ஆனையில்லா!

நான் என் நிலம் என உணரும் குமரி பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறேன். ஆனால் என் சொந்த கிராமமான திருவரம்பு பற்றி அனேகமாக ஏதும் எழுதியதில்லை. அந்த ஊருடன் எனக்கு ஓர் அகவிலக்கம் இருந்திருக்கிறது. என் அம்மா அப்பா இருவருமே தற்கொலைசெய்துகொண்டார்கள். அந்த ஊர் அந்நினைவுகளுடன் இருக்கிறது கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் நான் அந்த மண்ணில் கால்வைத்ததில்லை.

ஆனால் இந்த மண் என்னுள் குறியீடுகளாக ஆகிவிட்டிருக்கிறது. உணர்ச்சிகளின், கனவுகளின் அடையாளங்கள் இங்குள்ள அத்தனை பொருட்களும். என் அகத்தை இப்பொருட்கள் வழியாகவே நான் புறமாக ஆக்கிக்கொள்ள முடியும். ஆகவே நான் ஒரு அகநிலத்தை உருவாக்கிக் கொண்டேன். என் கற்பனையில் உருவான அந்த குமரிநிலத்தையே எழுதிக்கொண்டிருந்தேன். என் கதைமாந்தர் பேசும் மொழிகூட மிகச்சரியான குமரிமாவட்ட மொழி அல்ல, அது நானே உருவாக்கிக் கொண்டது. இங்குள்ள வட்டாரவழக்கின் நுட்பமான, ஒலியினிமைகொண்ட, வேடிக்கையான துளிகளை கோத்து அதை அமைத்தேன்

பலகதைகளில் என் அம்மா வந்திருக்கிறார்கள். ஆனால் அப்பாவை நான் எழுதியதில்லை. அதுவும் ஓர் அகவிலக்கமே. நான் என் அப்பா என் நினைவில் இறுதியாக எஞ்சிய அந்த வயதை இப்போது அடைந்துவிட்டேன். அப்பா 61 வயதில் மறைந்தார். எனக்கும் 58 ஆகிறது. இறந்தவர்களுக்கு வயதாவதில்லை. ஆகவே அவரும் நானும் ஒரே வயதினர். ஆகவே இப்போது அவரை விலக்கமும் மதிப்பும் இல்லாமல் அணுகுகிறேன். அவரை கிண்டல் செய்கிறேன். வீட்டில் குழந்தைகளுடனான உரையாடலில் கரடிநாயர் என்கிற தங்கப்பன் நாயர் என்கிற வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை பாகுலேயன் பிள்ளை வந்துகொண்டே இருக்கிறார்.

ஆகவே சென்ற 2020 ஏப்ரலில் புனைவுக்களியாட்டு என்ற பேரில் நூறு கதைகளை தொடர்ச்சியாக எழுதியபோது அவர் புதிய ஒளியுடன் பிறந்து வந்தார். அன்பான, முட்டாள்தனமான, மூர்க்கமான, நுண்சுவைஞரான, நட்பில் நிறைந்த, ஆணாதிக்கவாதியான, பழமைவாதியான கரடி நாயர். என் வாழ்க்கையில் இப்படி அவரை மீண்டும் பெற்றது ஒரு பெரிய நிகழ்வு. என் அகக்குறைகள் அனைத்தையும் நிறைவுறச்செய்தது. நான் இழந்த அப்பா மீண்டு வந்தார். நான் விரும்புவதுபோலவே அவர் இருந்தார். இனி இவர்தான் என்னில் எஞ்சுவார்

இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள். புத்தம்புதிய ஓர் உலகு. ஒளிமிக்க உலகு. முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள்

என் இளமையைக்கொண்டு நான் சமைத்த இந்த உலகை இனியும் விரிவாக்குவேன் என நினைக்கிறேன். ஒருவேளை எழுதாமல் போகலாம். ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்வேன். இப்போதே எழுதப்படாத பல கதைகள் என்னுள் இருக்கின்றன. இவற்றிலுள்ள கள்ளமற்ற கொண்டாட்டமே இவ்வுலகில் நான் வேண்டுவது. இங்கே மானுடர் வாழவேண்டிய வகை அது

இந்நூலை என் தந்தை வடிவமான அண்ணன் பிரசாத் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

 ஜெ

ஆனையில்லா வாங்க

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை

 

முந்தைய கட்டுரைபுகழ்- ஒரு கேள்வி
அடுத்த கட்டுரைமுதற்காதலின் பொன்மணிக்கிளை