பெண்களின் பயணம்,கடிதம்

பெண்களின் துறவு, ஒரு வினா

பெண்களின் ஜன்னல்

பயணம் – பெண்கள்- கடிதங்கள்

கிளம்புதல்,பெண்கள்

பெண்கள் இந்தியாவில் தனியாகப் பயணம் செய்யலாமா?

அன்புள்ள ஜெ

பெண்கள் பயணம் செய்வது பற்றி நீங்கள் எழுதியிருந்த கட்டுரைகளை படித்தேன். தொடர்ச்சியாக அதை பல ஆண்டுகளாகச் செய்துவருகிறீர்கள். அதை உங்கள் நட்புக்குழுவிலிருக்கும் பெண்களும் ஓரளவு செய்துவருவதாகக் கடிதங்களில் இருந்து அறிந்தேன். மகிழ்ச்சியான விஷயம்.

பெண்கள் இன்றைக்கு தனியாகப் பயணம் செய்வது மிகக்கடினம். குடும்பத்துடன் பயணம் செய்தால் அது பயணமே அல்ல. குடும்ப வேலையும் பொறுப்பும் போகும் இடங்களிலும் அப்படியே நீடிக்கும். எதையுமே அறியமுடியாது. அவை நினைவிலும் நிற்காது.

அதற்காக பெண்கள் ஒத்த உள்ளம் கொண்ட பெண்களுடன் இணைந்து பயணக்குழுக்களை உருவாக்கலாம் என்கிறீர்கள். ஆனால் அதிலுள்ள உண்மையான சிக்கல் என்னவென்றால் பெண்களால் அப்படி எளிதாக வேறு பெண்களுடன் இணைய முடியாது என்பதுதான். ஆண்கள் எந்த வயதானாலும் கோஷ்டி சேர முடிகிறது. ஆண்களுக்கு உயிர்நண்பர்களும் உண்டு. பெண்களுக்கு கல்யாணமாகிவிட்டால் அனேகமாக தோழிகளே இல்லை. வெளியே சென்று ஒன்றுசேரவும் முடியாது. இன்னொரு பெண்ணுடன் ஒத்துப்போவதும் கஷ்டம். இதுதான் உண்மையான பிரச்சினை.

பெண்கள் பயணம் செய்வதிலுள்ள இன்னொரு சிக்கல் உண்மையிலேயே அவர்களுக்கு குடும்பத்தை விட்டு வர மனமில்லை என்பதுதான். குடும்பம் தானில்லாமல் இருக்கும் என கற்பனை செய்யவே பயப்படுகிறார்கள். என் குடும்பம் நானில்லாவிட்டால் தவித்துப்போய்விடும் என்றுதான் சொல்வார்கள். அவர்களை விட்டுவிட்டு வந்தால் அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் உண்மை அது அல்ல. இவர்கள்தான் கஷ்டப்படுவார்கள்.

ஏனென்றால் இந்தப்பெண்கள் ஒரு சித்திரத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். தாங்கள் குடும்பத்திற்காக தங்கள் மொத்த வாழ்க்கையையுமே தியாகம் செய்வதாகவும் அந்த தியாகம் எவரும் மதிக்காமல் போவதாகவும் காட்டிக்கொள்வார்கள். உண்மையில் அந்த இமோஷனல் பிளாக்மெயில்தான் இவர்களின் அடிப்படை ஆயுதம். குடும்பத்தை விட்டு வெளியே கிளம்பினால் அந்த ஆயுதம் பொய் என்று தெரியவரும். ஆகவே கிளம்ப முடிந்தாலும்கூட கிளம்ப முடியாத சூழல் என காட்டி, தாங்கள் தியாகம் செய்வதாக ஒரு பாவலா காட்டி, குடும்பத்தினரிடம் குற்றவுணர்ச்சியை உண்டுபண்ணுவார்கள்.

இதையெல்லாம் திட்டமிட்டு அவர்கள் செய்வதில்லை. இயல்பாகவே இந்த நடிப்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது. ஆகவே இதையெல்லாம் விட்டுவிட்டு எங்க போக முடியுது என்று அவர்கள் கண்ணீர் வடிக்கும்போது உண்மையாகவேதான் அப்படிச் சொல்கிறார்கள்.

மிகச்சில பெண்களுக்கு ஒரு அதாரிட்டேரியன் குணமும் பெர்ஃபெக்‌க்ஷன் பார்க்கும் குணமும் இருக்கும். அதையெல்லாம் குடும்பத்தில் ஒரு அதிகாரமாக செயல்படுத்திக் கொண்டிருப்பார்கள். அவர்களால் குடும்பத்தை இஷ்டப்படி விட்டு வரமுடியாது. ஆனால் குடும்பம் பெரிய சுமையாக அழுத்துவதாகச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அதோடு இப்படியெல்லாம் பயணம் செய்வதற்கு அதற்கான ஒரு தேடல் வேண்டும். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கப்படவேண்டும். நீங்கள் சிற்பங்கள், கோயில்கள் பற்றியெல்லாம் எழுதுகிறீர்கள். எத்தனை பெண்கள் அவற்றையெல்லாம் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? மிகமிகக்குறைவு. பெண்கள் விரும்புவது ஓய்வான மனமகிழ்ச்சிப் பயணங்களைத்தான். அதற்கு அவர்கள் தனியாகவோ இன்னொரு பெண்ணுடனோ போகமுடியாது. கூடவே ஆண்கள் வந்து பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஆட்களிடம் பேசுவது வண்டி ஏற்பாடு செய்வது போன்றவற்றை எல்லாம் செய்துகொடுக்கவேண்டும். அதன்பிறகும் இவர்கள் சலித்துக்கொள்வதை கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். இதெல்லாம்தான் உண்மையான சூழல்.

நீங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது இதற்கு அப்பால் உண்மையாகவே பயணம் செய்ய விரும்பும் பெண்களிடம் என்று எடுத்துக்கொள்கிறேன். அவர்கள் ஆயிரத்தில் ஒருசிலர்தான்

தேவிப்பிரியா

முந்தைய கட்டுரைபாலியலின் ஆன்மிகம்
அடுத்த கட்டுரைவாசகனிடம் அணுக்கம்