முகம் விருது,ஸ்ரீனிவாச கோபாலனுக்கு

சமூகச் செயல்பாட்டிற்காக சேவை, இலக்கியம் வழியாகப் பணியாற்றும் ஆளுமைகளுக்காக குக்கூ அமைப்பால் வழங்கப்படும் முகம் விருது இந்த ஆண்டு ஸ்ரீனிவாச கோபாலன் வேதாந்த தேசிகனுக்கு வழங்கப்படுகிறது.

மலைவாழ் பழங்குடி மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த தோழர் வி.பி.குணசேகரன், பூம்பூம் மாட்டுக்காரர்களின் குழந்தைகளின் கல்விக்கு பணியாற்றிய பிரேமாவதி, ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்த நாகராஜன், சிறார் இலக்கிய முன்னோடி வாண்டுமாமா; பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் மரபு விதைகளைப் பாதுகாத்து ஆவணப்படுத்திய பேரறிஞர் வெங்கடாசலம், குழந்தைகளுக்குக் குப்பைப் பொருட்களிலிருந்து பொம்மைகள் செய்யக் கற்பிக்கும் ஆசான் சுபீத்; பாரா ஒலிம்பிக் போட்டிக்காக ஏராளமான மாற்றுத்திறனாளிகளை பயிற்சியளித்து அனுப்பிய அவ்வமைப்பின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் நாகராஜன்; திருப்பூர் காதுகேளாதோர் பள்ளிகூடத்தின் நிறுவனர் முருகசாமி;  கல்விச்சேவை புரிந்தவாடிப்பட்டி பொன்னுத்தாய் அம்மாள் ஆகியோருக்கு முகம் விருது அளிக்கப்பட்டுள்ளது. அவ்விருதை நானும் பெற்றிருக்கிறேன்.

ஸ்ரீனிவாச கோபாலன் தமிழில் அச்சில் இல்லாத பல அரிய நூல்களை வெவ்வேறு தளங்களில் தேடிக் கண்டடைந்து, தொழில்நுட்பத்தின் உதவியால் அவைகளை மின்-நூல்களாக இணையத்தில் தரவேற்றிப் பதிப்பிக்கும் பெரும்பணியை எவ்வித சிறு ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியுறச் செய்துவருகிறார். காகித அச்சிலும் பல முக்கிய நூல்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை ஆற்றிவருகிறார்.இவர் துவங்கியிருக்கும் பதிப்பகத்தின் பெயர் ‘அழிசி’.

நிறுவனப்பின்புலங்கள் கொண்ட பெருநூலகங்கள் மற்றும் செல்வப்பின்னணி உடைய பேரமைப்புகள் செய்வதால் மட்டுமே இப்பெரும்பணி சாத்தியப்படும் என்கிற மாயையை உடைத்து, தனிநபராக இருந்து தன் எளிய கணினியின் துணைகொண்டு ஸ்ரீநிவாசன் கோபாலன் அவர்கள் நிகழ்த்திவருகிறார். வரலாற்றில் எப்பொழுதும் முதலலையைத் துவக்கிவைப்பவர்களாக ஒருசில விதிசமைப்பவர்களே எஞ்சி அமைகிறார்கள். தோழமை ஸ்ரீநிவாசன் கோபாலன்  அத்ககையதொரு முன்துவக்கம் என்றே நாங்கள் கருதுகிறோம் என குக்கூ அமைப்பு குறிப்பிடுகிறது.

இவ்விருதளிப்பு நிகழ்வு, ஜூலை இறுதியில் தூத்துக்குடியில் கவிஞர் தேவதேவன் அவர்களின் இல்லத்தில் வைத்து ஒரு எளிய கூடுகையாக நிறைவுறும்.

ஸ்ரீனிவாச கோபாலனை நான் பத்தாண்டுகளுக்கு முன் தேவதேவனின் அணுக்க மாணவராக சந்தித்தேன். இந்தப் பத்தாண்டுகளில் அவருடைய வளர்ச்சியும் பணியும் நிறைவூட்டுவது. வாழ்த்துக்கள்.

தேவதேவன் கவிதைகள் முகப்படங்கள்

தேவதேவனை தவிர்ப்பது…

முந்தைய கட்டுரைகேரள கம்யூனிசமும் தலித்துக்களும்
அடுத்த கட்டுரைகுறளுரை- கடிதம்