அந்த முகில் இந்த முகில்

அந்த முகில் இந்த முகில்உருவாக்கிய ஒருவகை தீவிரநிலையை தாண்ட எனக்கு ஓரிரு இரவுகள் தேவையாயின. தெலுங்குப்பாடல்கள் வழியாக, சம்பந்தமில்லாத சரித்திர நூல்கள் வழியாக. இன்னொரு கதை வழியாக. எரியும் உலோகப் பரப்பின்மேல் நீரூற்றிக் குளிரச் செய்வதுபோல இசை என்னை ஆற்றுவித்தது. இன்னொருவரின் துயரை தன் துயரென உணர்வதே எழுத்தாளனின் உச்சம். அவனுடைய நரகம்.

இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு

அந்த நுரைக்கு என்ன மதிப்பு? இலக்கியத்தில் அதை கற்பனாவாதம் என்றே சொல்லமுடியும். பழுத்த யதார்த்தவாதம் அதிலுள்ள நெகிழ்வையும், கனவையும் பொருட்படுத்தாதுதான். நவீனத்துவம் உருவாக்கியகணக்குவழக்கும்’ ‘கச்சிதத்தன்மையும்அதற்கு நேர் எதிரானதுதான். செவ்வியலின் ஒட்டுமொத்தப்பார்வை அதை தன்னுள் ஒரு துளியென அடக்கிக் கொள்ளும்தான். வாழ்க்கையை அறிய, வாழ்க்கையை பயனுறச்செய்ய அது எவ்வகையிலும் உதவாதுதான்.

ஆனால் எப்போதுமே இலக்கியத்தில் அது இருந்துகொண்டிருக்கிறது. ‘கண்ணீர்த்துளி வார உள்ளுருக்கும் கலை’. அத்தனை நவீன இலக்கிய அலைகளுக்குப் பின்னரும் அவற்றை எழுதிய பெரும்படைப்பாளிகள் அப்படியே திசைமுனைகளில் மலைமுடிகள் என எழுந்து காலமே இல்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது அனைவருக்கும் உரியது அல்ல. உண்மையில் ஏராளமானவர்களுக்கு அந்த கற்பனாவாதத்தின் மென்மை, ஒளி, இனிமை வாழ்க்கையில் எப்போதுமே அனுபவமாகியிருக்காது. அவர்களுக்கு எண்ணி எண்ணி அளிப்பட்டவையே கிடைத்திருக்கும். சிலரை அப்படி வடிவமைத்திருக்கிறது இயற்கை.

பெரும்பாலானவர்களுக்கு இளமையில் அந்த நிலவொளி வந்து வாழ்க்கையின்மேல் படிகிறது. சிலகாலம். சிலசமயங்களில் ஓரிரு மாதங்கள், ஓரிரு வாரங்கள். ஆனால் அதன் இனிமைத்தீற்றலை அனுபவித்திருப்பார்கள். பின்பு வந்தமைகிறது கணக்குகளின் உலகம். அனைத்தும் சமப்படுத்தப்பட்ட வாழ்க்கை. ஒவ்வொன்றுக்கும் விளக்கமும் பொருளும் தேடும் உள்ளம்.

நானறிவேன், தத்துவம் வழியாக நான் சென்றடைவது அந்த முழுமைநோக்கின் உச்சத்திலேயே. அங்கே எல்லாமே சிறியவையாகத் தெரிகின்றன. உணர்வுகளை நம்பி வாழ்வதென்பது முகிலள்ளி இல்லம் சமைப்பது போன்றது.

ஆனால் அங்கிருக்க விரும்பாமல் அவ்வப்போது இங்கு வருகிறேன். இந்தக் கனவில், இந்த நெகிழ்வில், இந்த பொருளற்ற தித்திப்பில், இந்த அழியா இளமையில் சிலகாலம் திளைக்கிறேன். எதன்பொருட்டும் என்னுள் இருக்கும் கற்பனாவாதியை, காதலனை இழந்துவிடலாகாது என்று சொல்லிக்கொள்கிறேன்

ஏனென்றால் வாழ்க்கை என்பது நடைமுறை உண்மைகளால், புறவய உண்மைகளால், சமன்படுத்தப்பட்ட பார்வைகளால், முழுமைநோக்கின் மகத்துவத்தால் மட்டும் ஆனது அல்ல. மனிதர்கள் எளிய கனவுகளில் வாழ்கிறார்கள். அக்கனவுகளை அருமணிபோல முதுமையிலும் பொத்தி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

என்றென்றைக்குமென ஏங்கி ஏங்கி மானுடன் சேர்க்கும் அக்கனவின் ஒரு துளியை மொழி தொட்டுவிடுமென்றால் அதுவும் பேரிலக்கியமே

இந்நாவலின் தெலுங்குச் செய்திகளை சரிபார்த்து உதவிய இதழாளர் ராஜு [ஈநாடு] அவர்களுக்கு நன்றி.

ஜெ

சமர்ப்பணம்

மறைந்த கொண்டப்பள்ளி வி.நாகராஜுவுக்கு, எடைமிக்க நினைவுகளுடன்

அந்த முகில் இந்த முகில் வாங்க

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை அந்த முகில் இந்த முகில் முன்னுரை
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் கடிதம்
அடுத்த கட்டுரைகலையில் தனியுண்மை என்று இருந்தாகவேண்டுமா?