கன்னித்தீவு- சி.சரவணக் கார்த்திகேயன்
எண்பதுகளுக்கு முந்தைய புனைகதைகளை பொதுவாக கணக்கிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்று அன்று எழுதப்பட்ட படைப்புகளில் கணிசமானவை கிடைக்காமலாகிவிட்டன. கிடைத்தாலும் அதிகம் படிக்கப்படுவதில்லை. சிற்றிதழ் சார்ந்த இலக்கிய வட்டத்து நூல்களே காலத்தை கடந்து வந்து நின்றுள்ளன. ஆனால் அன்றைய எழுத்துக்கள் அப்படி ஒட்டுமொத்தமாகக் கடந்துவிடுவதற்குரியவை அல்ல என்று இன்று தோன்றுகிறது. அவற்றின்மேல் ஒரு மதிப்பீட்டுப் பார்வை இன்று அவசியமாகிறது. தரப்பாகுபாடு இன்றியமையாததாகிறது.
உதாரணமாக பி.வி.ஆர் எழுதிய கூந்தலிலே ஒரு மலர், மிலாட் போன்ற நாவல்கள் தமிழுக்கு முக்கியமானவை என நினைக்கிறேன். அப்படியே பின்னுக்குச் சென்றால் மாயாவி எழுதிய கண்கள் உறங்காவோ இன்றும் சுவாரசியமாக படிக்கத்தக்க நாவல்தான். அவ்வாறு ஒரு பட்டியலை ஒரு பொதுவான விவாதம் வழியாக உருவாக்கினால் அந்நூல்கள் நிலைகொள்ளும் என்று தோன்றுகிறது.
ஏனென்றால் அவற்றில் தமிழ்நாட்டின் அந்தந்தக்கால உளநிலைகள், வேட்கைகள் பதிவாகியிருக்கின்றன. அக்காலப் பேசுபொருட்கள் வெளிப்பட்டுள்ளன. மதிப்பீடுகள் வெளிப்படுகின்றன. உதாரணமாக, கண்கள் உறங்காவோ நாவலில் மாயா என்னும் விதவை அத்தனை புரட்சிகரத்திற்குப் பின்னரும் மணம்செய்துகொள்ளவில்லை. அவளை மணக்கக்கூடுமென வாசகர் எண்ணிய விகாஸ் என்னும் இளைஞன் கொலைசெய்யப்படுகிறான். அன்றைய மதிப்பீடு அப்படி இறுதிக்கட்டத்தில் ஆசிரியரை தயங்க வைக்கிறது.
இன்று, இயற்கைவேளாண்மை சார்ந்த சபலங்களையும் பேச்சுக்களையும் பார்க்கையில் துமிலன் எழுதிய கிராமமோகினி என்னும் நாவல் நினைவில் வருகிறது. காந்தியின் கிராமநிர்மாண இயக்கத்தால் இலட்சியத்தூண்டுதல் அடைந்து கிராமத்துக்குச் சென்று விவசாயம் செய்ய முயன்ற ரஞ்சன் என்னும் இளைஞனின் கதையை நையாண்டியாகச் சொல்லும் நாவல் அது. இலட்சியவாதக் கிறுக்குடன் நிஜக்கிறுக்கும் சேர்ந்துகொள்கிறது. ஒரு முக்கியமான காலப்பதிவு அது,
இன்று ‘பொது வாசிப்புக்கு’ உரிய எழுத்துக்கள் அருகி வருகின்றன. ஏனென்றால் அவற்றுக்குச் சந்தை இல்லை. அவற்றுக்குரிய சந்தையாக இருந்த வணிக இதழ்கள் இன்று கதைகளை பிரசுரிப்பதில்லை. வெளியே உள்ள நூல்பிரசுரச் சூழலில் ’மில்ஸ் ஆண்ட் பூன்’ வகை காதல்கதைகள் [ரமணிச்சந்திரன் பாணி] ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் வகை துப்பறியும் கதைகள் [ராஜேஷ் குமார்]தான் படிக்கப்படுகின்றன. அவை வாசிப்பு என்னும் இயக்கத்தை நிலைநிறுத்த தேவையாகவைதான். ஆனால் அடுத்த கட்டத்திற்கு வாசகனை கொண்டுவருபவை பொதுவாசிப்புச் சூழலிலேயே இன்னும் தீவிரத்துடனும் ஆராய்ச்சியுடனும் எழுதப்படும் நாவல்கள்.
சி.சரவணக் கார்திகேயனின் கன்னித்தீவு அத்தகைய ஒரு நாவல். வாசிப்பை ஓர் இனிய பொழுதுப்போக்காகவும், சற்று தகவலறிவும் சிந்தனையறிதலும் கொண்டதாகவும் நிகழ்த்திக்கொள்ள விரும்பும் வாசகர்களுக்குரியது. கேளிக்கை எழுத்தின் அமைப்பும் மொழிநடையும் கொண்டது. பிவிஆர் நாவல்கள் போல இலக்கியச் சாயலையும் கொண்டுள்ளது.
இந்நாவலுக்கு முன்னோடியாக இரு நாவல்களைச் சொல்லலாம். ராஜேந்திர குமார் எழுதிய ‘அவன்,அவள், தீவு’. எண்பதுகளில் அது இளைஞர்கள் நடுவே ஓர் அலையை உருவாக்கிய நாவல்.
இன்னொரு எல்லையில் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் இருபது வருடங்கள். இருபது வருடங்கள் தமிழிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று. அந்தரங்கமான நேரடி வாழ்க்கைகளே இலக்கியம் என பரவலாக நம்பப்பட்ட காலத்தில் வெளிவந்தமையால் கவனிக்கப்படாது போயிற்று. ஆனால் இன்றைய வாசகனுக்கு ஆழமான குறியீட்டுத்தன்மை கொண்ட முக்கியமான ஆக்கமாக அது தென்படும்.
பிரிட்டிஷ் எழுத்தாளர் வில்லியம் கோல்டிங்கின் Lord of the Flies என்னும் நாவல் நோபல் பரிசு பெற்றபோது அதை நான் வாசித்தேன். அப்போதுதான் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எழுதிய நாவலின் முக்கியத்துவம் தெரிந்தது
^னின் கன்னித்தீவு ராஜேந்திரகுமாரின் நாவலின் சில கூறுகளைக் கொண்டுள்ளது. ஆண்பெண் உறவு பற்றிய சீண்டும்தன்மையுள்ள வரிகளும் சித்தரிப்புகளும். பெண்ணின் பார்வையில் அவை நாவலில் வந்தாலும்கூட ஆணின் பார்வையில் எழுந்தவையே. ஆனால் செய்தித்தொகுப்பு, நுண்தகவல்கள் வழியாக ஓர் உலகை உருவாக்க முயல்தல் ஆகியவற்றில் அது எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் இருபது வருடங்களுக்கு அண்மையில் வருகிறது. இவ்விரு கூறுகளின் கலைவை என இந்நாவலைச் சொல்லலாம்.
’மானுடப் பண்பாட்டுடன் தொடர்பற்ற ஒரு தீவு’ என்பது நீராவிக்கப்பல் வழியாக கடற்பயணங்கள் உருவான காலம் முதலே புனைகதைகளில் இடம்பெறுவது. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் வாசகர்களுக்கு கடற்பயணக்கதைகளில் மிகப்பெரிய ஈடுபாடு இருந்திருக்கிறது. ஆகவே ஏராளமாக எழுதப்பட்டிருக்கின்றன. அனைவரும் அறிந்த டானியல் டூஃபோவின் ராபின்சன் குரூசோ அதில் ஒரு தொன்மம் என ஆகிவிட்ட செவ்வியல் படைப்பு.
மானுடப்பண்பாட்டின் ஒட்டுமொத்தம் என்ன? இந்தப் பண்பாடு இவ்வாறன்றி வேறெவ்வகையிலேனும் பரிணாமம் அடைந்திருக்கக் கூடுமா? மானுடப்பரிணாமம் உருவான படிநிலைகள் என்ன? – இத்தகைய வினாக்களுக்கு விடைதேடுவனவாகவே தீவுகள் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆளில்லா தீவில் சென்று தங்கநேரும் சிறுவர்கள் சில ஆண்டுகளில் இன்றுள்ள மானுடப் பண்பாட்டின் ‘மினியேச்சர்’ ஒன்றை உருவாக்கிவிடுவதைச் சொல்லும் வில்லியம் கோல்டிங்கின் நாவல் அவ்வகையில் ஒரு சாதனைப் படைப்பு.
அந்தவகையிலான ஒரு முயற்சி என்று கன்னித்தீவைச் சொல்லலாம். கதைநாயகி பார்வதி நிறைமாதப் பெண். அவள் தேர்தல் பணிக்காக அந்தமானுக்கு அனுப்பப் படுகிறாள்.[நிறைமாதக் கற்பிணியை அப்படி அனுப்புவதில்லை, தாய்மைவிடுப்பு என்பது சட்டபூர்வ உரிமை. அது ஒரு பிழை. அதை வரவு வைத்துக்கொண்டு மேலே வாசிக்கலாம்] அவர்கள் ஓங்கே மக்கள் வாக்களிக்கவேண்டிய சாவடி ஒன்றுக்குச் செல்கிறார்கள். படகு கவிழ்ந்து கடலில் விழும் பார்வதி
தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் வழியாகச் செல்லும் நாவல் இது. கடலில் இருந்து பார்வதியுடன் கரையொதுங்கிய நிக்கியை அவள் காப்பாற்ற முயல்வது, அவளை வன்புணர்வு செய்ய முயல்வது, அவள் தப்பி ஓடுகையில் அந்த தீவிலிருக்கும் லெமூரியர்கள் அவளை வளைத்துக் கொள்வது, அவர்களின் ஈட்டிகளிடமிருந்து அவர்களில் ஒருத்தியாகிய கருப்பி அவளைக் காப்பாற்றுவது என கதை விரைகிறது.
இந்நாவலை அத்தீவு பற்றிய சித்திரம் என கொள்வதை விட, அதைப்பற்றி பார்வதி புனைந்துகொள்ளும் சித்திரம் என்று கருதலாம். அங்கே வரும் ஒரு பெண்ணை அவள் முதலில் கருப்பி என பெயரிடுகிறாள். அவள் கையில் குழந்தை இருக்கக்கண்டு அன்னை மரியா என்ற பொருளில் மரியா என பெயரிட்டுக்கொள்கிறாள்.
இந்நாவலை ஓர் மானுடவியல் நாவல் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் பொதுவாக பழங்குடிகளைப் பற்றியிருக்கும் சித்திரங்களே இந்நாவலில் உள்ளன. அவற்றுக்கான மானுடவியல் தரவுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. பழங்குடிப் பண்பாட்டில் உள்ள சுதந்திரமான பாலுறவு [மரியாவும் கருமனும் பாலுறவு கொள்ளும் காட்சி] குறிப்பாகச் சொல்லப்படவேண்டியது.
நிரந்தரச் சார்பின்றி விரும்பியவர்கள் விரும்பியவர்களுடன் இருந்துகொள்ளும் வாழ்க்கை முறை என அதை பார்வதி நினைக்கிறாள். அதை வேறொரு வகையில் ஈ.வெ.ரா சொல்லியிருப்பதை அவள் வாசிக்கும் இடம் வருகிறது.
பார்வதி அந்தப் பழங்குடிகளை புரிந்துகொள்வதை விட புனைந்துகொள்ள முயல்வதையே நாவல் முழுக்கவும் காண்கிறோம். அந்த தீவில் அம்மா என்னும் கருத்துருவையே அவள் உருவாக்குகிறாள். அப்பா என்பதை பெண்களுக்குச் சொல்லிக்கொடுக்க முயல்கிறாள். அவளிடமிருந்து தெரிந்துகொண்டு மரியா பார்வதியை கட்டாய உறவு கொள்ள முயலும் கருமனை கொல்கிறாள்.அந்தத் தீவில் பார்வதி எஞ்சவிட்டுச் செல்லும் ‘நாகரீகம்’ என்ன என்னும் வினாவுடன் நாவல் முடிகிறது.
இந்நாவலின் மொழிநடையின் ஒழுக்கு என்பது இது பொதுவாக இங்கே பேசப்படும் நடையில் உள்ளது என்பதனால் அமைவது. “மோகம் முப்பதுநாள் ஆசை அறுபதுநாள் என்பார்கள். முழுதாய் ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும்கூட அவனைப் பார்த்தாலே கண்கள் விரிகிறாள். நேரில் பார்ப்பதை விடுங்கள், வனை நினைத்தாலேகூட மலர்கிறாள்” என ஆசிரியர் கூற்றாகவே அந்த பொதுப்பேச்சு நடையே வருகிறது.
திரைப்படங்களின் தாக்கமும் வலுவாகவே உள்ளது. பார்வதியை வல்லுறவு கொள்ள முயன்று துரத்தும் நிக்கி “இப்பவே எல்லா மூச்சும் வாங்கிட்டா எப்படி மேடம்?”என்கிறான். இந்த மொழிநடை இலக்கியவாசகர்களுக்கு உகப்பது அல்ல. பொதுவாசகர்கள் இயல்பாக வாசித்துச்செல்ல உதவக்கூடும்.
ஒரு சரளமான வாசிப்பனுபவம், சமகாலத்தில் பேசப்படும் அரசியல் சமூகவியல் கேள்விகள் ஆகியவற்றுக்காக பொதுவாசகர்களால் வாசிக்கப்படத்தக்கது இந்நாவல்.