ஒரு கனவு நிலம் தேவை…

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,

இது எனது முதல் கடிதம். தங்கள் படைப்புகளை கடந்த பத்து வருடங்களாக படித்து வருகிறேன். விஷ்ணுபுரம் படித்து முடித்து அது தந்த நிலையற்ற தன்மை என்ற கசப்பான மன நிலையை மாற்ற ஒரு வாரம் ஆனது.

தங்களின் நடுநிலைத்தன்மை கொண்ட கட்டுரைகள் என்றும் என் மனதிற்கு நெருக்கமான ஒன்று.

அறம் தொகுப்பு ஒரு மணிமகுடம். வெண்முரசு படிக்க ஆரம்பித்து,  நீலம் சில பக்கங்கள் தாண்டி நிறுத்தி, பின் பன்னிரு படைகளம் தொடங்கி கடைசி வரை முடித்தேன். இதை முழுமையாக ஒரு முறை படிக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது.

கடந்த இரு வாரங்களாக தங்களின் புறப்பாடு தொகுப்பு படித்தேன். தங்களின் தொடர்ச்சியான பயணங்களின் தொடக்கம் மற்றும் முக்கியத்துவம் புரிந்தது‌.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் ஒரு அரைமணி நேரம் உங்கள் தளத்தில் உலாவுவது என் கணிப்பொறி துறை சார்ந்த வேலையில் இருக்கும் அழுத்தத்தில் இருந்து வெளியே வர உதவுகிறது.

இந்த கடிதம் எழுத முதன்மை காரணம் என் மகள். நான்  பனிமனிதன் எனும் சிறு பொறியை கொடுக்க, அவள் உடையாள் வரை வந்து பின், கிட்டத்தட்ட வாரம் இருமுறையாவது என்னிடம் தங்களின் அடுத்த சிறுவர் நூல் எப்போது என்று அணையா ஆர்வ நெருப்போடு வந்து நிற்பாள்.

இதை தீர்க்கும் பொருட்டு, இதன் முதன்மை காரணமான உங்களுக்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று கூறினேன். அவள் முதலில் சற்று தயங்கி, பின் தங்களின் நூல் படிக்கும் ஆசை மேலெழும்பியதால் எழுத ஒப்புக் கொண்டாள். நான் ஒரு ஐந்து சதவீதம் மட்டும் சரி செய்ய வேண்டி இருந்தது. கீழே அவளின் கடிதம் உள்ளது. இனி இது உங்கள் இருவருக்கான ஆட்டம் மட்டுமே…

அன்புடன்,

ச.விஜயகண்ணன்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம் ஐயா. என் பெயர் வி.சுமனா. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு நீங்கள் எழுதும் சிறுவர் நாவல்கள் மிகவும் பிடிக்கும்.

நான் உங்கள் நாவலை எப்படி படிக்கத் துவங்கினேன் என்றால்….

ஒரு முறை 2019 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு குடும்பத்தோடு சென்றிருந்தேன். நிறைய புத்தகங்கள் அங்கு இருந்தன. என் அப்பா நீங்கள் எழுதிய பனி மனிதன் என்னும் நாவலை வாங்கித் தருகிறேன் என்றார். (அது தான் எனக்கு முதல் நாவல்.) அதை என் அப்பா வாங்கித் தந்தவுடன் அந்த நாவலை படிக்க வேண்டும் என்று என் மனதில் ஆர்வம் உண்டாகியது.

வீட்டிற்கு சென்றவுடன் படிக்க ஆரம்பித்தேன். அந்த நாவலின் அட்டையில் இருந்த மிகப்பெரிய பனி மனிதன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் ராணுவ அதிகாரி பாண்டியன், டாக்டர் திவாகர் மற்றும் கிம்சுங் ஆகிய மூவரும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.

அடுத்து நாவல் வெள்ளி நிலம் ஆகும். என் அப்பா உங்கள் நாவல்களை பல வருடங்களாக வாசித்து வருகிறார். என் அப்பா அந்த நாவலை இணைய தளத்தில் வாங்கி கொடுத்தார். அந்த நாவலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் அதே ராணுவ அதிகாரி பாண்டியன், சிறுவன் நோர்பா, நாய் நாக்போ மற்றும் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் ஆகிய அனைவரும் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்திரம் ஆகும். அது மிகவும் சுவாரசியமான கதை. அடுத்த நாவலுக்காக காத்திருந்தேன்.

பிறகு நான் படித்தது தான் உடையாள். அதில் வந்த நாமி என்னும் சிறுமி என்னை மிகவும் ஆனந்தம் அடைய செய்தாள். அவளுடைய வாழ்க்கை மிகவும் போராட்டமானது. இந்த நாவல் நம் எதிர் காலத்தை எனக்கு உணர்த்தியது.

பிறகு அடுத்த நாவலுக்கான காத்திருந்தேன், காத்திருந்தேன், காத்துக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு முறையும் என் அப்பா இணையத்தில் உங்கள் கதைகளை படிக்கும்பொழுது அவரிடம் சென்று ‘அப்பா… ஜெயமோகன் அவர்கள் சிறுவர் நாவல் ஏதாவது எழுதியுள்ளார் உள்ளாரா’ என்று கேட்பேன். அவர் எப்பொழுதும் இல்லை என்று கூறுவார். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.

அதனால் சிறுவர்களுக்காக குறைந்தது ஒரு ஆயிரம் பக்கம் உடைய ஒரு துப்பறியும் அல்லது பிரபஞ்சத்தை பற்றிய நாவலை எழுத வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் வாசகி,

வி.சுமனா.

அன்புள்ள சுமனா,

அப்படி ஒன்றை எழுதுவதைப் பற்றி எண்ணியிருக்கவில்லை. ஆனால் இப்போது எழுதினாலென்ன என்னும் எண்ணம் வருகிறது. ஏனென்றால் என் படைப்புகள் எல்லாமே மொழிசார்ந்த செறிவு கொண்டவை. எளிதான மொழியில் நிகழ்வுகளை மட்டுமே எழுதிச்செல்லும் சில கதைகளையே எழுதியிருக்கிறேன். சற்று வாசிப்புவேகம் குறைவானவர்கள் கூட வாசிக்கும்படி எழுதவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. ஒரு குழந்தைகள் நாவல், விரிந்த புலத்தில் எழுதுவது சிறந்த எண்ணம்தான். முயல்கிறேன்.

குழந்தைகள் நாவலை எழுதும்போதுள்ள வினாக்கள் பல உண்டு. அவற்றில் முதன்மையானது அவற்றில் ஒரு கனவுநிலம் தேவை என்பதுதான். ஆகவே அது நம் அன்றாட நிலமாக இருக்க முடியாது. அப்படியொன்றை கண்டடைந்ததும் எழுதவேண்டியதுதான்

ஜெ

முந்தைய கட்டுரைசிறுகதை – மின்னூல்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபழமைச்சரிதம்