மதிப்புரை எழுதுவது…

வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி?

அன்புள்ள ஜெயமோகன்,

தேக நலம், மன ஆரோக்கியம் இரண்டிற்கும் குறைவில்லை என நம்புகிறேன். வேண்டுவதும் அதுவே. அறம் தொகுப்பின் வழியே தங்களைக் கண்டடைந்தேன். சிறுபிள்ளைத் தனமாக அன்றொரு மதிப்புரை எழுதினேன். (மதிப்புரை என்றால் என்னவென்றே தெரியாமல்!)

இப்பெருந்தொற்றுக் காலத்தில் காந்தி அவர்கள் குறித்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், கடிதங்களையும் (தங்கள் சிபாரிசின் பேரில் முக்கியத்தும் உணர்ந்து) வாசித்தேன். காந்தியை bottom-up approachல் விளங்கிக்கொண்டேன். தற்போது புனைவுக்களியாட்டு கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நண்பர்களுக்கு “யாதேவி சர்வ பூதேஷு, சக்தி ரூபேண…” கதைகள் பிடித்திருந்தன. “ஆனையில்லா” கதை உறவுக்காரர்கள் மத்தியில் கொடி பரவி விட்டிருந்தது. எனக்கு இந்த இரண்டு மாதமாக “மாடன் மோட்சம்” அனுதினமும் நினைவிலிருந்து கொண்டேயிருக்கிறது.

வெண்முரசு குறித்த கடிதங்களை கடந்த இரண்டு மாதங்களாக வாசித்துவருகிறேன். வெண்முரசைத் தொடர்ந்து வாசித்து / வாழ்ந்து இரசிக்கவேண்டும் என்ற பெருங்கனவொன்று துரத்திக் கொண்டிருக்கிறது. ஆகையால் முதற்கனல் வண்ண ஓவியத்துடன் கூடிய செம்பதிப்பை பெற எண்ணி ஒருவாரமாக பல தளத்தில் துளாவினேன். கிடைத்த பாடில்லை. Collectors edition தான் வாங்கி வாசித்து இன்புற்று பிறருக்கும் கொடுக்க வேண்டுமென்று விடாப்பிடியாக இருக்கிறேன். இணையத்தில் out-of-stock என்றுள்ளது. முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் ஓவியத்துடன் கூடிய செம்பதிப்பு நூல்களை வாங்க வழியொன்றிருப்பின் பகிரவும். சிவகாசியிலிருந்து மதுரை சென்று வாங்கிக்கொள்ளமுடியும் என்னால். செம்பதிப்பு அங்கே கிடைக்குமெனில் முகவரியை பின் இணைக்கவும். மற்றும் நூறு கதைகளையும் புத்தகவடிவில் கொணர்க.

இவ்வருடம் முதல் நவீன தமிழிலக்கியத்தை வாசித்து மதிப்புரை எழுதப் பழகிக்கொண்டிருக்கிறேன். தி.ஜா, வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன், பெருமாள் முருகன் என படைப்புகளைத் தொட்டிருக்கிறேன். முதல்நிலை வாசகனுக்கு மதிப்புரை எழுதத், தெளிவாக புரிந்துகொள்ள, *சிந்திக்க* உதவுமாறு விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

நீடூழி வாழ்க.

என்றும் பேரன்புடன்,

தி.ராம்குமார்

***

அன்புள்ள ராம்குமார்

வாழ்த்துக்கள்.

மதிப்புரை எழுதுவதற்கான அடிப்படை வடிவம் ஒன்றுதான். அந்நூலின் உள்ளடக்கம் பற்றிய சுருக்கமான அறிமுகம். தேவை என்றால் அவ்வாசிரியர் பற்றியும் ஓர் அறிமுகம். அந்நூலுக்கு சூழலில் என்ன இடம், அதன் முக்கியத்துவம் என்ன என்று ஒரு விளக்கம். அந்நூல் பற்றி உங்கள் தரமதிப்பீடு என்ன, அல்லது அதிலிருந்து நீங்கள் அடைந்தது என்ன என்று ஒரு குறிப்பு. இம்மூன்றும் இணைந்ததே மதிப்புரை. இம்மூன்றும் சரியான விகிதத்தில் அமைந்திருந்தால்போதும்.

மதிப்புரைக் குறிப்பில் சொந்த வாழ்க்கை அனுபவங்கள், வேறுநூல்களை வாசித்த அனுபவங்கள், சொந்த சிந்தனைகள் இடம்பெறலாகாது. ரசனைக்கட்டுரை என இன்னொரு வகைமை உண்டு. அதில் இவை இடம்பெறலாம். அத்தகைய கட்டுரைகள் சிறுகதையின் வடிவை கொண்டிருக்கவேண்டும். கவரும் தொடக்கம், ஒழுக்கும் கூர்மையும் உள்ள நடை, முத்தாய்ப்பு ஆகியவை வேண்டும். அவற்றில் சொந்த அனுபவம், சொந்தக்கருத்து ஆகியவை மூன்றிலொன்றும், அந்நூலின் உள்ளடக்கம் மற்றும் அந்நூல் பற்றிய மதிப்பீடு மூன்றில் இரண்டு பங்கும் இருக்கலாம்

மதிப்புரை சுருக்கமாக இருக்கலாம். ஒரு பத்திகூட இருக்கலாம். ஆனால் அதற்குள்ளும் இந்த மூன்றங்க அமைப்பு இருக்குமென்றால் அது வாசகனுக்குப் பயனுள்ளது. நமக்கு இன்று வாசிப்புக்கு இணையாக இலக்கியம், அறிவியக்கம் பற்றிய உரையாடலும் தேவை. தொடர்ந்த குறிப்புகள், மதிப்புரைகள், ரசனைக்கட்டுரைகள் வழியாகவே இலக்கியம் ஓர் இயக்கமாக நிலைகொள்ள முடியும். அனைவருமே எழுதும் சூழலிலேயே அது அமையும்.

ஜெ

பிகு: நூறு கதைகளும் பிறகு எழுதிய முப்பது கதைகளும் தனித்தனி நூல்களாக வெளிவந்துள்ளன. இப்போது மின்னூல்களாக, விரைவில் அச்சில் வெளிவரும்

Goodreads, Amazon போன்ற தளங்களில் நூல்களைப் பற்றிச் சுருக்கமாக மதிப்புரைக்குறிப்பு எழுதலாம்.

ஜெயமோகன், அமேசான் மின்னூல்கள்

***

குமரித்துறைவி வான் நெசவு இரு கலைஞர்கள்
பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் “ஆனையில்லா”
முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது
தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில்
உடையாள் கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள்
பத்துலட்சம் காலடிகள் ஞானி குகை
சாதி – ஓர் உரையாடல் வணிக இலக்கியம் வாசிப்பின் வழிகள்
இலக்கியத்தின் நுழைவாயிலில் ஒருபாலுறவு

முந்தைய கட்டுரைசீவகசிந்தாமணி, உரையாடல்
அடுத்த கட்டுரைஉணவு எனும் தெய்வம்