வெண்முரசிற்குப் பிறகும் அதைவிட அதிகமான ஆற்றலோடு இயங்கி வருகிறீர்கள். தொடர் சிறுகதைகள், குறுநாவல்கள், பேருரைகள் மற்றும் சினிமாப் பணிகள் என. உங்களுடைய செயலூக்கம் எப்போதுமே என் போன்றவர்களுக்கு உற்சாக டானிக்தான்.
குறிப்பாக, கி.ரா. அவர்களின் மிச்சக் கதைகள் நிகழ்வின் போது உங்களிடமிருந்த பூரிப்பு, எங்கிருந்து இதற்கான ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்று எண்ணாமலிருக்க விடவில்லை. நித்யாவிடம் நீங்கள் கண்ட அதே குழந்தையின் பூரிப்பாகவும் இது இருக்கலாம். தங்களின் இலக்கியப் படைப்புக்களே உங்களை நோக்கி ஈர்த்தாலும், அந்த படைப்பாளியை கட்டமைத்தவைகளை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்று மட்டுமல்ல. அவசியமான ஒன்றும் கூட என எண்ணுகிறேன். இதற்கான பதில்கள் உங்களுடைய இணைய தளம் முழுவதும் கொட்டிக் கிடந்தாலும், அதற்கு தன்மீட்சி, நலமறிதல், ஜெ.சைதன்யாவின் கல்விச் சிந்தனைகள் மற்றும் சமீபத்திய யதி தத்துவத்தில் கனிதல் என மிகச் சிறந்த வடிவங்களில் அதனை அள்ளி எடுத்திருக்கிறது தன்னறம் நூல்வெளி. தமிழினி உங்களை கட்டமைத்தது என்றால், தன்னறம் அதை வெளிப்படுத்தி இருக்கிறது எனலாம்.
உங்களுக்கு கிடைத்திருக்கும் குருமரபே உங்களுடைய இந்த ஆளுமைக்கு காரணம் என்ற முடிவுக்குத் தான் நான் செல்கிறேன். முற்போக்கு என்று சொல்லிக் கொள்ளும் பொருள்முதல்வாத தரப்பால் முழுவதுமாக உதாசீனப்படுத்தப்படும் சுருதியின் (மரபின் அறிவுக்கொடை) அருமையறிந்த, தன் உள்ளுணர்வுகளுக்கான காரணங்களை அறிய முடிந்துகொண்ட உங்களுடைய கருத்துமுதல்வாதத் தரப்புதான் உங்களுடைய ஆளுமையை தொடர்ந்து செம்மைப் படுத்துகிறது என்பதாகவும் புரிந்து கொள்கிறேன்.
நான், பிறர் என்பதை தொடர்ந்து கட்டமைக்கும் ஒரு கூட்டத்தால் அந்த பிறர் என்ற ஒன்று இல்லாமல் முன்னகரவே முடியாது என்பதைத் தான் தற்போதைய பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்டுகளும் தொடர்ந்து நிரூபிக்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த பெரும் கொடைகளான பெரியாரையும், அம்பேத்கரையும் பிராமண எதிர்ப்பு, மற்றும் இந்து மத எதிர்ப்பு என்ற ஒரு சின்ன வட்டத்தில் தங்களுடைய வசதிக்கேற்ப ஒடுக்கிக் கொண்டு நாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்கிறார்கள். அத்தி பூத்தார் போல் இக்குறையைச் சுட்டிக்காட்ட மார்க்சியம் தெரிந்த மார்க்சியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழினியில் கிடைத்த இவ்விரு புத்தகங்களையும் தொடர்புபடுத்தி, எனக்குக் கிடைத்த புரிதல்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
அன்புடன்
முத்து