கதாநாயகி

சென்ற மேமாதம் 7 ஆம்தேதி [7-5-2021] இரவு ஒன்பது மணிக்கு சாப்பிட்டுவிட்டு என் எழுத்தறைக்கு வந்தபின் இணையத்தில் எதையோ அளைந்துகொண்டிருந்தேன். தீவிரமான மனநிலை இல்லாமல், வெறும் பொழுதுபோக்காக எதையாவது வாசிப்பது அல்லது கடந்தகால நினைவுகளை எழுப்பும் எழுபதுகளின் மலையாளப் பாட்டுக்கள் கேட்பது எனது வழக்கம். அன்று ஜோசஃப் ஷெரடன் லெ ஃபானுவின் ’கார்மில்லா’ என்ற கதையை நாலைந்து பக்கம் வாசித்தேன்.எனக்கு பிடித்தமான ரத்தக்காட்டேரிக் கதை அது. அவ்வகை கதைகளில் அதுவே முன்னோடி. பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலாவுக்கும் முன்னுதாரணம் அதுவே.

ஆனால் அதை மேலே வாசிக்க முடியவில்லை. என் அம்மாவுக்கு பிரியமான எழுத்தாளரான ஃபேன்னி பர்னியின் நாவல் நினைவுக்கு வந்தது. பதினேழாம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்தான் அம்மாவுக்கு பிடித்தமானவர்கள். அம்மா அவர்களைக் கொண்டாடினார். அன்றைய திருவிதாங்கூரின் அறிவுஜீவிகளுக்கு பிரிட்டிஷ் எழுத்தாளர்கள்தான் இலக்கியத்தின் சிகரங்கள். பலர் இன்று வரலாற்றில் இருந்தே மறைந்துவிட்டனர். ஃபேன்னி பர்னி அவ்வாறு மறைந்துவிட்ட ஒரு படைப்பாளி.

அது ஒரு திருவிதாங்கூர் மனநிலை, அவர்கள் அனைவருமே ஆங்கிலேயரை வழிபட்டவர்கள். திருவிதாங்கூருக்கு காவல்தேவதைகளாக இருந்தவர்கள் பிரிட்டிஷார். திப்புசுல்தானிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியவர்கள். புகழ்பெற்ற மருத்துவமனைகளை, கல்விநிறுவனங்களை உருவாக்கியவர்கள். மிகச்சிறந்த ஆசிரியர்களும் மக்கள்சேவையாளர்களும் அவர்களில் உண்டு. மருத்துவஞானி டாக்டர் சாமர்வெல் போல. பெண்கல்விக்கு அடித்தளம் அமைத்த டதி அம்மையார் போல. அவர்களை பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அதெல்லாம் ஒருவகையில் என் அம்மாவுக்கு நான் செய்யும் கைமாறு. அம்மா மதித்துக் கொண்டாடிய ஆளுமைகள் அவர்கள். அம்மா எழுத எண்ணி எழுதாமல் விட்டுவிட்ட வரலாற்று ஆளுமைகள்.

ஃபேன்னி பர்னியும் கார்மில்லாவும் கலந்து குழைந்த ஒரு மனநிலை. வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்தது. நான் ஓயாமல் மழை பொழியும் பேச்சிப்பாறை காட்டை நினைவுகூர்ந்தேன். நான் அங்கே சென்று சிலவாரங்கள் தங்கியது 1980ல். சட்டென்று ஒரு தூண்டுதல் பெற்று கதாநாயகியின் முதல் அத்தியாயத்தை எழுதினேன். முடித்ததுமே அதை பிரசுரித்துவிட்டேன். எழுதிய பதினைந்தாம் நிமிடத்தில் பிரசுரமாகிவிட்டது. சற்று தாமதித்தால்கூட பிரசுரிக்காமலிருந்திருப்பேன்.8-5-2021 முதற்காலை 12 மணிக்கு கதாநாயகி பிரசுரமானது. பன்னிரண்டு மணிக்கே படித்தவர்கள் கவனித்திருக்கலாம், தலைப்பு சற்று பிந்தித்தான் பிரசுரமானது.

முதல் அத்தியாயம் மட்டுமே உள்ளத்தில் இருந்தது. கதை என்னவென்று எனக்கே தெரியவில்லை. ஆனால் மறுநாள் காலை முந்தைய அத்தியாயத்தை வாசித்தபோது அதே உளஎழுச்சி உருவானது. இரண்டு வேறுவேறு கதைகள். ஒன்று பேச்சிப்பாறை காடு. இன்னொன்று அங்கே வாசிக்கப்படும் நூல். அந்நூலுக்குள் மேலும் பல கதைகள். ஆசிரியரான ஃபேன்னி பர்னி, அந்நாவலின் கதைநாயகியான ஈவ்லினா, அக்கதைக்குள் பேசப்படும் தொல்கதாபாத்திரமான விர்ஜீனியா, அக்கதைகளை வாசிக்கும் ஹெலெனா. கதை தன்னிச்சையாகப் பெருகிச் சென்றது. எங்கு செல்கிறது என தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒன்று தெரியும், இப்படி கதை தன்னிச்சையாக பெருகிச் சென்றால் மிகச்சிறந்த வடிவத்தை அதுவே அடைந்துவிடும். நாம் ஒன்றுமே செய்யவேண்டியதில்லை. நாம் வேடிக்கை பார்ப்பவர்கள் மட்டுமே.

நாவல் முடிந்தபின்னரே நான் அது எத்தகைய வடிவம் கொண்டது, அதன் பேசுபொருள் என்ன, எதை அது திறந்திருக்கிறது என அறிந்தேன். கதாநாயகி எளிமையான ஒற்றைமையக் கதை அல்ல. வாசிப்பு என்னும் செயலின் படிநிலைகள் அதிலுள்ளன. வாசிப்பு என்பது நாம் இறந்த காலத்தை, வரலாற்றை, நினைவை உருவாக்கி மீட்டிக்கொள்ளும் செயல்தான். மானுடர் மானுடமென்னும் ஒற்றைத்திரளாக தங்களை தொகுத்துக்கொள்வது அதனூடாகத்தான். புத்தகங்களில் இருந்து எழுந்து வருவன அனைத்தும் காலமென தங்களை ஆக்கிக்கொண்ட ஆளுமைகளும் சிந்தனைகளும் உணர்வுகளும்தான்.

இந்நாவலை என் பிரியத்திற்குரிய ஆஸ்டின் சௌந்தர் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்

ஜெ

கதாநாயகி வாங்க

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை அந்த முகில் இந்த முகில் முன்னுரை
பத்துலட்சம் காலடிகள் முன்னுரை இருகலைஞர்கள் முன்னுரை உடையாள் முன்னுரை
கதாநாயகி முன்னுரை
முந்தைய கட்டுரைசிங்கப்பூர் இலக்கியம், ஒரு பேட்டி
அடுத்த கட்டுரைகல்வலைக்கோடுகள்