அன்னை என்பது…

என் இனிய ஆசானுக்கு,

என் சமர்ப்பணங்கள்.

மிக பெரிய தயக்கத்திற்குப்பிறகு நான் எழுதும் முதல் பதிவு இது.

என் தாயிடம் கொண்ட வேற்றுமையால், அந்த உறவை முழுவதும் மிச்சமின்றி வெறுத்த பின் மறுபடியும் அன்னை எனும் மரபை நான் உங்கள் வழியாகத் தேடி உணர்ந்தவற்றை இங்கு தொகுத்துக்கொள்ள இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

உளம் கொதித்த நாட்களின் என் மனச்சித்திரம் இந்த பதிவின் நோக்கத்தை கூர்மையாக்கும். இந்த உலகமும் அதன் சமூகமும் சில உறவுகளையும், அதன் மேல் கொள்ளும் உணர்வுகளையும் பொய்யான அதன் களிப்பிற்காக வளர்த்து எடுக்கிறது. அதன் உச்சம் தாய்மை. இந்த தாய்மையை கவிஞரும், எழுத்தாளனும் காலம் காலமாக வளர்த்து எடுக்கின்றனர் எனும் எண்ணம் மேலோங்கி இருந்த தருணம். பரிமாணத்தில் மிருகமாகவே நீடிக்கும் மனிதனின் மிக பெரிய சுய ஏமாற்று அது.

நீலியும், யக்ஷியும், குந்தியும், திரிந்து அலையும் உங்கள் எழுத்தினுடே பயணித்து இருப்பினும் எனக்கு என் வாழ்வின் சில நிகழ்வுகள் மேலும் சில கசப்புகளை தாய்மை மேல் ஏற்றியது.

இராஜைபளையம் என் ஊர் என்பதால் நாயுடன் என் உறவு மிக நீண்டது. முன்னர் நாங்கள் வளர்த்த Bobby தான் ஈன்ற நான்கில் ஒரு குட்டியை உண்டதை நான் என் சிறுவயதில் கண்டதை மிக ஒவ்வாமையுடன் நினைவு கொண்டேன். பிள்ளை தின்னும் தாய். இது நாய்கள் மட்டும் இல்லாமல் சிங்கம், நீர்யானை, மீன்கள் என நீள்கிறது. அதை Filial Cannibalism என அறிவியல் அழைக்கிறது. Bobby மிச்சம் இருந்த குட்டிகளை நான் அருகில் செல்லும் பொழுது என்னை பார்த்து உறுமியும், என்னைக் கடிக்க வந்தும் பாதுகாத்து கொண்டது. புரியாத ஒரு உளநிலை.

அதன் பொருட்டு தாய்மை குறித்துத் தேடித் தேடி படித்த பொழுது கிடைத்தவை எல்லாம் தாய் என்னும் ஒரு மரபின் அடையாளங்கள் மட்டுமே என முடிவு செய்தேன்.

இதை பற்றிய தேடலில் Matriphagy எனும் மற்றொரு இயற்கையின் தாய்மை அடையாளத்தை கண்டேன். பாலை நிலத்தில் வாழும் சில சிலந்திகள் (Stegodyphus Lineatus, Amarobius Ferox), சில புழுக்கள் இந்தப் புரிந்து கொள்ள முடியாத தாய்மையின் மறுமுக செயலில் ஈடுபடுகின்றன. வலைகளை பின்னித் தன் நூற்றுகணக்கான முட்டைகளை இட்டு காத்திருக்கும் இந்த உயிர்கள், அவை பொரித்து வெளி வந்தவுடன் அவை உண்பதற்காக பல பால் முட்டைகளை இடுகின்றன. குட்டிகள் அதை உண்டு வளர்கின்றன. முதல் தோல் உதிர்வு காலத்தை அவை தாண்டியவுடன் அந்த குட்டிகளுக்கு மேலும் அதிக ஊட்டம் தேவை என்பதை அறிந்து கொள்கிறது தாய். பொதுவாக உடலுறவிற்கு பிறகு ஆண் இறந்து விடும். பாலையின் வெண் கொடுமை, உணவின் பற்றாக்குறை, தாயின் பலவீன உடல்-மேல் தேவையான உணவை அந்த குட்டிகளுக்கு கிடைக்க விடுவதில்லை. அப்பொழுது அந்த தாயின் மரபணுவில் எங்கோ கிறுக்கப்பட்ட ஓர் உணர்வால் அந்த தாய் தன்னை அந்த குட்டிகளின் ஊடே அழுத்தி அமர்த்திக் கொண்டு தன்னை வாழ்வெனும் வேள்விக்கு அவி அளிக்கின்றது. அந்த பாலை நிலத்தின் புதிய வேட்டை உயிர்களுக்கு முதல் எளிய வேட்டை உணவாகத் தன்னைத் தியாகம் செய்கிறது. அந்தத் தாயின் கடைசி நேர உணர்வுகள், தன் பிள்ளைகளின் கொடுக்குகளின் ஊடே தான் உணவாக மாறும் அந்த கடைசி நிமிடங்கள்…. தாய்மையின் ஒரு பெரும் தருணம்.

ஆனால் இதுவும் என் காழ்ப்பின் கசப்பினையே ஏற்றியது. நான் கண்ட தாய்மையின் முகம் அது அல்லவே. வெண்முரசு, காடு, விஷ்ணுபுரம் என என் வாசிப்பு நீண்டாலும் ஒரு சிறு தயக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது. நான் எதையோ புரிந்துகொள்ளவில்லை. சமூகங்கள், இராஜாங்கங்கள் உருவாகும் முன்னரே ஆதி அம்மையும், அப்பனும் படிமங்களாக தந்த மரபின் பார்வை எனக்குக் கிடைக்கவில்லை. அதை உணர்தல் அத்மாவின் நடுவே நடந்தால் ஒழிய எண்ணில் குடிகொள்ளும் இந்த சலனம் நிறைவதும் இல்லை என எண்ணினேன்.

அந்தத் தருணம், அந்த தரிசனம் நான் மேல் கூறிய சிலந்திகள் வாழும் நிலத்தை கவுந்தியும் ( நீலி), கண்ணகியும் கொற்றவையில் வந்து சேர்த்த பொழுது கண்டேன்.

நான் அத்தருணத்தில் சென்ற உளப்பயணம் மிக அரிது. மானுடம் அறியும் ஒரு மின்னல் வெட்டும் தருணம்.

எயினர் எழுப்பிய பாழ் ஆலயத்தில் ஒரு செந்நாய் அதன் குட்டிகளை பாதுகாக்க உறுமி இவர்களை அருகில் வரத்தடுக்கிறது. கண்ணகியின் ஆவலுக்காக அந்த தாய் நாய் அகற்றப்பட்டு, குட்டிகளை கண்ணீர் மல்க கண்ணகி கொஞ்சி மகிழ்கிறாள். ஒரு உயிரின் மீதான மனிதத் தாய்மையின் நீட்சி. இலக்கியத்தின், எழுத்தாளனின் தாய்மைக் கொண்டாட்டம். இந்த குட்டிகள் இந்த பாலையில் எப்படி உயிர் வாழ்கின்றன என்பதற்கு நீலி அது கொற்றவையின் நிலம் எனவும் அவை அந்த அன்னையின் அறம் எனவும் பதிலுரைக்கிறாள்.

அன்னையின் அறம் எது?

பின்னிரவில் கண்ணகி மறுபடியும் கொற்றவையின் ஓவியத்தின் முன் பாலை காற்றில் கூந்தல் பறக்க, நிலவின் கீழ் நிற்கும் பொழுது தன்னை கொற்றவை என உணர்கிறாள். மறுபடி உறுமல் கேட்க கண்ணகி அந்த இருட்டில் கீழே பார்க்கிறாள். Bobby தன் குட்டியில் ஒன்றை கிழித்து, வாய் முழுதும் உதிரம் வழியத் தின்று கொண்டு இருக்கிறது. அது கொற்றவை அன்னையை நோக்கி மண்ணில் வால் உரச ஆட்டுகிறது. அன்னை அதை நோக்கிப் புன்னகை செய்கிறாள்.

ஆசானே! அந்த தருணம் இப்பொழுது நினைத்தாலும் என்னுள் ஒரு அதிர்வை நிறைக்கிறது. காலையில் அவள் கண்ணீர் மல்க கொஞ்சிய குட்டியாக அது இருந்தால். அந்த புன்னகை…? என்ன அறம் இது? என் மொத்த கசப்பும் என் காழ்பும் மறுபடி என் அகம் முழுதும் குடி கொண்டு கசந்தது. அந்தத் தாய் நாய் கிழித்து உண்ணும் குட்டி நான். அது என் உதிரம். உலகின் மொத்த அருவருப்பும் என்னை வந்து சேர்த்து கொண்டது. அந்தப் புன்னகை?

ஆனால் மறுகணம் என் பிரஞ்ஞை மற்றொன்றில் நிலைப்பதை உணர்த்தேன். அது மற்றொரு பார்வை. நிலத்தின் மட்டத்தில் இருந்து வானை நோக்கும் ஒரு நிமிடம். நிலவின் கீழே அலை அலையாய் கூந்தல் பறக்க, என்னை நோக்கும் அன்னை, அவள் புன்னகை. நான் என் குட்டியை உண்ணும் நாயாக உணர்த்த தருணம்.

எந்த ஒரு விவாதமும் இன்றி, தருக்கதின், தத்துவத்தின் எல்லை மீறி என் மனதின் அத்துணை இருளும், துயரும், காழ்ப்பும்,சுய இரகங்களும் உருகி வழிந்தோடியது. என் உணர்வினை, என் உணர்தலை இங்கு நான் எழுத்துக்களாய் உணர்த்த தோல்வி அடைகிறேன். ஒரு தரிசனம் அது.

ஒரு சொல் பேசபடாமல் அன்னையின் அறம் உணரப்பட்டது. அந்த அறம்….. கொற்றவையின் புன்னகையே.

நன்றிகள் பல.

என்றும் உங்கள்

அ.

***

அன்புள்ள அ

வாழ்க்கையின் ஒரு பகுதியை தீவிரமாகக் காட்டும் படைப்புக்கள் உண்டு. நான் எப்போதுமே செவ்வியலை நோக்கிச் செல்ல முயல்பவன். காரணம், வாழ்க்கையின் முழுமையை அவை காட்டவேண்டுமென நினைக்கிறேன். வாழ்க்கையின் முழுமைத்தரிசனம் சிறுமைகளை கண்டு சலிப்புறுவதில்லை. அவையும் இந்த பெரும் நெசவின் இழைகளே என உணர்ந்திருக்கும் ஒருமையையே நாடுகிறேன்.

கொற்றவையில் அன்னையின் பெருந்தோற்றம் உண்டு. கைவிடப்பட்ட அன்னையரின் துயர்மிக்க, கொடிய சித்திரங்களும் உண்டு. அந்த ஒத்திசைவுதான் வாழ்க்கையை அறிந்துகொள்வதன் மூலம் நாம் சென்றடையும் தரிசனம்.

ஜெ

***

முந்தைய கட்டுரைகனவில் நிறைந்திருப்பவை…
அடுத்த கட்டுரைஉச்சிக்கிழான் எழில் – கடலூர் சீனு