2020ல் நான் தொடர்ச்சியாக எழுதிய நூறு கதைகளில் ஆறு கதைகள் இவை. இக்கதைகள் எல்லாமே ஒன்றிலிருந்து ஒன்று என முளைத்தவை. கதைகளின் தொடர்ச்சி சில கதைகளில் உண்டு. சில கதைகளில் கதைச்சூழல் பொதுவாக உள்ளது. வெளிப்படையாக கதையோ சூழலோ தொடர்ந்து வராத கதைகளில்கூட அடிப்படையான கேள்விகளின் தொடர்ச்சி உண்டு. ஒரு கதை எழுதியதுமே அக்கதையின் மையத்தில் இருந்து எழும் ஆழமான ஐயம், குழப்பம், அல்லது தெளிவு இன்னொரு கதைநோக்கி செலுத்தியது. அவ்வாறு அகத்தொடர்ச்சி கொண்ட ஆறுகதைகள் இந்நூலில் உள்ளன.
திபெத் ஒரு தங்கப்புத்தகம். வாசிக்க வாசிக்க விரிவது, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது. மானுடத்தில் இருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது. நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு’. மானுடம் இழந்தவை பல அங்கே சேமிக்கப்பட்டிருந்தன. புறவுலகம் சென்ற முந்நூறாண்டுகளில் அடைந்த பெரும் மாற்றம் என்பது அறிவியலை, புறவயத் தர்க்கத்தை நோக்கிய வளர்ச்சி. அந்த தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சில மெய்மைகள், சில குறியீடுகள் திபெத்தில் எஞ்சியிருந்தன. ஆகவேதான் திபெத் அத்தனை மர்மமான கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது. மீளமீள மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது
இந்தக்கதைகள் திபெத்தை ஒரு கதைக்களமாக கொண்டவை என்பதைக் காட்டிலும் ஒருவகை குறியீட்டு வெளியாகக் கொண்டவை என்று சொல்வதே பொருத்தமானது. ஆன்மிகமான வினாக்களுடன் மானுட ஆழம் நோக்கிச் செல்லும் படைப்புக்கள் தங்களுக்கென ஒரு குறியீட்டு வெளியை உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஏனென்றால் மீபொருண்மையியல் [மெடஃபிசிக்ஸ்] என்பது குறியீடுகள் வழியாக மட்டுமே பேசும் தன்மை கொண்டது. அக்குறியீடுகளை அன்றாடத்தில் இருந்து உருவாக்கிக்கொள்ள முடியாது. அன்றாடம் ஒவ்வொன்றுக்கும் உறுதியான நடைமுறை அர்த்தத்தை அளித்து தட்டையாக்கி விடுகிறது. ஆகவே ஆன்மிகமான பேசுபொருள் கொண்ட ஆக்கங்கள் அன்றாடம் கடந்த ஒரு வாழ்வுப்புலத்தை, பண்பாட்டுத்தளத்தை உருவாக்கிக் கொள்கின்றன. அது புராணமாக இருக்கலாம். தொல்வரலாறாக இருக்கலாம். அறிவியல்புனைவுகளுக்குரிய கற்பனைநிலங்களாக இருக்கலாம். அங்கே எல்லாமே குறியீடுகள்தான். எல்லாமே மேலும் மேலுமென திறப்பவைதான். கனவில் எல்லாமே குறியீடுகள்.ஒரு கனவுநிலமாகவே இதில் திபெத் வருகிறது. இது மெய்யான திபெத் அல்ல. இது நிக்கோலஸ் ரோரிச் தன். ஓவியங்களில் சித்தரித்த திபெத். ஆழ்படிமங்கள் வேர்க்கிழங்காக உறங்கும் நிலம். அத்தனை பொருட்களும் குறியீடுகளாக முளைத்தெழும் மண்.
இந்தக்கதைகளில் ஒருகதையில் இருந்து இன்னொரு கதைக்கு நீண்டுசென்று வலுப்பெறும் ஒரு மெய்த்தேடல் உள்ளது. ஆகவே ஒவ்வொரு கதையும் இன்னொன்றால் நிரப்பப்படுகின்றன.
தங்கப்புத்தகம் வாங்க
***