ஆலயம் எவருடையது?
அன்புள்ள திரு ஜெயமோகன்,
வணக்கம். ஆலயங்கள் தொடர்பான உரையாடல்கள் இந்தத் தளத்தில் தொடர்ந்து நிகழ்கின்றன.ஆலய நிர்வாகத்தில் அனுபவம் மிக்க இந்துக்கள் நேரிடையாக ஈடுபட வேண்டும் என்று கோருவதும் அரசு தலையீடு கூடாதென்று கோருவதும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
அரசின் காப்பில் சிதிலமடைந்துள்ள ஆலயங்களில் பானை சோற்றுப் பதமாக 100 ஆலயங்களின் காணொளிகள் சமீபத்தில் ஈஷா சார்பில் வெளியிடப்பட்டன.
ஆலயங்கள் பற்றிய எவ்வித அக்கறையும் இல்லாமல் சில அதிகாரிகள் அவற்றைக் கையாள்வதன் சான்றுகள் அவை சான்றுகள்.
இன்று பெரும்பாலான ஆலயங்களில் அறங்காவலர் குழுக்கள் இல்லை.சமய அக்கறையும் சமூக அக்கறையும் மிக்க பல தொழிலதிபர்கள் அந்தப் பொறுப்பில் இருந்து செய்த பல சீரமைப்புகளை அறங்காவலர் குழுக்களின் பதவிக்காலம் முடிந்ததுமே அந்தத் துறை நிறுத்தி விடுகிறது.
ஓர் உதாரணம் சொல்கிறேன்.பொள்ளாச்சி அருகே புகழ்மிக்க அம்மன் கோவில் ஒன்று. அதன் அறங்காவலர் குழு தலைவராக பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து ஓர் இளம் தொழிலதிபர் பொறுப்பேற்கிறார்.
அம்மனுக்கு சார்த்தப்படும் புடவைகளை ஏலம் விடாமல் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் இந்துப் பெண்களுக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றுகிறார். பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ இல்லாத ஏழை இந்துக் குழந்தைகளுக்கான புகலிடம் உருவாக்குகிறார்.இவற்றுக்கெல்லாம் சட்டத்தில் இடமுண்டு.
அவருடைய பதவிக்காலம் முடிந்ததுமே துறையானது இந்த ஏற்பாடுகளை நிறுத்தி விடுகிறது. அறங்காவலர் குழு சொல்வதை நிறைவேற்றவே செயல் அலுவலர்கள் என்பது சட்டம். ஆனால் நிலைமை தலைகீழ்.
தீட்சிதர்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தந்திருக்கும் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப் பட்டால் அறநிலையத்துறை ஆலயங்களில் இருந்து வெளியேறி ஆக வேண்டும். நீங்கள் வேறு இந்தத் திட்டதிற்கு என் ஒப்புதலைத் தரமாட்டேன் என அறிவித்து விட்டீர்கள். எனவே இன்னும் சில ஆண்டுகளுக்காவது நீங்கள் ஜனாதிபதி ஆகாமல் பார்த்துக் கொள்ளும் ஜனநாயகக் கடமையை வேறு நான் ஆற்ற வேண்டி வந்து விட்டது.
நன்றி
அன்புடன்
மரபின் மைந்தன் முத்தையா
அன்புள்ள மரபின் மைந்தன்,
நீங்கள் என்னதான் சொன்னாலும் ஒரே கேள்வி எஞ்சியிருக்கும். ‘தகுதியும் திறமையும்’ உள்ள ‘இந்துக்களை’ ஆலயநிர்வாகிகளாக தேர்வுசெய்வது யார், அவர்கள்மேல் சாமானிய இந்துக்களுக்கு உள்ள கட்டுப்படுத்தும் அதிகாரம் அல்லது கேள்விகேட்கும் அதிகாரம் எது?
ஜனநாயகத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் மன்னரும் குடியரசுத்தலைவரும்தான்.ஓட்டு என்பதன் நேர்ப்பொருள் ஒப்புதல் என்பதுதான். அது உங்களுக்கு புரியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை, ஆரம்பம் முதலே நான் ஜனநாயகத்துக்காகவும் நீங்கள் எதிர்நிலையிலும் நின்று பேசிக்கொண்டிருக்கிறோம்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்
நீங்கள் ஆலயம் குறித்து சொன்னவை எல்லாம் காட்டிற்குள் நுழைவதற்கும் அப்படியே பொருந்தும். வனத்துறையிடமிருந்து காட்டை விடுவிக்கவேண்டும் என்றும் ஒரு குரல் உண்டு. வருகையாளர்கள் எண்ணிக்கை காட்டின் தாங்கும் சக்திக்குமேல் அதிகரித்தபோது ஆலயங்களில் என்ன நிகழ்ந்ததோ அதுவே காட்டிலும் நடந்தது. இரண்டிலும் இருப்பதும் ஒன்றுதானே!
அன்புடன்
நிக்கோடிமஸ்
அன்புள்ள நிக்கோடிமஸ்
உண்மையில் எவர் என்ன சொன்னாலும் இன்னும் சில ஆண்டுகளில் ஆலயத்தில் நுழைபவர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் சட்டங்கள் வந்தே தீரும். இன்றைய போக்கில் ஆலயங்களை அழித்துவிடுவார்கள். அதை எந்த நாகரீக சமூகமும் அப்படியே அனுமதிக்காது.
ஜெ
தமிழக ஹிந்து ஆலயங்கள் அறநிலைத்துறை வசமிருந்து மீட்கப்பட வேண்டும் என்று எழுந்து வரும் குரல்கள் தொடர்பாக ஜெயமோகன் ” ஆலயம் எவருடையது ” என்னும் கட்டுரையை எழுதியுள்ளார் . ஆரம்பம் முதலே இந்தக் குரலை ஒருங்கிணைக்கும் பெரிய அமைப்புகள் மீது அவநம்பிக்கையும் தனிமனிதர்கள் மீது ஓரளவு நம்பிக்கையையும் கொண்டிருக்கிறேன் . ஆலய வழிபாடுகளில் , சடங்குகளில் அரசின் தலையீடு எள்ளளவும் இருக்கக் கூடாது என்பது தான் என் நிலைப்பாடு . கணக்கு வழக்குகளை கையாள்வது குறித்து அதிருப்தி இருந்தாலும் மாற்று ஏற்பாடுகளை உருவாக்கும் வரை பொறுத்திருக்க வேண்டியிருக்கிறது .
அன்புள்ள அனீஷ்,
உங்கள் குறிப்பில் நான் எழுதியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதை நான் தெளிவாகவே எழுதியிருந்தேன். அரசியல்பிரச்சாரகர்கள் மற்றும் தன்னலமிகளின் உத்தி என்பது எழுதப்படுவனவற்றை எதிர்கொள்வது அல்ல. அவற்றை தங்கள் வசதிப்படி திரித்து அதன்மேல் மிகையான கோபவெறியையும் ஏளனத்தையும் வெளிப்படுத்துவது. அந்த திரித்தலை பரப்புவது.
நான் ஆலயங்கள் ஆகமமுறைப்படி அமைந்தவை, அவற்றை சிதைக்கவோ மாற்றவோ கூடாது என்கிறேன். இந்த விவாதத்தில் குறைந்தது பத்துமுறை அதைச் சொல்லிவிட்டேன். பதினெட்டு ஆண்டுகளாக அறிவுலகில் தனியாளாக ஓங்கிச் சொல்லிவருகிறேன். அப்படிச் சொல்லும் ஒருவன் ஆலயங்கள் வழிபாட்டிடங்கள் அல்ல என்று சொல்வானா என நீங்கள் எண்ணிப்பார்த்திருக்கலாம்.
ஆலயங்கள் ‘வெறும்’ வழிபாட்டிடங்கள் என்று சொல்பவர்களுக்கான பதிலே இக்குறிப்புகள் அனைத்திலும் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. அவை வழிபாடு நடக்கும் கட்டிடங்கள் அல்ல. அவை ஆகமமுறைப்படி அமைந்தவை, கல்லில் எழுந்த மந்திரங்கள். ஆகவே அவற்றைச் சிதைக்கக் கூடாது. அவை ’மேலதிகமாக’ பண்பாட்டு மையங்களும் வரலாற்றுச் சின்னங்களும்கூட. அந்நிலையில் மொத்த தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும், மானுட குலத்துக்கும் உரிமையுள்ள செல்வங்கள். ஆகவே அவற்றை பக்தர்கள் எனச் சிலபேர் தாங்களே முழுஉரிமை கொள்ளவும் தங்கள் தேவைக்கேற்பச் சிதைக்கவும் கூடாது. இதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எத்தனையோ முறை.
இக்கூற்றை ‘ஆலயங்கள் வழிபாட்டிடங்கள் அல்ல, அவை அருங்காட்சியகங்கள் என ஜெயமோகன் சொல்கிறார்’ என்று கொந்தளிப்பவர்கள் மூடர்கள் அல்ல, உள்நோக்கம் கொண்டவர்கள். அதை நீங்கள் கவனித்திருக்கவேண்டும். இத்தனை தெளிவாக மீளமீளச் சொல்லப்படும் ஒரு கருத்தை எப்படி இவர்களால் தலைகீழாகத் திரிக்க முடிகிறது? ஏனென்றால் அது அரசியல்வாதிகளின் வழி. ஆலயம், ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் இந்த காழ்ப்புநிறைந்த அரசியல்கூச்சல் உள்ளே நுழைவது சரியா, அதன்பின் எதையாவது எவராவது பொதுவெளியில் பேசமுடியுமா, உண்மை திரண்டுவருமா என நீங்கள் யோசிக்கவேண்டும்.
’ஆலயங்கள் வழிபாட்டுக்குரிய கட்டிடங்கள் மட்டுமே, அவற்றை தேவைக்கேற்ப என்னவேண்டுமென்றாலும் செய்யலாம், அழிந்தால் வேறு கட்டிவிடலாம்’ என திரும்பத்திரும்பச் சொல்லும் ‘பக்தர்களிடம்’ அப்படி அவை வெறும் கட்டிடங்கள் என்றால் வெளியே கொண்டுசென்று தெய்வத்தை நிறுவி வழிபடலாமே இந்தக் கட்டிடம்தான் வேண்டும் என்பதில்லையே என பதில் சொல்கிறேன். அந்த வரி தெளிவாகவே உள்ளது. பலமுறை விளக்கவும்பட்டுவிட்டது. அதன்பின்னரும் ‘ஆலயத்தெய்வங்களை வெளியே கொண்டு செல்லவேண்டும்’ என்று ஜெயமோகன் சொல்கிறார் என்று திரித்துச் சொல்பவர்கள் எத்தகையகவர்கள்? மெய்யாகவே அவர்களின் நோக்கம் ஆலயத்தை பாதுகாப்பதுதானா? அந்த பொய்யர்களிடம் ஆலயம் சென்றுவிட்டால் என்ன ஆகும்?
நீங்கள் இந்து அமைப்புக்களை அறிந்தவர்கள். விஸ்வஹிந்து பரிஷத் உட்பட இந்து இயக்கங்கள் சென்றகாலங்களில் உருவாக்கிய அமைப்புக்கள் இன்று எந்நிலையில் எவர் கையில் உள்ளன? விஸ்வஹிந்துபரிஷத்துக்காவது அவற்றில் உரிமை உள்ளதா? சங்கரமடம் நிறுவிய அமைப்புக்கள் என்ன ஆயின?சரி, இந்த அமைப்புக்களுக்கே உண்மையில் ஆலயம்- ஆகமம் ஆகியவற்றில் நம்பிக்கை உண்டா? உண்மை தெரியாதவரா நீங்கள்? அந்த மலைமுழுங்கிகள் ஆலயங்களுக்காக கிளம்பியிருக்கிறார்கள், அதன்பொருட்டே இந்த அவதூறு- திரிப்பு- காழ்ப்புப் பிரச்சாரம் என அறிந்துகொள்ள ஒன்றும் விசேஷபுத்தி தேவையில்லை.
இன்று சட்டென்று அத்தனை சாதிவெறியர்களும், பழமைவெறியர்களும் ‘ஆலயப்பாதுகாப்பாளர்களாக’ குதித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஒப்பிட ஜக்கி வாசுதேவின் அமைப்பு எவ்வளவோ நம்பகமானது. ஆலயங்களை இந்தக் கும்பல்களில் இருந்து பாதுகாப்பது பற்றிய பெரும் பீதியே என்னை இப்போது ஆட்கொள்கிறது.
ஜெ