வழி:கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் உங்கள் கதைகள் மற்றும் கட்டுரைகளை கடந்த 4 வருடங்களாக படித்து வருகிறேன். நான் தேர்ந்த இலக்கிய வாசகன் இல்லை என்ற போதிலும், புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் உண்டு. உங்கள் இணையதளத்தை என் தோழர் அறிமுகப்படுத்தினார். அதிலிருந்தும் உங்கள் எழுத்துகளை படித்து வருகிறேன். உங்கள் “வழி” என்ற நகைச்சுவை சம்பவ குறிப்பு சார்ந்த கட்டுரையை சமீபத்தில் படித்தேன். அதன் இறுதியில் உள்ள ஒரு தத்துவ கேள்வி கொஞ்சம் சிந்திக்க வைத்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஆர்வத்திலேயே இந்த கடிதம். ‘ஒரே இடம் நாம் வரும் திசைக்கு ஏற்ப தலைகீழாக மாறுகிறது’ என்ற வாசகம் – ‘எதிரெதிரே உள்ள இருவரின் இடமும் வலமும் மாறுபடும்’ என்ற ஒலிபிம்ப தத்துவத்தை மேலும் சொல்கிறது. சொல்லபோனால் இரு கொள்கை மாறுபட்டவர்களின் கருத்துகள் கூட இதே வகைதான். என் நியாயங்கள் உன் அநியாயங்கள் ஆகின்றது. என் காரணங்களால் சரியானது, உன் காரணங்களால் தவறாகிறது – இது எத்தனை குழப்பங்களுக்கு மனிதர்களை ஆளாக்குகிறது. தோழமை, குடும்ப அமைப்பு கூட இந்த குழப்பங்களில் இருந்து தப்புவதில்லை. எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை என நினைக்கிறேன்.  :-) (May be the way i try to convey the message is funny… ) . எனினும் – நன்றி.

– முத்துகுமார்.

அன்புள்ள முத்துக்குமார்

‘வழி’ உண்மையில் ஒரு சம்பவத்தில் இருந்து உருவான நகைச்சுவை. கொஞ்சம் புனைவு. இம்மாதிரி நடைமுறைச்சிக்கல்கள் அனைத்திலுமே உள்ளூர ஒரு தத்துவச்சிக்கலும் இருக்கிறது. நமக்கு எதிரே நடந்துவருபவர் நாம் காணாத ஒரு தெருவையே பார்க்கிறார் என்று சற்று யோசித்தால் உணர முடியும். இந்த வகையான எல்லைக்குறுக்கல்கள் வழியாகவே இயற்கை நம்மைப்போன்ற எளிய மனிதர்களுடன் விளையாடுகிறது என்று தோன்றுகிறது
ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. உங்கள் வார்த்தைகள் மிகவும் சரி. நாம் காணாத ஒரு கோணத்தில் நம் எதிரே வரும் ஒருவர் நாம் வரும் அதே தெருவை காணமுடிகிறது. இயற்க்கை உருவாக்கும் காட்சி குழப்பங்கள் ஒரு வகையில் நமக்கு வாழ்க்கை பாடம்தான். எதிராளின் கருத்துகளுக்கும் காரணங்கள் உண்டு என்ற புரிதலை நமக்கு உணர்த்துகிறது. பெரும்பாலான உறவுநிலை சார்ந்த குழப்பங்கள் இத்தகைய புரிதல் இல்லாததாலேயே உருவாகின்றன என்பது என் கருத்து. உங்கள் கன்னியாகுமரியில் கூட சில கதாபாத்திரங்களை அப்படி உணர்கிறேன்.

நன்றி.
முத்துகுமார்.

**

அன்புள்ளஜெ

நீங்கள் எழுதிய நகைச்சுவைக்கட்டுரைகளிலேயே வழி பொருளியல் விபத்து இரண்டும்தான் மிகச்சிறந்த படைப்புகள் என்று சொல்வேன். அவை இரண்டிலுமே உண்மையான வாழ்க்கை அனுபவத்தில் இருந்து உருவாகக்கூடிய ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது ஒரு உண்மைத்தன்மை. அப்படிப்பட்ட அபத்தமான விசயங்கள் நாம் எல்லாருக்குமே நடக்கும். நம் நினைத்தது போல ஒரு விஷயம் நடந்துவிட்டால் அது நார்மல் என்று சொல்கிறோம். நடக்காவிட்டால் காமெடி. ஒரு விபத்தில் யாருக்கும் அடியே படவில்லை என்றால் அது அப்படியே காமெடியாக ஆகிவிடுகிறது அல்லவா? அதைப்போலத்தான் எல்லா காமெடியும். காமெடி என்பது ஆபத்து இல்லாத விபத்து என்று தோன்றுகிறது

செல்வகுமார் சரவணன்

 

 

வழி

ஒரு பொருளியல் விபத்து

முந்தைய கட்டுரைமதுபாலா:கடிதங்கள்
அடுத்த கட்டுரைநான் கடவுள், கடிதம்