துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு
அன்புள்ள ஜெ
வணக்கம்
ஒரு சந்தேகம், பொதுவாக வரலாற்றில் மனிதன் சக்கரத்தை கண்டு பிடித்தான் நெருப்பை பயன்படுத்தினான் என்று படிக்கும் பொழுது மனிதர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பது போல் நினைத்துக்கொண்டு எழுதப்பட்டு இருப்பதுபோல் தோன்றுகிறது. எந்தவிதமான தகவல் தொடர்பு, மற்றும் பயணம் போன்றவை எதுவும் இல்லாத அந்த காலத்தில் ஒவ்வொரு நாட்டு மக்களும் தனித்தனியாகப் சக்கரத்தை பயன்படுத்த கற்றுக் கொண்டார்களா! தனித்தனியாக நெருப்பை பற்றி அறிந்து கொண்டார்கள்! எப்படி எல்லோரிடமும் வழிபாட்டு சிந்தனை தோன்றியிருக்கிறது! சொல்லிவைத்த மாதிரி எல்லோரிடமும் ஒரு புனித நூல் இருக்கிறது!
இது எப்படி சாத்தியமானது என்று சொல்ல முடியுமா?
நன்றி
பூபதி
அன்புள்ள பூபதி,
இத்தகைய கேள்விகள் சுவாரசியமான சிந்தனைக்கு கொண்டுசெல்பவை. ஆனால் இவற்றை வெறுமே சிந்தனையாக வைத்துக்கொள்ள கூடாது. தேவையான நூல்களை வாசிக்கவேண்டும். ஜாரேட் டயமண்டின் “தூப்பாக்கிகள் கிருமிகள் மற்றும் எஃகு” ஒரு நல்ல முதல்நூல். அதில் இந்த அறிவுப் பரவல் எவ்வண்ணம் நிகழ்ந்தது என விரிவாக பேசியிருக்கிறார்.
உலோகம் பற்றிய ஞானம், விலங்குகளைப் பழக்கும் கலை, பல்வேறு பயனுறு தாவரங்களின் வளர்ப்பு போன்றவை ஆசியா ஐரோப்பா இணைந்த யுரேஷியா கண்டத்தில்தான் பரவியிருக்கின்றன. தனியாகக் கிடக்கும் ஆஸ்திரேலியா அமெரிக்கா கண்டங்களில் அவை பரவவில்லை. ஆகவே நேரடி மானுடத் தொடர்பு தேவையாக இருக்கிறது. அக்கால மனிதர்கள் வேட்டை, மேய்ச்சல் ஆகியவற்றையே வாழ்வுக்காகச் செய்துவந்தனர். ஆகவே அவர்கள் நீண்ட தொலைவுக்கு பயணம் செய்யவேண்டியிருந்தது. அவ்வாறாக அறிதல்கள் பரவின.
சக்கரம், இரும்பு போன்ற அறிதல்கள் சில ஆயிரம் ஆண்டுகளில் இணைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு எங்கும் சென்றன. வேளாண்மைச் சமூகம் உருவானபின் இடம்பெயர்வு குறைந்தது. ஆனால் அதற்குப் பதிலாக வணிகம் தொடங்கியது. ஹரப்பா நாகரீக காலத்திலேயே இந்தியாவில் இருந்து மெசபடோமியா வரை கடலில் பயணம் செய்து வணிகம் புரிந்திருக்கிறார்கள்.
இதற்கு அப்பால் ஒன்று உண்டு. மானுடனின் பிரக்ஞையின் வளர்ச்சி. அவனுடைய தேடல். அதுவும் ஏறத்தாழ ஒரே திசையை நாடுவதே. கடுமையான உலோகத்திற்கான தேடலே இரும்பு நோக்கி கொண்டுசெல்கிறது. முந்தையது பொருள்முதல்வாத பார்வை. இது கருத்துமுதல்வாதப் பார்வை. எனக்கு இரண்டும் இணைகையிலேயே உண்மை நிகழ்கிறது என்னும் நம்பிக்கை உண்டு
ஜெ