கி.ரா.உரையாடல்- கடிதங்கள்

அன்பின் ஜெ, வணக்கம்!

கி.ராவுடனான காணொளி சந்திப்பு, இரு நாட்களாக பல நினைவலைகளை உண்டு பண்ணியபடி இருக்கிறது. மார்பில் அரை ஈரத்தில், ஈரிழை துண்டு ஒன்றை போர்த்தியபடி சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் தாத்தாவிடம், அருகமைந்து பழங்கதைகளை கேட்டுக்கொண்டிருப்பதில் எனக்கு அலாதிப் பிரியம். பல வருடங்களுக்கு பிறகு, இந்நிகழ்வு எனக்கு அந்த மன நிறைவை கொடுத்தது. குறிப்பாக, கேள்வியின் தடத்திலிருந்து சற்றே விலகி, கேள்விக்கான பதிலைவிட அதீத சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சொல்லிமுடித்து “இப்ப கேள்வி என்ன…?” என்று எதிரில் அமர்ந்திருப்பவரை பார்த்து வாஞ்சையாய் கேட்கும் தருணம். “பேசிக்கிட்டே இருந்தா நல்லாத்தா இருக்கு, இல்ல… ஆனா நேரமாயிட்டுதே…. முடிச்சிக்க வேண்டியதுதான்…”

பாண்டிச்சேரியில் சென்ற வருட கடைசியில் நடைபெற்ற ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் கி.ரா சொன்னது. கி.ராவின் உடல்நிலை கருதி, நிகழ்வை விரைவில் முடித்துக் கொண்டாலும், இம்முறையும் அவர் அதையே எண்ணியிருப்பார்.. கி.ராவின் உரையாடலை வாய்பிளந்து கேட்ட ஒவ்வொருவரும் நல்லூழ் கொண்டவர்கள்…

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்.

***

அன்புள்ள ஜெ

கிராவுடனான உரையாடலை இப்போது பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று நானும் யுடியூபில் அந்த உரையாடலைப் பார்த்தேன். சொல்லப் போனால் நடுவே ஆபீஸ் வேலை பார்த்துக்கொண்டே பார்த்தேன். நினைத்திருந்தால் சூமில் வந்திருக்க முடியும். பரவாயில்லை என்று நினைத்தேன். இன்றைக்கு பார்க்கும்போது சட்டென்று ஒரு பெரிய ஏக்கம் வந்து கண்ணீர் மல்கிவிட்டேன். எவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வு. இன்னும் எத்தனை ஆண்டுகள் இது இங்கே இருக்கப்போகிறது. ஆனால் அப்போது தெரியாமல் போய்விட்டது. சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டேன். கிராவின் சிரிப்பும் சகஜமான பாவனைகளும் ஒரு கனவு போல தெரிந்தன. முப்பாட்டனுக்கு வணக்கம்

செல்வின் குமார்

கி.ரா உரையாடல்
கி.ரா
கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு
கோபல்லபுரத்து மக்கள் – வாசிப்பனுபவம்
கி.ரா – தெளிவின் அழகு
கி.ரா.என்றொரு கீதாரி
கி.ரா- ஞானபீடம்- கடிதங்கள்
கி.ராவுக்கு இயல்
கன்னி எனும் பொற்தளிர்
கி ராவை வரையறுத்தல்
கி.ராவுடன் ஒரு நாள்
கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை
சொல்லும் எழுத்தும்
இந்த இவள் – கி. ரா- வாசிப்பனுபவம்
கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி
கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2

முந்தைய கட்டுரைஅரவிந்த் கண் மருத்துவக் குழுமம் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஎன்ன இந்த உறவு, எதன் தொடர்வு?