இதை எந்த இடத்தில் ஆரம்பித்து எப்படிச் சொன்னால் சுவையாக இருக்கும் என்று இப்புத்தகத்தை அறிமுகப்படுத்துவதில் ஒரு உற்சாகம் ஆரம்பத்திலேயே என்னைப் பற்றிக் கொள்கிறது. சீகல் பறவையின் வெற்றி ரகசியம் நம் முனைப்பைத் தூண்டி விடுவதாக அமைகிறது. ஒரு விஷயத்திற்காகத் தொடர்ந்து முயற்சிப்பவன், கீழே விழுந்து எழுபவன், கீழே விழுந்தாலும் தளராதவன், திரும்பத் திரும்ப எழுந்து ஓடுபவன், முயற்சித்துக் கொண்டேயிருப்பது என் வேலை, வெற்றி அது தானாக என்று வருகிறதோ வரட்டும் என்று ஓடிக்கொண்டேயிருப்பவன்…இவர்களை நினைவுபடுத்துகிறது. இந்த முயற்சிகளில் இருப்பவர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது என்று சொல்வேன். வெறும் எண்பது பக்கங்களில் இவ்வளவு உற்சாக டானிக் ஒருவனுக்கு அளிக்க முடியுமா? முடியும் என்கிறது இந்த ஜோனதன் சீகல்.
ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல்….என்பது ஒரு கடற்புறா. ஒரு வகைக் கடல் சார்ந்து வாழும் பறவைச் சாதியின் பெயர்தான் இது என்கிறார் ஆசிரியர்.
எப்போதும் கீழிறங்கி வராமல் வெளியையும், ஒளியையும் புசித்து, வெட்ட வெளியில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அறியப்படும் ஞான குருவின் பெயர் “சியாங்”.
இந்த இடத்தில் சீனாவின் போதி தர்மர் உங்களுக்கு நினைவுக்கு வரவேண்டும்.ஒளியை விஞ்சும் வேகத்தைக் கடப்பதற்கு வழி காட்டுகிறது மெய்ஞ்ஞான குரு சியாங். ஜோனதனுக்கு வாய்த்த குருதான் இவர். நீ என்றும் நானென்றும் இரண்டில்லை என்ற ஞானச் சங்கமம். சீகல் என்ற பறவைச்சாதிக்கு விதிக்கப்பட்ட பறக்கும் எல்லையைக் கடக்க, ஜோனதன் என்ற பறவைக்கு உந்துதல் ஏற்பட்டு, விதி மீறியபோதுதான் எல்லையற்ற பிரபஞ்ச வெளியும், கட்டற்ற வேகமும் வேக ஞானமும் வாய்க்கின்றது. உயரப் பறக்க நினைத்து, தடுமாறி வீழ்ந்து, எழுந்து பறந்து சாதிக்கிறது.
மீன்பிடிப் படகுகள் கிளம்புவதற்கு முன்பாக சீகல் என்ற கடல் புறாக்கள் காற்றுடன் அலைந்து கொண்டிருக்கின்றன. வெகுதூரம் தள்ளி படகுகளோ கரையோ இல்லாத இடத்தில் ஒரு பறவை மட்டும் தனியே பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் ஜோனதன் லிவிங்ஸ்டன் என்ற கடற்பறவை. காற்றடிக்கும் திசைக்குத் தகுந்தவாறு அலகை உயர்த்தி, சிறகைத் அதன் திசைக்குத் தகுந்தவாறு திருப்பித் திருப்பி, பயிற்சியை மேற்கொள்கிறது. சிறகுகள் மடிந்து கீழே விழுகிறது. சீகல் பறவைகள் கீழே விழுதல் அவமானம்.
பறந்து திரும்பும் போது கடல் மட்டத்தைத் தொட வேண்டும். நீர்ப் பரப்பின் மேல் தன் கால்களை அழுத்தமாய்ப் பதிக்கும் ஒரு தனித்த நிகழ்வாய் இருக்கும் ஜோனதனுக்கு. குளிர் காலத்தில் மற்ற பறவைகளைப் போல் இரை தேடுவது மட்டுமே என் வேலை இல்லை. வெறும் இறக்கையும் எலும்பும் மட்டுமல்ல நான். காற்றின் மீது எதைச் செய்தல் நலம், எதைச் செய்தல் ஆகாது என்பதை நான் அறிந்தே ஆக வேண்டும் என்று முயற்சிக்கிறது ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல்.
கூட்டத்தோடு பறந்து உணவு தேடுவது மட்டும் என் வேலை அல்ல என்று பயிற்சி செய்து ஆயிரம் அடிகளுக்கு மேலாக இறகை நன்றாக விரித்துப் பறந்து வேகமாகத் தாழ்ந்து கீழுள்ள கடலின் அலைகளின் மீது மோதப் பழகிக் கொள்கிறது சீகல். சக்தியை அடக்கி செங்குத்தாய் அதிவேகத்தில் கீழே திரும்புகிறது. பயிற்சியில் காணும் தொடர்ந்த முயற்சி…நம்மை ஊக்குவிக்கிறது. வாழ்க்கையில் நம் முயற்சிகள் இவ்வாறாய் இருத்தல் வேண்டும் என்கிற தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. இரண்டாயிரம் அடியை எட்டுகிறது. இன்னும் வேகமாகப் பறப்பதற்கு வல்லூரைப் போன்ற சின்னஞ்சிறு சிறகுகள் வேண்டும் என்று உணர்ந்து தன் சிறகை மடித்து, மடித்து, நுனிப்பகுதியைக் கூர்மையாக வைத்துக் கொண்டு காற்றை எதிர்த்துப் பிளக்கிறது. இதோ பத்தே விநாடியில் தொண்ணூறு மைல் வேகம். உலக சாதனை. ஒரு சீகல் பறவையின் உச்ச வேகம்.
மணிக்கு நூற்று நாற்பது மைல்கள். முழுதாய்க் கட்டுப்பாட்டுக்குள். இரண்டாயிரத்தை எப்போது தாண்டுவது? இதுவே ஐயாயிரம் அடியாய் இருந்தால்? பிறருக்குச் சொல்லும் வெறும் வார்த்தைகள் எனக்குத் தேவையில்லை. செயல்…செயல்…முயற்சி…முயற்சி…அது ஒன்றே வெற்றிக்கான வழி….இதோ தொட்டாயிற்று. ஐயாயிரம் அடிகளை. மேலிருந்து பார்த்தபோது மீன்பிடி படகுகள் தட்டையான நீலக் கடலில் சிறு புள்ளிகளாய்.
சீகல் பறவையின் வேகம் மணிக்கு இருநூற்றுப் பதினாறு மைல்கள். தனித்துப் பயிற்சி மேற்கொண்டு எட்டாயிரம் அடிவரை போய், பாதுகாப்பாய்க் கீழே திரும்பியாயிற்று.
ஜோனதனின் இந்த முயற்சி கேலி செய்யப்படாமலா இருந்தது. மூத்தபறவைகள் அதைக் கண்டித்தன. கூட்டத்தோடு கூட்டமாய் இல்லாமல் இதென்ன எடுத்தெறிந்த போக்கு? பொறுப்பில்லாத செய்கை…உனக்கென்று அதென்ன ஒரு தனி உலகம்? பொதுவான கௌரவம், மரபு இவற்றை மீறிய செய்கை எதற்கு உதவும்? உன்னைத் தனிமைப் படுத்தும். ஜோனதன் பதில் சொல்கிறது.
பொறுப்பில்லாத செய்கை என்றா சொல்கிறீர்கள்? வாழ்க்கையின் பெரும் பயனை அறிந்த ஒருவனைக் காட்டிலும் யார் பொறுப்பானவர்கள்? நம் வாழ்விற்கு அர்த்தம் வேண்டாம்? கற்றுக் கொள்ள, கண்டுபிடிக்க சுதந்திரம் வேண்டாமா? அதற்கு விடுதலையாக வேண்டாமா? உறவோ பாசமோ கிடையாது….உடைத்தாயிற்று அனைத்தையும். இனி எல்லாம் முயற்சிதான். பறத்தலின் பெருமையை அறியாது இருத்தல் கண்மூடித்தனமாகும். சோம்பல், பயம், கோபம் இவை நம் வாழ்நாளைச் சுருக்கி விடுகின்றன. கூட்டமாய் இருந்தால் எதையும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பேயில்லை. தனித்திருந்தே கற்றுக் கொள்தல்தான் முயற்சியின் தளராத் தன்மை. ஆனால் அதற்காகக் கொடுக்கும் விலை கணக்கிலடங்காதது. என் வாழ்நாளை ஏதும் செய்யாது முடங்கி, சுருக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.
இருட்டிவிட்ட வானத்தை ஒரு முறை உயர்த்திப் பார்த்துக் கொண்டது. அழகான கரையோரம்…உயர்ந்த வானம்…வாழ்வைக் கற்றுக் கொடுத்த வானம். இருண்ட வானத்தில் நுழைந்து நுழைந்து பறக்கிறது ஜோனதன். பூமியில் இருந்து இரு இளம் பறவைகள் பறந்து வந்தபோது மேகங்களைத் தாண்டிய பொழுதில் தன் உடல் அவைகளை விடவும் நன்றாக ஒளிர்வதைக் கண்டு சீகல் பெருமை கொள்கிறது. இறக்கைகள் மிருதுவாகவும், மெருகேற்றிய வெள்ளியைப் போலவும் பளபளக்கின்றன. வெற்றியைத் தொட்டு விட்டேனா…? வாழ்வின் முக்கிய நாள்….மறக்க முடியாத சூரிய உதயம்…. கரைக்குத் திரும்பி ஓர் அங்குலம் அளவுக்கு உயர்ந்து இறக்கைகளை அடித்துக் கொண்டு மணலில் வந்து அமர்கிறது..
ஜோனதன்…லட்சம் பறவைகளிலும் நீதான் சிறந்தவன்.நாங்களெல்லாம் மெதுவாய் நகர்கிறவர்கள். ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்துத் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை நீ இப்போதே தெரிந்து வைத்திருக்கிறாய்..
திறமையைக் கொண்டு தலைமைப் பொறுப்பை அடைகிறாய் நீ. எல்லாவற்றையும் முன்னரே கற்றுத் தேர்ந்த முதிர்ந்த பறவை நீ. ஜோனதன் சொல்கிறது.
சொர்க்கம் என்பது ஓர் இடம் கிடையாது. அது ஒரு நேரமும் கிடையாது. அது குறைவில்லாதது. அது ஒரு முழுமை.
நினைவின் வேகத்தில் எங்கு வேண்டுமானாலும் பறக்க என்ன செய்ய வேண்டும்?
“ஏற்கனவே அறிந்தவற்றிலிருந்து புதிதாய்த் தொடங்க வேண்டும்”
நேரம் என்பது தொலைவு அல்ல. அதற்கு எல்லைகள் கிடையாது. இதுவே பறத்தலின் முறைமைகள்….
நாமும் முயற்சிப்போம். இந்த வாழ்க்கையை மற்றவர்களைப் போல் சாதாரணமாய் வாழாமல், உன்னதமான ஒன்றாக, அழகான ஒன்றாக, அற்புதமான ஒன்றாக, மாற்ற முயற்சி செய்வோம். இழப்புகள் ஒரு பொருட்டல்ல. நம்மின் வாழ்க்கைப் பயணம் மற்றவர்களுக்கு நம்பிக்கை தரக் கூடிய ஒன்றாக இருக்கட்டும்.
ரிச்சர்ட் பாக்-கின் இந்த நூலை தமிழில் அவைநாயகன் மொழி பெயர்த்திருக்கிறார். ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் எனும் “ஞானப்பறவை”. வெறும் எண்பது பக்கங்களே கொண்ட இந்தப் புத்தகம் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள பேருதவி செய்யும் என்பது திண்ணம்.
உஷாதீபன்