காலந்தோறும் கதைகள் ஏன் சொல்லப்படுகின்றன என்று ஆராய்ந்தால் வாழ்க்கையின் விளிம்புக்கு அப்பால் கால்வைப்பதற்காகத்தான் என்று தோன்றுகிறது. அன்றாடத்தின் அறிதல்களுக்கு அப்பால் செல்லவே எப்போதும் கதைகள் முயல்கின்றன. தர்க்கம் தயங்கிநிற்கும் இடங்களில் சிறகுகொண்டு கற்பனை பறந்தெழுகிறது. ஆகவேதான் உலக இலக்கியத்தில் பெரும்பகுதி மாயக்கதைகளாக, பேய்க்கதைகளாக, தேவதைக்கதைகளாக உள்ளன.
இங்கே இவ்வாறு சொல்லப்பட இயலாத ஒன்றைச் சொல்வதற்கான கதைகள் அவை.இலக்கியம் உருவாக்கிக்கொண்ட பல கூறுமுறைகள் அந்த யதார்த்த எல்லையை கடக்கும்பொருட்டே அடையப்பட்டன. உருவகங்கள், படிமங்கள், கனவுத்தன்மைகள், தொன்மங்கள், ஆழ்படிமங்கள், சொல்லப்படாத இடைவெளிகள். மிகுகற்பனை, மாயயதார்த்தம், அறிவியல்கற்பனை, தொன்ம உருவாக்கம் என நவீன இலக்கியம் யதார்த்தத்தின் விளிம்பைக் கடந்து, கனவுகளைக் கடந்து கற்பனையின் வீச்சுடன் சென்றுகொண்டிருக்கிறது.
துரதிருஷ்டவசமாக நம் நவீன இலக்கியத்தில் நவீனத்துவத்தின் நம்பிக்கைகளும் அழகியலுமே மேலோங்கி இருந்தன. நவீனத்துவம் கல்லில்செதுக்கி வைக்கப்பட்டது போன்ற புறவயமான யதார்த்தத்தை நம்புவது. ஒவ்வொன்றையும் தன்னிலிருந்து தொடங்குவது. அதற்கு ‘அது’ இல்லை. ‘அப்பால்’ இல்லை. அதன் மீறல்கள் எல்லாமே தன்னில் இருந்து துள்ளி தன்னில் விழுபவை மட்டுமே. அந்த மனநிலை இங்கே இரண்டுதலைமுறைக்காலம் நீடித்தது
ஆனால் புதுமைப்பித்தன் இயல்பாக யதார்த்தத்தின் எல்லைகளை மீறிச்சென்றிருக்கிறார். அசோகமித்திரன் அரிதாக அத்தகைய படைப்புக்களை எழுதியிருக்கிறார். அவ்வகை மீறல் என்றும் இருந்துகொண்டேதான் இருக்கும். ஏனென்றால் கதைகேட்கும் மானுட உள்ளத்தின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று அது.
நான் எழுதவந்தபோது யதார்த்தவாதம் உருவாக்கிய அந்த எல்லையை இயல்பாக மீறிச்சென்றேன். புராணம், பேய்க்கதை, திகில்கதை, அறிவியல்புனைவு என எல்லா வகையிலும் எழுதிப்பார்த்தேன். அவ்வகை கதைகள் என் புனைவுலகில் நிறைந்துள்ளன. இவை ஒரு நுட்பமான எல்லைக்கோட்டில் நகரும் கதைகள். புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன.
எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன. அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை. இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை. மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது. இங்கு இவை என நாம் அறியும் அனைத்தையும் கடந்துசென்று அறியவேண்டிய எங்கோ.
இக்கதைகள் கற்பனையின் எல்லையை நீட்டி வாசகனின் அகத்தை கொந்தளிக்க வைக்கக்கூடும். அவனை அகம்பறக்கச் செய்யக்கூடும். ஆனால் வெறுமே வாசிப்பின்பத்தின் பொருட்டல்ல, மெய்மையை சென்று தீண்டுபொருட்டே இவை அந்த மீறலை நிகழ்த்துகின்றன. மலையுச்சிமேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது. இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள்.
இத்தொகுதியை நண்பர் லக்ஷ்மி மணிவண்ணனுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெ
முதுநாவல் வாங்க
***