உறவு, பிரிவு, காதல், தியாகம், கருணை, அறவுணர்வு என இலக்கியம் எழுதிப்பார்க்கும் தருணங்கள் பல உண்டு. அவற்றுக்கு நிகராகவே இலக்கியம் குற்றத்தையும் எழுதிப்பார்க்கிறது. ஏனென்றால் குற்றச்செயல் என்பதும் ஒரு வகையான மானுட உச்சம். அங்கே தனிமனிதன் வெளிப்படும் விதம், சமூகம் எதிர்கொள்ளும் விதம் இரண்டுமே அறிதலின் கணங்கள். உலக இலக்கியத்தில் மிகமுக்கியமான பல படைப்புக்கள் குற்றம் பற்றியவையே.
குற்றம் என்பது என்ன? எல்லா குற்றங்களும் சமூகத்திற்கு எதிரானவை. வகுக்கப்பட்டவற்றுக்கு எதிரான மீறல்கள். கூட்டுவாழ்க்கைக்கான நெறிகளை தனி மனிதன் மீறுவதே குற்றம் என்பது. மனிதவாழ்வின் தொடக்கத்திலேயே குற்றமும் தண்டனையும் உருவாகிவிட்டது. கீழ்வாலை குகை ஓவியங்களில் ஒன்று கழுகுமுகம் கொண்ட ஆட்சியாளனின் முன் இழுத்துச்செல்லப்படும் ஒரு குற்றவாளியை காட்டுகிறது.
விலங்குகளில்கூட குற்றம் உண்டு. கூட்டுவாழ்க்கையை பரிணாமத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் எல்லா உயிர்களிலும் குற்றம் உண்டு. எறும்புகளின் காலனியில் இருந்து ஒரு குற்றவாளி எறும்பு இழுத்துச்சென்று தண்டிக்கப்படுவதை ஆவணப்படத்தில் கண்டேன்.
குற்றத்தைச் செய்யவைப்பது என்ன? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னை தனிமனிதனாக உணர்கிறது. தன் நலத்தை, தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது.
தன்னலம் என்பதற்கும் அப்பால் அதில் ஒன்றுண்டு, அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது. குற்றவாளியால் குற்றம்செய்யாமல் இருக்க இயலாது, ஏனென்றால் குற்றத்தின் வழியாகவே அவன் தன் ஆளுமையை உருவாக்கிக்கொள்கிறான் என்பார்கள்.
குற்றத்தின், தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை. அதனூடாக வெளிப்படும் மனித ஆழத்தை அறிந்துவிட முயல்பவை. ஆகவே மனித அகமீறல்களின் பல தருணங்கள் இந்த கதைகளில் உள்ளன. அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் குற்றங்கள். எத்தனை தொகுத்தாலும் மனிதன் முற்றாக தொகுக்கப்பட முடியாத தனித்தன்மை கொண்டவன் என்பதை இவை கண்டடைகின்றன.
இந்நூலை என் பிரியத்திற்குரிய நண்பர் வழக்கறிஞர் வி.எஸ்.செந்தில்குமார் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெ
ஐந்து நெருப்பு வாங்க
***