எழுகதிர்

 

இந்த பத்து கதைகளில் நற்றுணை ஒரு குறிப்பிட்டவகையான கலவை கொண்டது. எனக்கு நன்கு தெரிந்த ஓர் ஆளுமையின் வரலாறு அது. பெரும்பாலும் நேரடிவாழ்க்கைக்கதை. ஆனால் எழுதிவந்தபோது அதில் இவ்வுலகில் இல்லாத, வேறொரு உலகைச்சேர்ந்த ஒன்று வந்துசேர்ந்தது. அதை தெய்வம் என்கிறோம். ஒரு வசதிக்காகத்தான். வேறேதாவது சொல்கூட பயன்படுத்தலாம். என்றும் மானுடனின் கதைகளில் ஊடாடும் ஒருவகை அதீதக்கூறு அது.

மானுடன் கதைசொல்ல ஆரம்பித்ததே அதற்காகத்தான். வாழ்க்கையைச் சொல்வதெல்லாம் சொல்லிச் சொல்லி வாழ்க்கையை கடந்து தாவி எழுந்து விடுவதற்காகத்தான். எங்கிருந்து இவை தோன்றியனவோ அங்குவரை சென்று எட்டிப் பார்த்து விடுவதற்காகத்தான். தெய்வம் என்பது ஒரு சொல்தான். அது குறிப்பது பல்வேறு பொருட்களை. மானுடன் நெஞ்சில் தோன்றிய அன்பும், காதலும், நீதியும் எல்லாம் தெய்வங்கள் அல்லவா?

அந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது.

வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன.அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன. இன்றுவாசிக்கையில் சொல்லிச்சொல்லி தீராத சிலவற்றை சொல்லிவிடும் தகுதியை அந்த தாவுதல் வழியாக இவை அடைந்துள்ளன என்று தோன்றுகிறது.

இந்நூலை நண்பர் சுனீல் கிருஷ்ணனுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஜெ

எழுகதிர் வாங்க

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை
முந்தைய கட்டுரைமாயச்சாளரம் – அருண்மொழி நங்கை
அடுத்த கட்டுரைகி.ரா.உரை- கடிதம்