நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்
அன்புள்ள ஜெ,
ஆலயங்களை விட்டு அரசு வெளியேறவேண்டும் என்பது நெடுங்காலமாக விஸ்வஹிந்து பரிஷத் முன்வைத்த கோரிக்கை. மறைந்த பெரியவர் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி அவர்களும் இதை சொல்லியிருக்கிறார். இவற்றையே இன்று ஜக்கி வாசுதேவ் அவர்கள் சொல்லிவருகிறார்கள். ஒரு மக்களியக்கமாக ஆரம்பித்திருக்கிறார்கள்.
நீங்கள் இன்று ஆலயப்பாதுகாப்புக்கென ஆலோசனை சொல்வீர்கள் என்றால் என்ன சொல்வீர்கள்?
அர்விந்த் குமார்
***
அன்புள்ள அர்விந்த்குமார்,
விஸ்வஹிந்து பரிஷத் இந்தக்கோரிக்கையை நாற்பதாண்டுகளாக எழுப்பி வருகிறது. எனக்கு நாற்பதாண்டுகளாகவே அவ்வியக்கத்தை அணுகியமர்ந்து நோக்கும் வாய்ப்பும் அமைந்தது. அதிலிருந்தே ஆலயங்கள் தனியாரிடம் செல்லவே கூடாது என்றும், இந்து பக்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு அதற்கான அறத்தகுதியோ அறிவுத்தகுதியோ இல்லை என்றும் புரிந்துகொண்டேன்.
விஸ்வஹிந்து பரிஷத்தும் சங்கர மடமும் நிறுவிய இந்துமதம் சார்ந்த அமைப்புக்கள் எப்படிச் செயல்படுகின்றன, எந்நிலையில் இருக்கின்றன என்று ஒரு பொதுப்பார்வை பார்த்தாலே போதும். உண்மை நிலவரம் புரியும். அந்தக் கசப்புநிறைந்த உண்மைகளுக்குள் செல்ல விரும்பவில்லை.
இந்துபக்தர்கள் என்பது மிகப்பொதுவான வார்த்தை. எத்தகைய பக்தர்கள்? நேற்றுவரை ஆலய அதிகாரம் கொண்டிருந்தவர்களா? இன்று ஆலயவழிபாட்டுக்கு வந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் அடித்தள இந்துக்களுக்கு என்ன இடம் அதில்? நேற்றுவரை இந்து ஆலயங்களைச் சூறையாடிய பரம்பரை அறங்காவலர்களும் ஆலயநிலங்களை உரிமைகொண்டவர்களும் இந்து பக்தர்களா? அவர்கள் நாளை அமைப்புக்களை கைப்பற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? சாமானிய இந்துக்களுக்கு இதில் என்ன பங்கு?
இன்று இந்துக்கள் நடுவே வரவேண்டிய விழிப்புணர்வு இதுதான். பலமுறைச் சொன்னதைத் திரும்பச் சொல்கிறேன்.
அ. ஆலயங்களை பராமரிக்கவேண்டியது அரசின் பொறுப்பு. ஏனென்றால் ஆலயத்தை பராமரிப்பதற்கு அளிக்கப்பட்ட நிலங்களை பிறருக்கு கையளித்து ஆலயங்களைக் கைப்பற்றிக்கொண்டது அரசுதான். ஆகவே ஆலயநிதி வேறெதற்கும் பயன்படுத்தப்படலாகாது. அரசு மேலும் நிதியொதுக்கி ஆலயங்களை பராமரிக்கவேண்டும்.
ஆ. ஆலயநிலங்கள், சொத்துக்கள் கைப்பற்றப்படவேண்டும். உரியமுறையில் குத்தகை வசூலிக்கப்படவேண்டும். அதற்கான தனி சட்ட அமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டும்
இ. ஆலய ஊழியர்களை அரசூழியர்களாக ஆக்கவேண்டும். பெரிய ஆலயங்கள் சிறிய ஆலயங்கள் என அனைத்து ஊழியர்களையும் அரசூழியர்களாக ஆக்கவேண்டும். இயலாத விஷயம் அல்ல. நம்மைவிட வருமானம் குறைவான ஆலயங்கள் கொண்ட கேரளத்தில், கம்யூனிஸ்டு ஆட்சியாளர்களால் அது நடைமுறைப்படுத்தப்பட்டு அரைநூற்றாண்டாகிறது.
ஈ. ஆலயத்தின் அமைப்பு சற்றும் மாற்றப்படலாகாது. ஆலயத்தில் புதிய கட்டுமானங்கள் எழுப்பப்படலாகாது. ஆலயத்தை மாற்றியமைக்க ஆகம- சிற்பநூல் வல்லுநர்களின் ஆலோசனை தேவை. அதில் மத்திய தொல்லியல்துறையின் நெறிகள் கடைப்பிடிக்கப்படவேண்டும்
உ. ஆலயத்திற்குள் வழிபாட்டு நெறிகள் மட்டுமல்லாது நடத்தை நெறிகளும் கடைப்பிடிக்கப்படவேண்டும். ஆலய அழிவை உருவாக்கும் எந்த செயலும் உறுதியாக கட்டுப்படுத்தப்படவேண்டும்.
ஊ. ஆலயத்திற்குள் பெருங்கூட்டம் வருவது கட்டுப்படுத்தப்படவேண்டும். ஆலயக் கட்டுமானம் அத்தகைய மாபெரும் திரளுக்கு உகந்தது அல்ல. அப்படி கூட்டம் வரும்போது கட்டுப்படுத்தும்பொருட்டு அமைக்கப்படும் மூங்கில் கட்டுமானங்கள், இரும்பு கட்டுமானங்கள் சென்ற இருபதாண்டுகளாக ஆலயங்களை அழிக்கின்றன.
பலகாலமாக நான் சொல்லிவருவன இவை. ஒருமுறை நண்பர் ஒருவர் முயற்சியால் துண்டுப்பிரசுரமாகவும் வெளியிடப்பட்டவை. அரசியல் காழ்ப்பாளர்கள், வெறுப்புமொழியர்களின் சலசலப்பைக் கடந்து, ஆலயத்தை கைப்பற்ற நினைக்கும் தன்னலமிகளின் கூற்றுக்களை கடந்து, இச்செய்தி சிலரையாவது சென்றுசேர இந்த விவாதம் உதவினால் நல்லது.
ஜெ