உணவு எனும் தெய்வம்

அன்பின் ஜெ, நலம்தானே?

2004 அல்லது 2005-ம் வருடமாக இருக்கலாம். ஓசூரிலிருந்த போது, தளிக்கு அருகில் உப்பனூர் ஏரிக்கருகில் அமைந்திருந்த சுவாமி சஹஜானந்தா நிறுவிய அதீத ஆஸ்ரமத்திற்கு நானும், அம்முவும் இயலைக் கூட்டிக்கொண்டு அடிக்கடி போய்வருவது வழக்கம். வார இறுதி நாட்களில் முழு நேரமும் அங்கு கழிப்பதுண்டு. ஆஸ்ரமம் இயற்கை சூழ்நிலையில் பசுமையாக மரங்களடர்ந்து வனப் பகுதியில் இருப்பது போல் இருக்கும். உள்ளே ஒரு நூலகம் உண்டு. ஓஷோவின் பகவத் கீதை உரைகள், சஹஜானந்தா சுவாமிகளின் சிஷ்யையான மா ராஜி என்ற ராஜலட்சுமியின் தமிழ் மொழிபெயர்ப்பில்தான் தமிழில் 18 பாகங்களாக அதீத ஆஸ்ரம் மூலம் வெளிவந்தது.

நான் ஒரு முறை ராஜி மா-வைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறேன். ஆஸ்ரமத்தை நிர்வகிக்கும் அதீத மாஜியும், கலாம்மாவும், அங்கு வேலை பார்க்கும் ராதாக்காவும் நெருங்கிய நண்பர்களாயிருந்தனர். ஆஸ்ரமத்தில் அடிக்கடி ”ஆரோக்கிய முகாம்”கள் நடக்கும். ஓஷோவின் தியான முகாம்களும் வருடம் ஒருமுறை நடப்பதுண்டு. ஆரோக்கிய முகாம்களை அதீத மா-தான் நடத்துவார்கள். குழந்தைகளுக்கு தனியாக, பெரியவர்களுக்கு தனியாக என்று நடக்கும். பெரியவர்கள் முகாம் பத்து அல்லது பனிரெண்டு நாட்கள் நடக்கும். யோகாசனம் மற்றும் ப்ரானிக் ஹீலிங் பயிற்சிகள், தியானம், ஃபாஸ்டிங் சில நாட்கள், மிதமான உணவு, வாசிப்பு என்று நிகழ்வுகளிருக்கும். கலந்து கொள்பவர்கள் ஆஸ்ரமத்தின் குடில்களில் தங்கியிருப்பார்கள்.

என் உடல் எடை, 1997-க்குப் பிறகு மளமளவென்று ஏறி தொண்ணூறை நெருங்கிக் கொண்டிருந்தது. அதீத மா-வைச் சந்திக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள் ஏதேனும் ஒரு ஆரோக்கிய முகாமில் கலந்து கொள்ளுமாறு. தட்டித் தட்டி கழித்து கடைசியில் ஒருமுறை கலந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தபோது, முகாம் நிகழ்வு எதுவும் வரவில்லை. அதீத மாஜி ”பரவாயில்லை. வந்து ஆஸ்ரமத்தில் தங்கிக்கொள். பெரும்பாலும் ஃபாஸ்டிங்-தான் இருக்கும். சின்னச் சின்ன பயிற்சிகள் இருக்கும். நான் சொல்லித் தருகிறேன். உனக்கு இருக்கவே இருக்கிறது நூலகம்” என்றார்கள்.

அம்முவையும், இயலையும் ஓசூர் நேரு நகர் வீட்டில் விட்டுவிட்டு, பத்து நாட்களுக்கான துணிகளை பையில் எடுத்து வைத்துக்கொண்டு, டிவிஎஸ் 50-யில் ஆஸ்ரம் போனேன்.

”ஃபாஸ்டிங் ஆரம்பிக்கலாம் வெங்கடேஷ். பத்து பதினோரு நாள் வரைக்கும் தாராளமா ஃபாஸ்டிங் இருக்கலாம். பார்ப்போம் நீ எத்தனை நாள் தாக்குப் பிடிக்கிறேன்னு. தண்ணி எவ்வளவு வேணா குடிச்சிக்கலாம். ரொம்ப டயர்டா இருந்தா, வேற ஏதாவது ப்ராப்ளம்னா சொல்லு, சர்க்கரை போடாம லெமன் ஜூஸ் அல்லது வேற ஏதாவது ஜூஸ் தரச் சொல்றேன். படிக்கலாம். கோவிலுக்கு வரலாம் (ஆஸ்ரமத்தினுள்ளேயே சிவன் கோவிலும் சிறிய விநாயகர் கோவிலும் இருந்தது). சஹஜா ஹால்ல தியானம் பண்ணலாம்” என்று அறிமுகம் கொடுத்துவிட்டு ராதாம்மாவிடம் சஹஜா ஹால் பின்புறமிருந்த குடில்களில் ஏதேனும் ஒரு குடிலை ஒதுக்கி தருமாறு சொல்லி, ”நாளைக்கு காலையில 5 மணிக்கு விநாயகர் கோவில்ல பூஜை இருக்கும். அங்க பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு சஹஜானந்தாவின் சில புத்தகங்களை படிக்கக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

ஒரே ஒரு அறை கொண்ட ஓலைக்கூரை போட்ட வட்ட வடிவக் குடில். பாத்ரூம்கள் குடிலுக்குப் பக்கத்தில் நாலைந்து வரிசையாயிருந்தன. இரவு கவியக் கவிய குடிலைச் சுற்றியிருந்த மரங்களில் பறவைகளின் கீச்சுக் குரல்கள் அதிகமிருந்தன. தூரத்தில் மயில்களின் அகவல்களும் கேட்டன. முன்னிரவிலும், அதிகாலையிலும் உடல் நடுக்கும் குளிர். முதல் நாள் காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு கிளம்பி குடிலுக்கு முன் நிறுத்தியிருந்த டிவிஎஸ் 50-ஐ எடுத்துக்கொண்டு விநாயகர் கோவிலுக்கு சென்றேன். அந்த வைகறையில், கவியும் பனியின் அமைதியில் டூவீலரின் ஒலி அச்சூழலுக்கு அந்நியமாய் இருந்தது.

ஐந்து மணிக்கு அதீத மா வந்தார். முதல் அரை மணி நேரம் விநாயகர் கோவிலில் பூஜை. அடுத்து சிவன் கோவிலில். அடுத்து சஹஜா ஹாலில் தியானம். மதியம் “சோவா” ஹாலில் வாசிப்பும், ப்ரானிக் ஹீலிங் பயிற்சியும். மாலையில் மறுபடியும் சிவன் கோவிலில் அந்தி பூஜை. முன்னிரவில் ”சோவா” ஹாலில் கிளாஸிகல் இசையோ, மாஸ்டர் “கோக் சுய்”யின் உரையோ கேட்பது. தோட்டத்தில் வேலை செய்யும் ராமு அண்ணா குடிலுக்கு எனிமா கப் ஒன்றைக் கொண்டுவந்து தந்து மறுநாளிலிருந்து உபயோகிக்கும்படி சொல்லி கொடுத்துவிட்டுப் போனார்.

முதல் நாள் ஒன்றும் தெரியவில்லை. உற்சாகமாகவே இருந்தது. இரண்டாம் நாள் சிறிது களைப்பாக உணர்ந்தேன். ஆஸ்ரமத்தின் எல்லா இடங்களிலும் (சஹஜா ஹால், சோவா ஹால், சிவன் கோவில், குடில்) மண்பானையில் நீர் வைக்கப்பட்டிருந்தது, மேலே டம்ளருடன். மூன்றாம் நாள் கமலாம்மாவிடம் கேட்டு இரண்டு கிளாஸ் லெமன் ஜூஸ் குடித்தேன், மதியமும் இரவும். முதல் இரண்டு நாட்கள் புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன்.

மூன்றாம் நாள் அதீத மா, “டயர்டாயிருந்தா புக் படிக்கவேண்டாம் வெங்கடேஷ்” என்றார்.

நான்காம் நாள் அதிகாலை மூன்று மணிக்கே விழிப்பு வந்தது. பக்கத்து மரங்களில் துயிலெழும் பறவைகளின் விதவிதமான கீச்சொலிகள். அப்பா! எத்தனை விதமான குரல்கள்! பாத்ரூம் போவதும் குளிப்பதும் வழக்கத்தைவிட மிக நிதானமாக நடந்தது. சுற்றிலும் பறவைகளின் ஒலிகள் சூழ்ந்திருந்தாலும், மனம் ஏதோ ஆழத்தில் ஒலியில்லாத மௌனத்தில் அமிழ்ந்தது போல் இருந்தது. விடிய விடிய வெளிச்சம் வர வர மனதில் ஏதோ பதட்டமோ அல்லது இனம் புரியாத பயம் ஒன்றோ மெல்ல மெல்ல உருவாகி ஆக்ரமிப்பது போல் இருந்தது. பதினோரு மணி வரை அந்த உணர்வை சகித்துக்கொண்டிருந்தேன். அதற்கு மேல் அந்த பயம் அதிகரிக்கவே அதீத மா-விடம் சொல்லலாம் என்று முடிவு செய்து மாஜியைத் தேடினேன்.

அதீத மா, ராதாக்காவுடன் ”சோவா” ஹால் பக்கமிருந்த டைனிங் ஹாலில் பேசிக்கொண்டிருந்தார். நான் அறைக்குள் நுழைந்ததும் “வாங்க வெங்கடேஷ். உட்காருங்க. “The Monk who sold his Ferrari” படிச்சு முடிச்சிட்டிங்களா? எப்படி இருந்தது? ஃபாஸ்டிங் எப்படி போயிட்டிருக்கு?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

நான் தலைகுனிந்து அங்கிருந்த பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்தேன். என் மனநிலையை எப்படி மாஜியிடம் சொலதென்று தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து “என்னன்னு தெரியல மாஜி. ஏதோ பதட்டமா, பயமா இருக்கறது மாதிரி இருக்கு” என்றேன்.

”என்ன பண்ணுது? ஜூஸ் கொஞ்சமா குடிக்கறீங்களா? ஃபாஸ்டிங் போதும்னா கொஞ்சமா ஃப்ருட்ஸ் ஸ்டார்ட் பண்ணிக்கலாம்” என்றார்.

நான் மறுபடி தலைகுனிந்து உட்கார்ந்திருந்தேன். மனதில் இருக்கும் உணர்வை உற்றுப் பார்க்க முயன்றுகொண்டிருந்தேன். அது பிடிபடாமல் நழுவிக்கொண்டிருந்தது. ராதாக்கா எழுந்து சென்று சமையலறைக்குப் போய் ஒரு ஆப்பிளை ஏழெட்டு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து என் எதிரில் வைத்தார் (அதீத மா அவரிடம் சைகையில் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்). நான் என் முன்னால் தட்டிலிருந்த ஆப்பிள் துண்டுகளை மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்கள் நிறைந்து அழுகை வரும்போல் இருந்தது. ஏன் அழுகை வருகிறது? ஏன் உணவைக் கண்டதும் மனம் இத்தனை விம்முகிறது?

ஆப்பிள் துண்டுகளின் தோலில் அக்னியின் சிவப்பு. ”அன்னமே! இறையே! தழலே!” என்று மனம் அரற்றியது. “சாப்பிடுங்க” என்று ராதாம்மா சொன்னதும் வெடித்து அழுகை வந்தது. கன்னங்களில் நீர் வழிந்தது.

“என்னாச்சு என்னாச்சு” ராதாம்மா பதட்டமானார்.

அதீத மா “ஒண்ணுமில்ல” என்று சொல்லி ராதாம்மாவை அமைதிப்படுத்தினார்.

நான் பத்து நிமிடம் அழுது ஓய்ந்தேன்.

“சாப்பிடுங்க வெங்கடேஷ்” அதீத மா சொன்னதும் ஒரு ஆப்பிள் துண்டை கையில் எடுத்து உற்றுப் பார்த்தேன். வாயில் இட்டு அதக்கினேன். உமிழ்நீர் சுரந்து அதைச் சூழ்வதை உணர்ந்தேன். அந்த ஏழெட்டு துண்டுகளை சாப்பிட்டு முடிக்க இருபது இருபத்தைந்து நிமிடங்கள் ஆனது.

“இன்னிக்கு சாயந்திரம் சஹஜா ஹால்ல நாடி சுத்தி பண்ணுங்க வெங்கடேஷ்” என்றார் அதீத் மா.

பத்தாம் நாள் மாலை அதீத மா-விடம் ஆசி வாங்கிவிட்டு, தளி ஆஸ்ரமத்திலிருந்து கிளம்பி ஓசூர் வந்தேன். அன்று இரவுணவிற்கு அம்மு எனக்குப் மிகப்பிடித்த புளியோதரையும், சாம்பாரும் செய்திருந்தார். தட்டில் புளியோதரை ஒரு கரண்டி போட்டு அருகில் சாம்பார் ஊற்றி தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த என் முன்னால் வைத்தார். உணவைக் கண்டதும் மனது நெகிழ்ந்தது. “மஹா ப்ரசாதே தேவி!” என்று மனம் கைகூப்பியது. நிமிர்ந்து அம்முவைப் பார்த்தேன். அந்த நமஸ்காரம் அம்முவிற்கும் சேர்த்துத்தான்.

வெங்கடேஷ் சீனிவாசகம்

முந்தைய கட்டுரைமதிப்புரை எழுதுவது…
அடுத்த கட்டுரைகல்வலைக்கோடுகள்- கடிதம்