு தொடர் கனவில் ஆழ்ந்திருந்த அனுபவத்தை அளித்தது.

சில சமயம் இரவுகளில் எண்ணற்ற கனவுகளும், இடையிடையே அரைகுறை விழிப்பிலும் தொடரும் நினைவிழைகள் ஒரு சரடு போல அந்தக் கனவுகளை எல்லாம் இணைத்துப் போவதாகவும் இருக்கும். இந்நாவலை வாசித்தது அது போன்ற ஒரு அனுபவம். இன்னும் மொழிபெயர்க்கப்படாத இரண்டு நூல்களில் இதன் இழைகளை முழுமை செய்யும் வேறு கதைகள் இருக்கலாம். ஆனால் இந்த ஒரு நாவலே தன்னளவில் ஒரு நிறைவான வாசிப்பனுபவத்தையும் தருகிறது.

கதையின் மையச் சித்திரம்:

ஒரு வங்காள டாகுர் குடும்பத்தில் தனபாபுவுக்கு மகன் (சோனா) பிறக்கும் நாளில், ஸோனாலி பாலி ஆற்றின் கரையில் அக்குடும்பத்தின் தர்மூஜ் வயல்களைக் காவல் காக்கும் ஈசம் ஷேக்கிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. இதில் வரும் நதி, வயல்கள், டாகுர் குடும்பம், அவர்களை அண்டி வாழும் ஏழை முஸ்லிம்கள் இவையே இந்த நாவலின் மையம் எனச் சொல்லலாம்.

அக்குடும்பத்தின் மூத்த மகனான மணீந்திரநாத் மனநிலை தவறியவர்(பைத்தியக்கார டாகுர்), வானிலிருந்து தவறிவிழுந்த ஒரு தேவன் போன்ற பேரழகன். பைத்தியக்கார டாகுர் ஒரு காலத்தில் அப்பிராந்தியத்திலேயே அறிவு மிகுந்தவர், சுற்று வட்டார மக்கள் அனைவராலும் நேசிக்கப்படுபவர். அவரது சித்தத்தை அலைக்கழியச் செய்து மறைந்து போன பொன்மான் தேடல் , பாலின் என்னும் வெளிநாட்டுப் பெண் மீதான காதல். அவரது தந்தை ஒரு மிலேச்சப் பெண்ணை குடும்பத்தின் மூத்த மருமகளாக ஏற்க இயலாத காரணத்தால் அவரது காதல் கனவு சிதைந்து மனநிலை சிதறுகிறது. அவரை இன்னும் இந்த மண்ணோடு பிணைத்து வைத்திருப்பது அவரது அகஆழம் உணர்ந்த மனைவியின் நேசம். சிறுவன் சோனாவின் கண்கள் வழியாக மேலும் சில பகுதிகள் விரிகின்றன. தனது காதலை அதி உன்னதமாக்கி, தன்னை மீறிய பித்தில் நிலமெங்கும் அலைகிறார் மணீந்திரநாத். அவரது இளவயது பிம்பம் என முளைவிடும் தம்பி மகன் சோனா அவரை போலவே நுண்ணுணர்வும் அறிவும் கொண்டவன். சாமுவின் மகள் பாத்திமா எனும் சிறுமியுடனான நட்பும், பின்னர் மூடாபாடா ஜமீன் பெண்கள் அமலா, கமலா உடனான உறவும், தனது குழந்தைமையில் இருந்து மீறிச்செல்லும் அனுபவத்தாலும் அலைக்கழிக்கப்படுகிறான் சோனா.

முக்கிய கதாபாத்திரங்களாக சில பெண்கள் வருகிறார்கள். திருமணமாகி வரும் போதே இழந்த காதலில் தன் சித்தத்தை சிதறடித்துவிட்ட டாகுர் மீது பேரன்பு கொண்ட அவரது மனைவி (பெரிய மாமி), டாக்கா கலவரத்தில் கணவனை இழந்து தன் சகோதரன் நரேன்தாஸ் குடும்பத்தோடு வாழும் மாலதி என்னும் அழகான இளம் விதவை, மூன்று முறை மணம் செய்து தலாக் செய்த பின் மேலும் துணையைத் தேடும் பதின்மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஜோட்டன் என்னும் முஸ்லிம் பெண், பசியின் தீயில் இடையறாது உழல நேரும் ஜாலாலி என சில முக்கிய பெண் பாத்திரங்கள். அத்தனை நீர்சூழ் உலகில் தாகம் தணிக்க வகையற்ற வாழ்வு அமையப் பெற்றவர்கள்.

மதக்கலவரத்தில் அகாலமாக தன் கணவனை இழந்து வைதவ்ய விரதங்களின் வெம்மையில் மனமும் உடலும் வாட வாழ்கிறாள் மாலதி. மாலதியின் இளம் வயது நண்பர்களான சமுசுதீனும் ரஞ்சித்தும் வளர்ந்து அரசியல் ரீதியாக ஆளுக்கொரு துருவமென முஸ்லிம் லீகிலும் சுதேசி இயக்கத்திலும் முனைப்பு கொண்டுவிடுகிறார்கள். பால்யத்தில் அவளுடன் திரிந்து அலைந்தவர்கள், அவளுக்கு பிரப்பம்பழம், பலிசப்பழம் பறித்துத்தரும் நண்பர்கள். இன்றும் மாலதியின் நிலை கண்டு வருத்தப்படுபவர்கள். அவர்கள் மூவருக்கிடையே அன்பின் ஈரம் தணியாது ஆங்காங்கே வெளிப்படுவதும், ரஞ்சித்துக்கும் சமுசுதீனுக்குமான நட்பும் மாலதிக்காக இருவரும் கவலைப்படுவதும், அவளுக்காக வேறேதும் செய்ய இயலாத சூழலும் என அப்பகுதி ஒரு அன்பின் சித்திரம்.

ஆபேத் அலியின் அக்கா ஜோட்டன், மனைவி ஜாலாலி. கடும் வறுமையில் இருப்பவர்கள். ஒரு வேளை சாப்பாட்டுக்காக வயல்களில் தானியக்கதிர்களை திருட்டுத்தனமாக அறுத்தும், ஒரே ஒரு பாக்கு உதிர்வதற்காக மரத்தடியில் மறைந்து காத்திருந்தும், ஆமை முட்டைகளை டாகுர் வீட்டில் கொடுத்து உதிர்ந்து கிடக்கும் வெற்றிலைகளை எடுத்துக் கொண்டும் உணவு சேகரிக்கும் ஜோட்டன். அவள் தன்னை உடனழைத்துச் செல்லக்கூடிய ஆணென அவள் நம்பும் முஸ்கிலாசான் பக்கிரிசாயபுவுக்கு அவள் சேகரித்த உணவனைத்தையும் சமைத்துப் படைக்கிறாள், தான் வெறும் வயிறாய் பட்டினியில் கிடக்கிறாள். அவர் வேறொரு பயணத்தில் இருப்பதாகக் கூறி கிளம்பிச் சென்றுவிட ஐந்து வருடங்கள் காத்திருக்கிறாள். பின்னர் அவர் வந்து அழைத்துப்போய் அவரோடு அவள் இடுகாட்டில் குடியேறுவதும், அவர்களது குடிசை வாழ்வும் மற்றொரு இழை.

எந்த நீரும் அணைக்க முடியாத வயிற்றுத்தீயைத் தணிக்க, மாலதி ஆசையாய் வளர்க்கும் வாத்து ஒன்றை ஜாலாலி திருடித் தின்று விடுகிறாள். மாலதி தான் ஆசையாய் வளர்க்கும் அந்த ஆண் வாத்து பிற பெண் வாத்துக்களுடன் வலம் வருவதைப்பார்த்தபடி தன் கணவனுடன் வாழ்ந்த இன்ப வாழ்க்கையை நினைத்து ஆறுதலடைபவள். வாத்து காணாமல் போன அன்று துடித்துப் போகிறாள். ஜாலாலி அந்த வாத்தை திருட்டுத்தனமாக நீருக்கடியில் கழுத்தைத் திருகியபடி அழுத்திக் கொண்டு நின்றதை அவள் நின்ற நிலையிலிருந்தே நினைவு கூறும் சாமு, மாலதியை ஆறுதல்படுத்தி வீடு திரும்பச் சொல்லிவிட்டு ஜாலாலியை தண்டிக்க வேண்டுமெனக் கோபமாக வருகிறான். குடிசைக்குள் சமைக்க எண்ணைக்குக் கூட வழியின்றி திருடிய வாத்தை நெருப்பில் வாட்டி உண்டுவிட்டு பசி ஆறிய நன்றி முகத்தில் தெரிய நிற்கும் ஜாலாலியைப் பார்த்தவுடன் பசியெனும் தீக்கு முன் திருட்டு சிறிதாகி விடுவதை சாமு உணரும் ஒரு சித்திரம்.

விளைச்சல் இல்லாத மாதத்தில் கிராமமே கடும் பசியில் அல்லிக்கிழங்கு தேடி பாவுசா ஏரியில் இறங்க, கூடையுடன் நீந்தி ஆழத்துக்குச் சென்று விடுகிறாள் ஜாலாலி. அங்கு நாட்பட்ட பசியிலும் தளர்விலும் அல்லிக்கொடிகள் காலைச் சுற்றிவிட நீராழத்தில் மிகப் பெரிய கஜார் மீன் அவளைத் தாக்குகிறது. தலைகீழாய் தண்ணீரில் மூழ்கிய நிலையில் மரணிக்கிறாள். பசியை அன்றி எதையுமே எண்ண இயலாத வாழ்வில் இருந்து நீருள் மூழ்கிடும் ஜாலாலி அந்த ஏரிக்குள் வாழ்வதாக நம்பப்படும் சோனாயி பீபி என்னும் தங்கப் படகின் ராஜகுமாரியைக் காணும்போது கேட்க சில கேள்விகள் இருக்கக்கூடும்!

நாடகீய தருணங்கள்:

கதையில் சில தருணங்கள் அதன் கனவுத் தன்மையால் மிளிர்கின்றன.

மேக்னா நதியின் மணல்வெளி, மட்கிலாச் செடிகளும், பிரம்புப் புதர்களும், காட்டு நாணற்செடிகளும் சூழ்ந்த இடத்தில் நிற்கும் அரசமரத்தடியில் தனக்கான உலகத்தை உருவாக்கிக் கொண்டு அம்மரத்தை ஒரு தெய்வத்தை வலம் வருவது போல மணீந்திரநாத் சுற்றி வருவதும், வானம் கருத்திருண்டு மழை பெய்யத் தொடங்கியதும் வெறிகொண்ட ஆகாயத்தைப் பார்த்து உற்சாகம் கொண்டு கைகொட்டி நடனமாடுவதும் அவர் அழகின் தேடலில் தன்னையழித்துக் கொண்ட ஒரு ஞானியாகவே படுகிறார். “There’s none I grieve to leave behind, but only one thee..” என்ற கவிதையை தியானிக்கும் மனதோடு தனையழித்துக்கொள்ளும் மகத்தான தேடல் இவ்வுலகத்துக்குரியதல்லாதாகிறது.

யாராலும் நிறுத்த இயலாமல் ஒரு யானை மீதேறி மணீந்திரநாத் ஊரை விட்டு வெளியேறும் பொழுதில் வெண்முரசின் நேமிநாதர் மனதில் தோன்றினார். வெண்முரசில் மண்ணில் நிகழ்ந்தவர்களிலேயே முழுமையான ஆண், மணமுடிப்பதன் முன் துறவு பூண்டு யானை மீதேறி அனைத்தையும் துறந்து துவாரகை விட்டகலும் காட்சி நினைவு வந்தது. அதுபோல உரிய தருணத்தில் இயலாமையினாலோ விதிவசத்தாலோ மேன்மையானதென அகம் அறிந்த ஒன்றின் அழைப்பை செவிமடுக்கும் வாய்ப்பிருந்தும் விண்ணெழ முடியாத போது எழும் நிலைகுலைவு சித்தத்தை அழித்துவிடுகிறது. ஏதோ ஒரு பொழுதில் இந்த நீலகண்டப் பறவையின் தேடலும் விண்ணிற்கு எழுந்துவிடும் சாத்தியங்களோடே மண்ணில் அலைகிறது. மண்ணை ஆளும் யானைக்கு சிறகு விரிக்கும் கனவுகள் அமைந்தால் ஏற்படக்கூடிய ஒரு மனநிலை எனத் தோன்றியது.

மீண்டும் மீண்டும் நிலவெரியும் இரவுகளில் மிதந்திடும் பொழுதுகள் கதையில் வருகிறது. ஆழ்மனம் சேகரிக்கும் நுண்தருணங்களால் ஆன கனவு வெளி. கரை காண முடியாத பாவுசா ஏரி தொன்மக் கதைகளின் உறைவிடமாக இருக்கிறது. நிலவிரவில் மயில் படகில் காற்றைத் துடுப்பாகக் கொண்டு ஏரியில் மிதந்து வரும் ராஜகுமாரி, நீருக்குள் வாழ்பவள். மாலையில் சூரியனை நீருக்குள் இழுத்துக்கொண்டு சென்று இரவெல்லாம் அவனைக் கையில் ஏந்தியபடி நீராழத்தில் நீந்தியபடி அதிகாலையில் மறுகரையில் வானில் ஏற்றிவிடுபவள்! கண்காண முடியாத பொழுதுகளில் நாளவன் எங்கு செல்கிறான் என பழங்குடி மனம் உருவாக்கிக் கொண்ட அழகிய கற்பனை மனதுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது.

ஜாலாலி நீருள் ஆழம் நோக்கி போகும் அதே நேரம் கிராமத்தில் வாஸ்து பூஜைக்கென தாளங்கள் முழங்க எருமை பலியிடப் படுகிறது. ஒரே நேரத்தில் அந்த எருமைப்பலிக்கான ஆயத்தங்களும், ஹாஜி சாயபுவின் இரண்டாவது பீவி குளிப்பதைக் காண புதரில் ஒளிந்திருக்கும் பேலுவும், மகிழம்பழம் தேடி பாத்திமாவுடன் காட்டுக்குள் வழிதவறும் சோனாவும், பசியுடனும் காஜர் மீனுடனும் போராடும் ஜாலாலியும் என காட்சிகள் வேகம் பெறுகின்றன. ஜாலாலி நீருள் மூழ்கி உயிர் விட்டதும் ஆயிரக்கணக்கான மீன்கள், ராட்சஸக் கஜார் மீன்கள் அஸ்தமச் சூரியனால் சிவந்திருந்த நீரில் தண்ணீருக்கு மேலே வந்து துள்ளி விழுகின்றன. ஜாலாலியின் சடலத்தைச் சுமந்தபடி ஒரு கிரேக்க வீரன் போல டாகுர் ஓடும் தருணத்தில் உச்சம் அடைகிறது.

மணீந்திரநாத் பெற்ற உயர் கல்வியும், மேலை நாட்டுப் பெண்ணின் காதலும் அவரது தந்தை கைக்கொள்ளும் மரபின் மீதான பிடிவாதத்தின் முன் பலியாகிறது. அதனால்தான் மதத்தின் பெயரால் வெட்டுண்ட எருமைத் தலை பித்தனான டாகுரிடம் கேள்விகள் கேட்கிறது. “ஜாதியும் மதமும் மனுஷனை விட உசந்ததுன்னு ஏன் நினைசீங்க? ஏம்பா, நீங்க இந்த மனுஷனைப் பைத்தியமாக்கினீங்க?” என பெரிய மாமி தனது கணவரின் இழந்த காதலுக்காக மனதுக்குள் தன் மாமனாரிடம் கேள்வி எழுப்புவது போல, இத்தனை மக்கள் வயிற்றுப் பசிக்கு நீருள் மூழ்க என் தலையை வெட்டி எதை வெல்கிறீர்கள் என எருமை ஏளனம் செய்கிறது.

அதே போல மூடாபாடா ஜமீனில் துர்க்கை தசமி நாளில் நடைபெறும் எருமைப்பலியும் அதை ஒட்டி நிகழும் சம்பவங்களும் ஒரு புறம் அதிதீவிர நம்பிக்கையும் அதன் எதிரில் அவற்றைக் குறித்த ஒரு சிறு விசாரமும் என இருமைகள் கதையில் எதிரெதிர் உரையாடிய வண்ணம் இருக்கின்றன. மணீந்திரநாத்தின் தம்பி பூபேந்திரநாத்துக்கு தேவியிடம் அசைக்க முடியாத பக்தி. மணீந்திரரும் கம்பீரமாய் நிற்கும் தேவியின் முன் தன்னை மறந்து பணிகிறார். பத்தாம் நாளில் மகிஷனை பலியிடும் காட்சி உக்கிரமாய் இருக்கிறது. அனைவரும் உணர்ச்சிவயப்பட்டிருக்கும் அந்நிலையில் பைத்தியக்கார டாகுர் உருண்டு புரண்டு சிரிக்கிறார். தேவியின் சாந்நித்யமும் மகிஷ வதமும் ஒரு புறம் நிகழ விஸர்ஜனத்துக்குக் காத்திருக்கும் தேவியின் பதுமை அழுவதைப் போல சோனாவுக்குத் தோன்றுகிறது. மரபு நமக்குக் கையளிக்கும் நம்பிக்கைகளும், அதனுடன் முரண்பட்டு அறிவு எழுப்பிக்கொள்ளும் கேள்விகளுக்கும் இடையிலான அகத்தின் ஊசல்.

அரசியல்:
சிறிய கிராமம், சற்றே நிலவுடைமை கொண்ட சில குடும்பங்கள், அதனை அண்டி வாழும் ஏழை முஸ்லிம் குடும்பங்கள் என கதைமாந்தர்கள் அறிமுகமாகும் போதே பிரிவினைக்கு முந்தைய காலகட்டத்து அரசியல் பூகம்பம் அந்தத் தொலைதூர கிராமத்தில் மிக லேசான அதிர்வுகளாக உணரப்படுவதும் வருகிறது. எங்கோ நடக்கும் அரசியல் மாற்றங்கள் அந்த எளிய கிராமத்தில், டாக்கா கலவரத்தில் கணவனை இழந்த இளம் விதவை மாலதி, கிராமத்தில் லீக் அரசியலை உள்ளே கொண்டுவரும் சாம்சுதீன்(சாமு), சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டு தலைமறைவு வாழ்வு வாழும் டாகுர் குடும்பத்து பெரிய மருமகளின் தம்பி ரஞ்சித் என உணரப்படுகிறது. கடும் வறுமையில் இருக்கும் மக்கள் வாழ்வில் அந்தப் பிரிவினைக்கான விதைகள் முளை விடுவதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த அழகிய நட்பு/உறவு என்னவாகப் போகிறதோ என்ற பதைப்பும் வாசகருக்கு வரச்செய்து விடுகிறார்.

அதே நேரம் பிரிவினையின் முதல் விதைகள் விழும் நாட்களிலும் அந்த கிராமத்து நட்புகளிலும், உறவுகளிலும் இன்னும் உரமிருக்கிறது. மக்கள் தங்கள் இயல்பால் ஒருவருக்கொருவர் உதவிடும் சித்திரமும் வருகிறது. கயவர்களால் இரவெல்லாம் சிதைக்கப்பட்ட மாலதியை துர்க்கையென எண்ணி காப்பாற்றும் ஜோட்டன். இறுதியாய் தன் உயிர் போகும் வேதனையிலும் மாலதியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடாதிருக்க ஒரு அற்புதத்தை நிகழ்த்திவிட்டு பீர் ஆகிவிடும் சாயபுவின் கதை. ஏரியில் மூழ்கிய ஜாலாலியை தூக்கித் தோளில் ஏற்றி கரை சேர்க்கும் டாகுர். மண்ணின் ஆழத்தில் வேர்கள் பின்னியிருக்கின்றன.

நிலக்காட்சிகள்:

கதை நிகழும் நிலம் ஆசிரியரின் குழந்தைப் பருவத்தில் அவர் வாழ்ந்த பகுதி. மிக உயிர்ப்பான நிலக்காட்சிகளின் சித்தரிப்பு கதை முழுவதும் விரிகிறது. அம்மண்ணில் நிகழும் ஒவ்வொரு பருவ மாற்றங்களையும் விரிவாகக் காட்சிப்படுத்துகிறார்.

சைத்ர மாதத்து அனற்காற்றில் சூனியமாக்கிடக்கும் வயல்வெளிகள், வெண்கலப் பாத்திரம் போல பழுப்பு நிறமாக விரிந்து கிடக்கும் ஆகாயம், வயல்வெளிகளை எரித்து சாம்பலாக்கி விட முனையும் ஆரஞ்சுத் தோல் நிற சூரியன், புழுதிக்காற்று எழும் காய்ந்த வயல்கள், மெல்லிய போர்வையென நீரோடும் ஸோனாலி பாலி.

மழைக்காலம் வந்தாலோ வயல், ஏரி, ஆறு, குளம் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிட தீவுகளாக நீரில் மிதக்கும் கிராமங்கள். நெல் வயல்களில் முட்டையிடக் கூடுகட்டும் கிரௌஞ்சப் பறவைகள். பூக்களின் மேல் ஒரு காலை வைத்தமர்ந்து மீன் பிடிக்க நீரை உற்றுப் பார்க்கும் நீர்ப்பறவை.
குளிர்காலத்தில் வயல்களில் பனி மூடியிருக்க, கடுகுப் பூக்கள் வயல்களுக்கு மஞ்சள் பூசியிருக்கும். பசுக்கள் பாலைப் பொழிய, அறுவடை முடிந்த பயிர்களின் காய்ந்த அடித்தண்டு மட்டும் தரைக்கு மேலே நீட்டிக்கொண்டுருக்கும் வயல்கள்.

காட்சிகள் மட்டுமின்றி, ஊறிய சணல் தட்டையின் மணம் , பிரம்பு இலைகள் வேகும் மணம் போல பல விதமான வாசனைகள், பள்ளங்களிலிருந்தும் தாழ்நிலங்களிலிருந்தும் நீர் வடிந்து ஆற்றில் விழும் ஒலி என கிராமத்தைச் சுற்றி எழும் ஒலிகள் புலன்களை நிறைத்து கதையை உயிர்ப்புள்ளதாக்குகிறது. முதல் காட்சியில் நமைச் சூழும் நீரின் ஒலி கதை முழுவதும் தொடர்கிறது.

ஒரு மாபெரும் திரையில் தீட்டப்பட்ட இயற்கைச் சித்திரத்தில் ஆங்காங்கே அதன் ஒரு சிறு அங்கமாக காணப்படும் சிறு மனித ஓவியங்களாகவே இக்கதையின் சம்பவங்கள், கதை மாந்தர்கள் நினைவில் நிற்கிறார்கள். அந்த நதி நீர் குறையும் காலத்தில் மக்கள் ஆற்றை நடந்து கடக்கிறார்கள், மழைக்காலத்தில் நீர் பெருகி கிராமங்களைச் சூழ்ந்து கொண்டு தனித்த தீவுகளாக்குகிறது. தொன்மங்களின் ரகசிய அடுக்குகளைப் போல ஆழமறிய முடியாத பாவுசா ஏரி எண்ணற்ற மீன்களையும், வறண்ட காலத்தில் அல்லிக்கிழங்குகளையும் உணவாகக் கொடுத்தும், அவ்வப்போது உயிரைக் குடித்தும் கதை நெடுக உடன்வருகிறது. பருவ காலத்தைப் பொருத்து தானியங்களும் பயிர்களும் கண்ணை நிறைக்கின்றன. கண்ணுக்கெட்டிய வரை விரியும் பொன்னிற நெல் வயல்களும், இடையிடையே தண்ணீர்ப் பள்ளங்களில் துள்ளும் மீன்களும், வாசிக்கும்போதே நம் மேலே படர்ந்து விடும் புல்லின் ஈரமும் என நிலம் விரிகிறது.

இதில் வரும் பறவைகளை, மீன்களை, தாவரங்களைக் குறிப்பெடுத்து அவற்றை தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். பானசப் பாம்பு விழுங்க கூவிக் கொண்டே இருக்கும் ஹாட்கிலாப் பறவை, விருந்தினர் வரவைச் சொல்லும் இஷ்டி குடும் பறவை, நதியில் இருந்து மேலெழும்பும் கங்கா மைனாப் பறவைகள், ஜிஞ்சீ எனும் இரவுப் பூச்சிகள் என ஒரு மாபெரும் உயிர்த்தொகை. கோரைப்புல் காடு, பிரம்புப் புதரின் குளவிக்கூடு, சீதாப்பழ மரமும், கட்டாரி மரமும், காபிலா மரமும் சூழ்ந்திருக்கும் மாலதி வீடு. புகையிலை, உருளை, வெங்காயம், பூண்டு என வயலில் பயிரிடும் அவள் அண்ணன் நரேன்தாஸின் வயல். கல்யாண முருங்கை மரத்துக்குக் கீழே சணல் தட்டை வேலி போட்ட ஜாலாலியின் குடிசை. பவழமல்லி மரம், செம்பரத்தி மரம், செங்கடம்பு மரம், வெற்றிலைக்கொடி, வெள்ளரிப் பந்தல், பீர்க்கை, பாகற் பந்தல், தொங்கட்டான் மலர்ச்செடிகள், சகட மரம், காசித்தும்பைச் செடிகள் வளர்ந்திருக்கும் டாகுர் வீடு. ஜாம்ருல் மரம், பாதாபஹார் மரங்கள், வயலோரத்து மஞ்சத்தி மரங்கள், சோள வயல்கள், கோதுமை வயல்கள், பட்டாணி வயல்கள், சணல் தட்டை ஊறிய மணம், ஆகாசத்தாமரையும் அல்லியும் படர்ந்த ஏரி என அக்கிராமம் கண்ணுள் விரிகிறது.

இதில் வரும் பலவகையான வங்காள உணவு வகைகள்: சாறு நிறைந்த மஞ்சள் நிறக் கரும்பு, மர்த்தமான் வாழைப்பழம், வெள்ளை நாவற்பழம், மழைக்காலத்தில் தயாராகும் பனங்காய் வடை, வீட்டுக்கு வீடு மணம் கிளப்பும் பனம்பிட்டு, நெல் அவல், குளிர்காலத்தில் தயாராகும் எள்ளுருண்டை, கத்மா எனத் தின்பண்டங்கள். கொய்மீன் வதக்கல், பூண்ட்டி மீன் வற்றல், மற்றும் பல வகையான மீன்கள் என நீள்கிறது. இவற்றுக்கிடையே சுவையான உணவோ, மீன் வாடையோ கூட அண்டி விடக்கூடாத விதவை வாழ்வில், பிரம்புக் கொழுந்தை வேகவைத்து கடுகெண்ணையும் பச்சை மிளகாயும் சேர்த்து சாப்பிட கனவு காணும் மாலதி.

மாலினி, பாப்தா, இச்சா, போயால், சாந்தா, அலிமத்தி, சுர்மா, பொய்ச்சா மீன்கள். சேலா மீன்கள், மாச்ரங்கா மீன், டார்க்கீனா மீன்கள், புடவை கட்டிய பூன்ட்டி மீன்கள், பத்மா நதியின் கூட்டம் கூட்டமாகத் திரியும் இலிஷ் மீன்கள், ஸோனாலி பாலி ஆற்றின் மாலினி மீன்கள், பெரிய பாப்தா மீன்கள், காலி பாவுஷ் மீன்கள், மழைநீர் வடியத் தொடங்கும் காலத்தில் கிடைக்கும் பெரிய கல்தா சிங்கிடி மீன்கள், பாவுசா ஏரியின் ஆழத்தில் இருக்கும் பிரம்மாண்டமான ரூயி, காத்லா மற்றும் காலிபாஷஸ் மீன்கள் என மீன்களின் தேசமாகிய கிழக்கு வங்காளத்தின் மீன் வளம் பிரமிக்க வைக்கிறது.

வாசிப்பனுபவம்:

இக்கதையை வாசித்த பிறகு சில நாட்களில் கதையின் நிகழ்வுகள் பின்சென்று நிறம் மங்கத் தொடங்கியது. இந்நிலமே மனதை நிறைக்கிறது, கனவுகளாகி பெருகுகிறது. உயிர்ப்பெருக்கான ஒரு நிலம், விரிநீர் வெளிகள், திசைவிரிந்த வானில் பறந்தலைந்தபடி இந்நிலத்தை பார்த்த ஒரு உணர்வு. கல்கத்தா செல்லும் போது விமானப் பயணத்தில் கங்கை கடல் சேரும் முகப்பில் பல ஆயிரம் அகிடுகள் போல மடி பெருத்த வங்காளத்தை பார்த்த காட்சி நினைவில் வருகிறது. அடுத்தது காட்டும் பளிங்கென ஆழத்தை மறைத்து அருகெனக் காட்டும் உம்காட் நதியை (டாக்கி) ஸ்படிகம் என நீரோடும் சோனாலி பாலி நதியாக உருவகித்து எண்ணிக் கொண்டேன்.

ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!

ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம்
புல்லகுஸுமித த்ருமதள சோபினீம்

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!

இந்த வரிகளை இந்த நிலத்தில் வாழ்ந்த ஒருவர்தானே எழுத முடியும் எனத் தோன்றியது.

நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்குளிர்பூந்தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் நிறைந்த ஊர்ப்புறங்கள். கதையின் புறவயமான நிகழ்வுகள் நீலவானில் அலைந்து கரைந்து மறையும் மேகங்களென மெல்ல மெல்ல கடந்து சென்றுவிட நிச்சலன நீலமென நிலம் உள்ளே நிறைந்திருக்கிறது.

“அடிவானம் வரை பரந்து கிடக்கும் மைதானத்தில் இந்த நாளில் கரைந்து மறைந்துவிட யாருக்குத்தான் தோன்றாது? உலகம் முழுதும் நிலவில் முழுகிக் குளிக்கும்போது, ஆழமான நீரில் முழுகிச் சாக ஆசை யாருக்குத்தான் தோன்றாது?” – இக்கதையில் வரும் வரிகள். நீரில் மிதக்கும் நிலவுக்கான பாதையைப் பார்க்கும் போதெல்லாம் அதில் இறங்கி விடத்தோன்றும் பித்தின் தருணம் வாய்க்கப் பெற்ற ஒவ்வொருவருமே நீலகண்டப் பறவைக்கான தேடலில் தன்னை எங்கேனும் அடையாளம் காணக்கூடும்.

மிக்க அன்புடன்
சுபா

முந்தைய கட்டுரைகரோலினா நினைவுகள்
அடுத்த கட்டுரைபுனைவில் தொன்மங்கள் தேவையா?