ஆயிரம் ஊற்றுகள்

அமேசான் நூல்கள்

தென்திருவிதாங்கூர் மண்ணில் நான் பிறந்தேன். திருவிதாங்கூரின் வரலாற்றில் முக்கியமான இடம் உள்ள திருவட்டாறு என் தந்தையின் தாய்வீடு. பழைய வேணாடு இது. அதன் வரலாற்று மையங்களில்தான் என் உறவினர்கள் அனைவரும் பரவியிருந்தனர். திருவிதாங்கோடு என் அம்மாவின் பெரியம்மாவின் ஊர். இப்போது என் பெரியம்மாவின் மகளான பகவதியக்கா அங்கே இருக்கிறார். ஆளூர், கேரளபுரம், பத்மநாபபுரம், திருவனந்தபுரம், நெடுமங்காடு எல்லாமே என் உறவினர் வாழும் ஊர்கள். இளமையிலேயே நான் கேட்டு வளர்ந்த வரலாறு இது

இந்த வரலாற்றினூடாக சென்று அன்றிருந்த ஆளுமைகளை அருகெனக் காண்பது இப்போது இக்கதைகளின் வழியாக இயன்றிருக்கிறது. வரலாற்று வாசிப்பினூடாக அடைந்த தகவல்கள், பயணங்கள் வழியாக கண்டறிந்த காட்சிகள் என இந்த வரலாறு என் அகத்துள் திரண்டுகொண்டே இருந்திருக்கிறது. நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அந்த வரலாற்றுச் சூழலை, ஆளுமைகளை எழுதும்போது அருகிருந்து பார்ப்பதுபோல எழுதமுடிவது அரைநூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும் தொடர்ச்சியான ஆர்வத்தால்தான்.

வரலாறு இப்படித்தான் நடந்ததா? நம்மால் அறிய முடியாது. ஆனால் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும் என நாம் ஊகிக்க மூன்று அடிப்படைகள் உள்ளன. ஒன்று, இன்று நாமறியும் அரசியலின் அடிப்படை மனநிலைகளும் இயக்கநெறிகளும் அன்றும் இவ்வாறேதான் இருந்திருக்கும். இரண்டு, மனித ஆழங்கள் எப்போதுமே ஒன்றுதான். மூன்று, நமக்கு கிடைக்கும் புறவயமான வரலாற்றுச் சான்றுகள். அந்த மூன்று அடிப்படைகளைக் கொண்டு உருவாக்கிக்கொண்ட புனைவுக்களம் இது

ஏன் வரலாற்று மாந்தரை நினைவுகூர்கிறோம்? ஏன் கதைகளினூடாகத் தொன்மமாக ஆக்கிக்கொள்கிறோம்? நாம் வரலாற்றில் தேடுவது விழுமியங்களையே. இன்றைய நமது வாழ்க்கைக்கான விழுமியங்கள் நேற்றைய வாழ்க்கையில் எப்படி திரண்டு வந்தன என்று பார்க்கவே வரலாற்றை ஆராய்கிறோம். இந்தக் கதைகளின் நோக்கமும் அதுவே.

இந்திய சுதந்திரப்போராட்டக் காலகட்டத்தில்தான் நமது தேசியவரலாறுகள் எழுதப்பட்டன. அன்று நமக்கு வீரர்கள் தேவைப்பட்டனர். அன்று நம் ஜனநாயக உணர்வு வலுப்படவுமில்லை. நாம் பழைய வீரயுகத்து மனநிலைகளையே கொண்டிருந்தோம். ஆகவே நாம் வரலாற்றில் வீரர்களை தேடிக் கண்டடைந்தோம். புனைந்துகொண்டோம். கட்டபொம்மன், வேலுத்தம்பி தளவாய் போன்ற வீரபுருஷர்கள் அப்படித்தான் நமக்கு தொன்மவடிவமாக ஆனார்கள்

ஆனால் வீரம் என நாம் சொல்லும் அந்த உளநிலை என்பது சென்ற காலத்திற்குரியது. இந்த வீரர்கள் அவசரக்காரர்களாக, தன்முனைப்பு கொண்டவர்களாக, வரலாற்றைப் புரிந்துகொள்ளாத மூர்க்கர்களாக இருந்திருக்கிறார்கள் என்று இன்று தோன்றுகிறது. அவர்களை வழிபடும் மனநிலை அவர்களைப் போன்றவர்களை இன்று தலைமைக்கு கொண்டுசெல்ல நம்மை செலுத்துகிறது.

மாறாக ‘வீரமற்ற’ ஆட்சியாளர்கள் நம் வரலாற்றில் உள்ளனர். அவர்கள் பெரிய வெற்றிகளை ஈட்டவில்லை, பெரிய சாகசங்களை ஆற்றவுமில்லை. ஆனால் அமைதியாக நீண்டகாலம் ஆட்சி செலுத்தினர். மக்கள்நலத்திட்டங்களை செயலாக்கினர். செழிப்பையும் வளத்தையும் உருவாக்கினர். அவர்கள் நமது சென்றகாலத்தைய வரலாற்றுப் பார்வையில் நாயகர்களாக தெரியவில்லை. தென்னகத்தையே உருவாக்கிய அச்சுதப்பநாயக்கர், திருமலை நாயக்கர் போன்றவர்கள் நம் வரலாற்றில் பேசப்படுவதில்லை. திருவிதாங்கூரை உருவாக்கிய தர்மராஜா எனப்படும் மூலம்திருநாள் மகாராஜா வரலாற்றில் துதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் சாகசக்காரர்கள் அல்ல

அதிலும் இந்திய ஆட்சியாளர்களில் மகத்தானவர்களான அரசியர் இங்கே வரலாற்றில் இடம்பெறுவதே இல்லை. இரண்டாயிரமாண்டு தமிழ் வரலாற்றிலேயே ராணி மங்கம்மாள் போல ஒரு நலம்நாடும் அரசி இருந்ததில்லை. மகாராணி பார்வதிபாய், சேது லட்சுமிபாய் போன்றவர்களே திருவிதாங்கூரின் மெய்யான நட்சத்திரங்கள்.

நாம் நமது வரலாற்றுப் பார்வைகளை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாளேந்தி வித்தை காட்டியவர்கள் அல்ல  மக்களுக்கு நலம் செய்தவர்களே நாயகர்கள், நாயகிகள் என்று நம்ப நம்மை பழக்கவேண்டியிருக்கிறது. இக்கதைகளில் அந்த விழுமிய மாற்றத்துக்கான குரல் இருக்கிறது. ஆகவே இவை வரலாற்றுச் சித்திரங்கள் மட்டும் அல்ல, புதிய வரலாற்று விழுமியம் ஒன்றை முன்வைப்பவையும்கூட.

இந்த தொகுதியை மதிப்பிற்குரிய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்

அன்புடன்

ஜெ

ஆயிரம் ஊற்றுக்கள் சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை

ஆயிரம் ஊற்றுக்கள் வாங்க

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
 
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை  
முந்தைய கட்டுரைஆலயம் எவருடையது? கடிதங்கள்-4
அடுத்த கட்டுரைநேரு-வாழ்க்கை வரலாற்றெழுத்திற்கு ஒரு சவால்-பி.கே.பாலகிருஷ்ணன்