ஆளுமைகள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் வாழ்க்கையை தழுவி எழுதப்படும் கதைகள் ஏராளமாக மற்ற மொழிகளில் உள்ளன. தமிழில் புனைகதைகள் எழுதப்பட்ட காலம் முதலே அத்தகைய சில கதைகள் எழுதப்பட்டுவிட்டன. பெரிய அளவில் சொல்லும்படி இல்லை என்றாலும் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். தமிழில் அதிகம் எழுதப்பட்ட வாழ்க்கை ஜி.நாகராஜனுடையது.
மரபிலக்கியத்தில்கூட கலைஞர்களைப் பற்றிய கதைகள் ஏராளமாக உள்ளன. அவை காலப்போக்கில் தொன்மங்களாகிவிடுகின்றன. தியாகையரை வாழ்த்த சீதையுடன் ராமன் வந்ததும், பீர்முகம்மது அப்பா சப்பாத்திக்கள்ளி சதையை கறியாக்கி சமைத்து சதக்கத்துல்லா அப்பா அவர்களுக்கு பரிமாறியதுமெல்லாம் அவ்வாறு இலக்கியமாகத் தோன்றி தொன்மமாக ஆன கதைகளாகவே இருக்கவேண்டும்.
இவ்வாறு ஆளுமைகள் கதைகளுக்குள் முளைத்தெழ என்ன காரணம்? பெருஞ்செயல்புரிபவர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் விதைகளைப்போல. அவர்களிடமிருந்து செயலும் கலையும் சிந்தனையும் உருவாகின்றன. அந்த ஊற்றுமுகம் பற்றி நமக்கு ஒர் ஆர்வம் இருக்கிறது. அவர்களின் ஆளுமையை கொண்டு அவர்களின் செயல்தளத்தை, அவர்களின் புனைவுலகை புரிந்துகொள்ள முடியுமா என்று பார்க்கிறோம். அவர்களின் புனைவில் இல்லாத எதையாவது கண்டடைய முடியுமா என்று பார்க்கிறோம்.அதற்கும் புனைவையே பயன்படுத்துகிறோம்.
அரிதாக ஆளுமைகளை உடைக்க சிலர் புனைவை பயன்படுத்துவதுண்டு. அது ஒரு அசட்டுச்செயல்பாடு என்பதே என் எண்ணம். பறக்கும்போது பறவை என்னவாக இருக்கிறதென்பதே நமக்கு முக்கியம். நான் ஆளுமைகளின் வாழ்க்கையை அவர்களின் உச்சங்களைக் கொண்டு மட்டுமே அறிய முயல்கிறேன். அவர்களை இழுத்து நம்மைப்போல் ஆக்கி மகிழும் சிறுமையில் எனக்கு ஈடுபாடில்லை. அவர்கள் எங்கே கனிகிறார்கள், எங்கே கூர்கிறார்கள், எப்படி வெளிப்படுகிறார்கள், எவை வெளிப்படாது எஞ்சுகின்றன என்பதே எனக்கு முக்கியம்.
இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, புனைவுகள். அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள். சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள். அவர்களின் அகம் திகழும் சில கணங்களை தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன. இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதியமானைப் பாடிய ஔவையாரின் கண்களே நான் கோருவன.
பிரியத்துக்குரிய நண்பர் சுகாவுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்.எங்கள் நட்புக்கு பதினைந்தாண்டுகள் ஆகப்போகிறது. சேர்ந்து சிரித்த தருணங்களாலானது அது.
ஜெ
இரு கலைஞர்கள்
***