புனைவில் தொன்மங்கள் தேவையா?

அன்புள்ள ஜெ

நாம் நமது தினசரி சிக்கல்களிலிருந்தும் நமது மனதில் உருக்கொள்ளும் என்னற்ற உரையாடல்களிலிருந்தும் தொன்மத்தை கொண்டு வெளியேறுவதில்லை,கடப்பதில்லை.அதை நாம் தர்க்கம் கொண்டும் கடக்கலாம் அல்லது அதனாலேயே பிறழலாம்,அல்லது அதனூடேயே வாழலாம்.

இன்று நாவல்கள், கதைகளில் ஒரு சிக்கலை தொன்மத்தோடு இணைத்து விட வேண்டும் என்ற எண்ணம், நோக்கு உள்ளது.நமது சிக்கல்கள் அனைத்தும் ஏன் ஒரு தொன்மத்தோடு இணைந்தே ஆக வேண்டும்?

இன்று ஒரு இயந்திரத்தின் திறன் பலநூறு பேரை வேலையிலிருந்து நீக்கி விடக்கூடும்.வேலைக்கு தேவை ஆனால் ஊதியம் அதிகம் தர இயலாது என்ற நிலை சென்று வேலைக்கு தேவையில்லை உன் வேலையை இயந்திரமே செய்து விடக்கூடும் உனக்கான ஊதியம் உன் மீது அரசும் நிர்வாகமும் கொள்ளும் கருணை என்ற நிலை வரும் காலத்தில் நாம் இருக்கிறோம்.இவற்றை போன்ற சிக்கல்களை நாம் ஏன் தொன்மத்தில் இனைத்து பேச வேண்டும்?

சர்வோத்தமன் சடகோபன்

மலோஹ் Moloch

அன்புள்ள சர்வோத்தமன்,

புனைகதைகளில் வேண்டுமென்றே தொன்மங்களை இணைக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. இணைத்தால் அவை பொருந்தாமல் நின்றிருக்கும்.

தொன்மங்களின் பயன் என்ன? அவற்றின் பெயர்சுட்டுவதுபோல அவை தொன்மையானவை. இன்றிருக்கும் ஒன்றை தொன்மையான, காலம்கடந்த ஒன்றுடன் இணைக்கும் பொருட்டே கதைகளில் தொன்மங்கள் இணைக்கப்படுகின்றன.

அப்படி இணைக்கப்படுமென்றால் அந்தப் பேசுபொருள் காலம்கடந்ததாக இருக்கவேண்டும். என்றென்றும் உரிய சிக்கலாக இருக்கவேண்டும். தொன்மத்துடன் இணைப்பதன் வழியாக “இது காலந்தோறும் உள்ள மானுடப் பிரச்சினை. இது வாழ்க்கையின் போக்கில் உருவாவது அல்ல. இது மானுட அகத்திலோ அல்லது இயற்கையிலோ உள்ளுறைந்துள்ள ஒன்று” என்று சொல்கிறோம்.

ஆகவே இன்றைய வாழ்க்கையில் இன்று மட்டுமே பொருட்படுத்தப்படவேண்டிய சிக்கலுக்கு தொன்மங்களை இழுக்கவேண்டியதில்லை. முயன்றாலும் தொன்மங்களுடன் அவற்றைப் பிணைக்கவும் முடியாது. ஓர் இயந்திரம் பலநூறுபேரை வேலையில் இருந்து அகற்றுகிறது. அது நவீனகாலகட்டத்தின் சிக்கல். பதினேழாம்நூற்றாண்டில் இயந்திரப்புரட்சி உருவானபின் எழுந்த ஒன்று.

[இந்தப் பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டது தானியங்கி தறிகள் வந்தபோது. அவை ஆற்றோட்டத்தின் விசையால் இயக்கப்பட்டன. எஸ். நீலகண்டன் எழுதிய ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை என்னும் நூலில் இதன் முழுச்சித்திரத்தைக் காணலாம்]

இந்தப்பிரச்சினையை பேசும்போது இரு கோணங்கள் உள்ளன. ஒன்று, இந்த்ப்பிரச்சினையை மட்டுமே பேசவேண்டும். அவ்வாறு பேசினால்தான் நடைமுறைத் தீர்வை நோக்கிச் செல்ல முடியும். அவ்வாறு பேசும்போது அதில் எந்த வரலாற்று ஊடாட்டமும் இருக்கலாகாது. எந்த தொன்மமும் இணையலாகாது. அப்போதுதான் அந்த பிரச்சினை கூர்மைபெறும்.

ஆனால் அதன் ஒரு படைப்பாளி தத்துவார்த்தமாக நீட்டலாம். காலந்தோறும் மானுடர் அவர்கள் படைத்தவற்றால் ஆட்சிசெய்யப் படுகிறார்கள். அவர்களின் கற்பனையால் அவர்களின் சொந்தக் கைகளால் உருவான ஒன்று அவர்களை அடிமைப்படுத்துகிறது, அவர்களால் அதை வெல்லமுடியாது. ஒருபோதும் அதைக் கடக்கமுடியாது. இந்த உண்மையை நோக்கி அக்கதையைக் கொண்டுசென்றால் என்ன ஆகும்?

அதற்கு தொன்மம் தேவைப்படுகிறது. மனிதன் படைத்தவையே தெய்வம், அரசன், அரசு, பணம் அனைத்தும். அதைச் சுட்டும் ஆழ்ந்த படிமம் ஒன்று அனைத்தையும் பெருஞ்சித்திரமாகக் காட்டிவிடும். அவ்வாறன்றி அத்தகைய முழுச்சித்திரத்தை காட்டவேண்டும் என்றால் கதைக்குள் பக்கம் பக்கமாகப் பேசவேண்டும். நேரடியாகச் சொல்லவேண்டும். அது கலையே அல்ல. அத்துடன் அது ஆசிரியர்கூற்றாகவே இருக்கும், வாசகனால் விரித்தெடுக்கப்படாது.

நவீனத்தொன்மம் அல்லது நவீனப்படிமம் ஒன்றைக் கையாளலாமே என்று கேட்கலாம். அவ்வண்ணம் கையாள்கையில் அந்த கதை காலாகாலமாக, என்றென்றுமாக என்ற பொருளை பெறுவதில்லை. காலம்கடந்த தன்மை ஒன்று கதைக்குள் தேவைப்படுகிறது. ஆகவேதான் தொன்மம்.

இந்தக் கருவுக்கே சிறந்த உதாரணமாக அமையும் கதை ஒன்று உண்டு. அலக்ஸாண்டர் குப்ரினின் மலோஹ். மலோஹ் என்பது பண்டைய பாகன் மதத்தின் அக்கினித்தெய்வம். நெருப்பை மனிதனால் உருவாக்க முடியும். அதன்பின் அதில் அவனுக்கு கட்டுப்பாடே இல்லை. ஒரு தொலைநிலத்தில் தொழிற்சாலை ஒன்றை உருவாக்க வரும் இளம்பொறியாளன் பல்லாயிரம்பேரின் வாழ்க்கையை விழுங்கும் அக்கினிக்கடவுளை அவன் எழுப்பிவிட்டதை உணர்கிறான்.

அவன் அந்த ஆலையை ஒரு சிறு லிவரை இழுப்பதன் வழியாக அழிக்க முடியும். அதில் கையை வைக்கிறான். ஆனால் இழுக்க முடியவில்லை. முடியவே முடியாது. மானுடத்தின் வரலாற்றில் எப்போதுமே அதற்கு முடிந்ததில்லை. அந்த தரிசனம் அக்கதையை ஒரு நடுக்கமூட்டும் அனுபவமாக ஆக்குகிறது. கவனியுங்கள் ‘மானுடவரலாற்றில் எப்போதுமே’ என்ற சொல்லே அக்கதையின் ஆழம். அந்த உணர்வை ஊட்டுவது மலோஹ் அதில் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதனால்தான்.

அக்கதையை வெறும் தொழிற்சாலையாக எழுதியிருக்கலாம். அந்நெருப்பை ஒரு நவீனக்குறியீடாக ஆக்கியிருக்கலாம். ஆனால் எப்போதுமே என்னும் உணர்வு, அது அளிக்கும் பெருந்திகைப்பு உருவாகியிருக்காது

ஜெ

பொருளின் அறமும் இன்பமும்

முந்தைய கட்டுரைநீலகண்டப் பறவையின் நிலம்
அடுத்த கட்டுரைமுதுநாவல்