வெற்றி – கடிதம்

வெற்றி -முடிவாக

வணக்கம் ஜெ

வெற்றி சிறுகதை வாசித்தேன். கதை வாசிக்கும் உணர்வே இன்றி மடமடவென சென்றுவிட்டது. ரங்கப்பர், நமச்சிவாயம், லதா இவர்களில் யார் வென்றது? ஒரு வகையில் பார்த்தல் மூவரும்தான் என்று தோன்றுகிறது. யார் எதை வெற்றியாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பொருத்தது அது.

ரங்கப்பர் ஒரு ஜமீன்தார். தன பணத்தால் பல பெண்களை வென்றிருப்பதாக சொல்கிறார். ஆனால் அவரை பணவெறிபிடித்த பெண்பித்தன் என்ற கோணத்தில் இருந்து சற்று வேறுபடுத்திக்காட்டுவது ‘என் பணமும், ஆணவமும் எந்தப் பெண்ணிடமாவது தோற்காதா’ என்று அவர் உள்ளூர ஏங்கியதுதான். ‘உறவுகொண்டபின் உப்பரிகையில் நின்று அழுதிருக்கிறேன். எந்த நம்பிக்கையில் வாழ்வது என்று தெரியாமல்…’ என்று அவர் கூறுவது அவரின் இரட்டைத் தன்மையைக் காட்டுகிறது. பெண்களின் ஸ்திரமற்ற தன்மை அவருக்கு ஏமாற்றத்தையும், அதேவேளை அத்தன்மையை அவர் தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்தியிருக்கிறார்.

நமச்சிவாயம் ஒரு சாதாரண ஏஜெண்ட். பிறரைப்போல பணமும், அதிகாரமும், வசதியும் கொண்ட வாழ்வில் வேட்கை உடையவர். க்ளெப்பில் உறுப்பினராக இருந்தது உட்பட அவரின் வாழ்வின் நோக்கம் முழுதும் வசதிவாய்ப்புகளை நோக்கியே இருந்தது. தன் மனைவி அவரிடம் பணிந்துவிடக்கூடாது என்பதைவிட அந்த ஐந்து லட்சம் தரும் வாழ்க்கையே பெருங்கனவாக இருந்தது.

நமச்சிவாயத்திற்கும் லதாவிற்கும் உள்ள உறவு அவ்வளவு ஆழமானதாக இல்லை. வேலைக்குச் சென்று மதியம் வீடு வந்து, உண்டு உறங்கி, மீண்டும் க்ளப்புக்குச் சென்று குடித்துவிட்டு நள்ளிரவு வீடு வந்து உறங்கிவிடுகிறார். தான் தன் மனைவியிடம் அதிகம் பேசுவதேயில்லை போன்ற வரிகள் அவர்களுக்கு இடையில் காதல், பரிவு, அன்பு யாவும் இல்லை என்பதையே காட்டுகிறது. வசதியற்ற குடும்பம், மூன்று பிள்ளைகள், அதில் ஒருவனுக்கு தீராத வியாதி, இதற்கிடையில் காதலும், அன்புமற்ற மணவாழ்க்கை. இப்படிப்பட்ட சூழலில் லதா அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கியிருப்பதில் ஆச்சர்யமில்லை.

சனிக்கிழமை மாலை அவள் ரங்கப்பருடன் சென்றுவிடுகிறாள். ஞாயிறு காலை இருவரும் மருத்துவமனையில் இருக்கிறார்கள். அன்று இரவு அவள் ரங்கப்பருடன் இருந்திருக்கிறாள். ஆனால் அந்த இரவில் என்ன நடந்தது என்று சொல்லப்படவில்லை. அப்படி சொல்லாமல் விட்டுவிட்டதுதான் கதையின் சுவாரஸ்யத்திற்குக் காரணம். இரண்டில் ஏதோவொன்று நடந்திருக்க வேண்டும். அவளை மனதளவில் வென்றதுகூட ரங்கப்பருக்கு வெற்றிபோலத்தான். இறுதியில் என்னை வென்றதற்கு ரங்கப்பர் கொடுத்த பரிசு என்று அவள் சொன்னது அவளின் மனதை வென்றது என்ற அர்த்தத்தில்கூட இருக்கலாம். ஆனால் வாழ்வின் இறுதியில் அதை நமச்சிவாயத்திடம் அவள் சொல்லக் காரணம்? அவள் முழுமையாக ஏதும் சொல்லிவிடவில்லை. வாழ்நாள் முழுக்க அன்பும், அரவணைப்பும் இல்லாத வாழ்க்கையைக் கொடுத்ததற்காக நமச்சிவாயத்தின் முகத்தில் அறைந்தாற்போல இருப்பதற்காக சொன்னாளோ ?

க்ளப்பில் ரங்கப்பர் தான் தோற்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார். அவர் அவ்வாறு தான் தோற்றதாகச் சொன்னதில் அவருக்குப் பெரிய இழப்போ, பழியோ இல்லை. யாரும் அவரை, ‘இந்த ஜமீன்தார் யாரோ ஒரு பெண்ணை மடக்கிக்காட்டுவதாக பந்தயம் கட்டி தோற்றுவிட்டார்’ என்று தூற்றப்போவதுமில்லை. அவர் உள்ளூர விரும்பியபடி அவரின் பணபலம் லதாவிடம் தோற்றுவிட்டதை எண்ணி மகிழ்ந்திருக்கவும் வேண்டும். ஆனால் வெற்றி பெற்றதாகச் சொல்லியிருந்தால், அதன் பின் நமச்சிவாயத்தின் நிலை?

லதா தன் குழந்தையைக் காப்பாற்றிவிட்டாள். தன் மோசமான கணவனையும் எதோ ஒருவிதத்தில் பழிவாங்கிவிட்டாள். இதில் நமச்சிவாயமும் வென்றார் என்று சொல்லக் காரணம் அவர் வெற்றி எனக்கருதியது வசதியான ஜமீன்தார் வாழ்க்கையைத் தான். அது அவருக்கு கிடைத்துவிட்டது.

நமச்சிவாயம் லதாவை மருத்துவமனையில் பார்த்தபோது அவளுக்கு ஒரே நாளில் பத்து பதினைந்து வயது கூடிவிட்டது போல தோன்றியது அவரின் பிரமையா? இக்கதையை வாசித்து முடிக்கும்போது வரும் எல்லா ஊகங்களுக்கும் காரணம், அன்று இரவு ரங்கப்பருக்கும், லதாவிற்கும் என்னநடந்தது என்று சொல்லாமல் இருந்ததுதான். கடைசியில் ரங்கப்பர் தன்னை வென்றுவிட்டதாகச் சொன்னது உடலாலா? மனத்தாலா? மனத்தால் லதா வெல்லப்பட்டாள் என்பது வெளிப்படை.

இதுபோக இக்கதையில் முக்கியமான ஒன்று, பெண்கள் அருவமான எதையும் ஆசைப்படுவதில்லை, அதனால்தான் அவர்களில் துறவிகளோ, ஞானிகளோ இல்லை, அவர்கள் வாழ்க்கை முழுக்கவும் பொருட்களுடன் கட்டப்பட்டுள்ளது, என்பது. இதுகுறித்து நான் பல முறை எண்ணியிருக்கிறேன். இன்றைய சூழலில் பெண்கள் நிர்வாகத்தில், தொழில்துறையில், விளையாட்டில் தங்களை நிறுவிக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்தியாவில் இத்தனையாண்டு காலத்தில் ஆன்மிகத்திலும், தத்துவத்திலும் பெண்களின் இடம் என்ன என்பது கேள்விக்குரிய ஒன்று. இதற்கும் சமூக சூழலையே காரணமாகவும் காட்டலாம்.

நான் இக்கதையை இன்று காலை படித்து முடித்துவிட்டு, தினமணி நாளிதழலைப் பார்த்தபோது அதில் வந்த ஒரு கட்டுரை இவ்விஷயத்தோடு தொடர்புடையதாக இருந்தது. புத்தர் வீட்டைத் துறந்து சென்றதுபோல யசோதரையும் சென்றிருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும்? அவள் துறவு மேற்கொண்டு, ஞானம் பெற்றிருந்தால் இச்சமூகம் எந்த அளவிற்கு ஏற்றிருக்கும் என்பது கேள்வியே.

நன்றி

விவேக்.

***

முந்தைய கட்டுரைகம்பராமாயணம் வாசிக்க…
அடுத்த கட்டுரைகாத்தருள்க என் மகவை- கடிதங்கள்