வரவிருக்கும் எழுத்து

தண்டபாணி

அன்புள்ள ஜெ

எழுத்தாளனின் குரல் அவனின் உள்ளுணர்வின் அகத்தூண்டலால் வரும் அறச்சீற்றமே. அதற்கு வரைமுறைகள் வைக்க முடியுமா என்ன? தர்க்க ரீதியான தரவுகள் எழுத்தாளனின் மனசாட்சியின் குரலை ஒன்றும் செய்ய இயலாது. எழுத்தாளன் ஒட்டு மொத்த சமூகத்தின் குரல் அல்ல. அது சராசரி அகத்தரிசனத்தால்  மானிடரை விட மேலெழுந்து பீடத்திலிருந்து எழுப்பப்படும் குரல் அல்லவா? அது அவச்சொல்லாயினும் சாபமாயிருந்தாலும் அவனின் ஞானத்தின் ஒரு துளி அல்லவா?அவ்வை நக்கீரன் கம்பன் பாரதி வரிசை வந்த குரல் அல்லவா?

நான் ஒரு மரபியல் அறிவியலாளன் என்ற இடத்திலிருந்து பேசுகிறேன் , மெண்டலின் வழி வந்தவன் என்ற முறையில். டார்வின் அல்ல ( Gregor Johan Mendel) பேராசிரியர் லோகமாதேவி அவர்களின்  இலக்கிய தரிசனம் நுண்ணுணர்வால்  தூண்டப்பட்டு அவரின் தாவரவியல் அறிவினால் சரி பார்க்கப்படுகிறது. மாபெரும் உள மகிழ்ச்சியை நெகிழ்ச்சியை அவர் அடைகிறார். அதை பல்வேறு இடங்களில் பதிவு செய்கிறார்.

ரோஜர் பென்ரோஸ்

குறிப்பாக மூங்கில் பூத்த தருணம். நான் சென்ற வருடம் மஞ்சவாடி கணவாயில் மூங்கில் பூத்ததை பெரு மகிழ்ச்சியுடன் கண்டேன். ஆனால் அந்த இடம் மிக குறுகியதாகவும் மேடாகவும் இருந்ததால் காரை நிறுத்த முடியவில்லை. இருந்தாலும் நான் வழக்கம் போல ப்ரியாவிடமும் தியாவிடமும் மூங்கிலின் பூக்கும் பண்புகளையும் மூங்கில் அரிசி பற்றியும் விளக்கினேன்.

காட்டெலிகள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்யும் காரணத்தையும் அதனால் அக்காலங்களில் பஞ்சம் வந்ததையும். இப்போது வராதா என்று பிரியா கேட்டதற்கு நான் தற்கால வேளாண் செயல்பாடுகளை விளக்கினேன். தியாவின் கண்ணில் தெரிந்த ஆர்வம்  எப்போதும் என்னை உற்சாகப்படுத்தும். அவளுக்கு இப்போதே பயிர்களில் இனக்கலப்பு (hybridization) செய்வது பூச்சிகளின் வகைப்பாடு போன்றவைகளை விளக்கினேன்.

பேராசிரியர் லோகமாதேவி அவர்கள் மூங்கில் பூக்கும் தருணத்தின் நெகிழ்ச்சியை பதிவு செய்தபோது நானும் அந்த நெகிழ்ச்சியை நினைவு கூர்ந்தேன். வெண்முரசு வாசகர் ஒருவர் அவரின் அக்குரலை/நெகிழ்ச்சியை  வெற்றுத்தகவல் சார்ந்த வாசிப்பு எனவும் வேதாந்தத்தை விட்டு விலகிய வாசிப்பு  நிறுவியிருந்தார். அறிவியல் ஆசிரியனாக நான் உறுதியாக ஒன்று வரையறுத்து சொல்ல முடியும்.

பேராசிரியர் லோகாமதேவி ,முனைவர் சுசித்ராவின் கூரிய தர்க்கங்கள் (குறிப்பாக தல்ஸ்தோய் பற்றிய) அறிவியல் கருத்தரங்களில் படிக்கப்படும் அறிவியல் கட்டுரைகளுக்கு நிகரானவை. அதற்காக லோகமாதேவியோ சுசித்ராவோ நானோ நீங்கள் என்ன எழுத வேண்டும் என்று கேட்க முடியுமா என்ன?

முனைவர் எம்.தண்டபாணி

ரிச்சர்ட் ரிஸ்டாக்

அன்புள்ள தண்டபாணி,

பொதுவாக ஒரு சூழலில் வாசிப்பு என்பது ஒருமுகப்பட்ட தன்மை கொண்டிருப்பதில்லை. மக்கள் பல படிநிலைகளில் இருக்கிறார்கள். ஆகவே எழுத்தின் ஏற்பு என்பதை ஒரு பரந்துபட்ட விவாதமாகவே பார்க்கவேண்டும்.

தமிழ்ச்சூழலில் சிற்றிதழ் சார்ந்த எழுத்து நெடுங்காலம் ஆழமாக வேரூன்றியிருந்தது. அதில் தனிப்பட்ட டைரிக்குறிப்புகளே ஆழமான, அந்தரங்கமான இலக்கியம் என்று சொல்லப்பட்டது. பிற எல்லாமே புறவயமானவை, ஆழமற்றவை என நிராகரிக்கப்பட்டன. சமூகசித்திரங்கள், வரலாற்றுச் சித்திரங்கள்கூட கலையில் இருந்து விலக்கப்பட்ட ஒரு காலம் இங்கே இருந்தது. மரபின் படிமங்களை விலக்கி அந்தரங்கமான படிமங்களை முன்வைத்தனர். அவை மரபின் படிமங்களின் மறுவடிவங்களே என அறியாமலிருந்தனர்.

நாவல்களில் தகவல்கள் எதற்கு என்றெல்லாம் இங்கே விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. புறவுலகச் சித்தரிப்பு கொண்ட நாவல்களை தகவல்குவியல் என அடையாளப்படுத்தினர். அவ்வாறு ‘தகவல்குவியலாக’ அல்லாமலிருக்கும் ஒரே ஒரு மகத்தான நாவலை உலக இலக்கியத்தில் சுட்டிக்காட்டுங்கள் என்று நான் அறைகூவியிருக்கிறேன். நாவல் என்பதே ‘தகவல்களின் கலை’ என்ற அமெரிக்க விமர்சகக் குரலை முன்வைத்திருக்கிறேன். அந்த உளநிலை அந்தக் காலகட்டத்துடன் நின்றுவிட்டவர்களில் நீடிக்கிறது.

விஷ்ணுபுரம் புறவயமான செய்திகளை பிரம்மாண்டமாக கட்டி எழுப்பும் நாவல். சிந்தனைக் கட்டுமானம், ஆலயக்கட்டுமானம், சமூகக் கட்டுமானம் என்னும் மூன்று தளங்கள் கொண்டது. அதை வாசிக்க அன்று சிரமம் இருந்தது. நாவலில் தகவல்கள் எதற்கு, சொந்த வாழ்க்கையில் நன்றாகத் தெரிந்த செய்திகளை மட்டுமே எழுதவேண்டுமென்றெல்லாம் சிலர் சொன்னார்கள். ஆனால் படிப்படியாக அதற்குரிய வாசகர்கள் அமைந்தனர்.

சர்வதேச அளவில் இன்று அறிவியல் கட்டுரைகள் புனைவுகளின் வீச்சை கடந்துவிட்டனவோ என்று ஐயம்கொள்ளும் அளவுக்கு எழுதப்படுகின்றன. ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஃபெய்ன்மான், ஆலிவர் சாக்ஸ், ரிச்சர்ட் ரீஸ்டாக், விலயன்னூர் ராமச்சந்திரன், ரோஜர் பென்ரோஸ் போன்றவர்களின் கட்டுரைகள் அறிதல்- கற்பனை – உள்ளுணர்வால் உணர்தல் என்னும் மூன்று தளங்களிலும் செயல்படுபவை. இலக்கியம் – அறிவியல் என்னும் எல்லைகளை உடைப்பவை

இருபதாண்டுகளுக்கு முன் சொல்புதிது வெளிவந்தபோது இந்த ‘இலக்கிய அடிப்படைவாதக் குறுகலை’ வெல்ல நினைத்தோம். ஆகவே ஆலிவர் சாக்ஸ், ரிச்சர்ட் ரீஸ்டாக் போன்றவர்களின் அறிவியல் கட்டுரைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டோம். அவை மிகச்சிறந்த புனைவை விஞ்சி நிற்பதைக் காட்டவும், சிந்தனைகளில் பெரிய மாற்றத்தை உருவாக்கவும் இயன்றது.

தியடோர் பாஸ்கரன்

புறவயமான தகவல்களை மட்டுமே முன்வைத்து, அவற்றை முன்வைக்கும் விதம் வழியாகவே ஒரு பிரபஞ்சதரிசனத்தை அளித்துவிட முடியும் என தமிழில் நிறுவியவர் தியடோர் பாஸ்கரன் அவர்கள். அவை புனைவுகள் அல்ல, ஆனால் மகத்தான புனைவுகள் அளிக்கும் அனுபவவிரிவை, மெய்த்தரிசனத்தை அளித்தவை. புனைவுxகட்டுரை, அந்தரங்க உண்மை x புறவய உண்மை, அனுபவம் x கற்பனை, படிமங்கள்xதகவல்கள் ஆகிய இருமைகளை அவை உடைத்தன.

அ.முத்துலிங்கம்

அதன்பின் அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகள் வரத்தொடங்கியன். அவை பெரும்பாலும் புறவயமான தகவல்களில் இருந்து தொடங்கி முன்னகர்பவை. ஆனால் எங்கோ மானுடத் தரிசனத்தை, பிரபஞ்ச உண்மையைச் சென்று தொட்டு மீளும் கவித்துவம் கொண்டவை. அவருடைய சிறுகதை நூல் ஒன்றின் தொடக்கத்தில் இணைப்பறவைகளில் ஒன்றைச் சுட்டு வீழ்த்திவிட்டு சட்டென்று அந்த பறவைகள் இணையாக இருந்திருந்தால் உருவாகியிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை அறிவியல்பூர்வமாக கணக்கிட்டு அவர் திடுக்கிடும் ஒரு சந்தர்ப்பம் சொல்லப்பட்டிருக்கும். தூய அறிவியல் பார்வை. ஆனால் அபாரமான கவித்துவத் தருணம். ஆதிகவி வான்மீகி அடைந்த ‘மாநிஷாத!’ என்னும் சொல்லுக்கு நிகரானது.

ஆஸ்திரேலிய உயிரியல் பேராசிரியரான ஆசி கந்தராசா இன்னொரு உதார்ணம். அவருடைய கறுத்தகொழும்பான் என்னும் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். ஓரு யாழ்ப்பாண மாமர வகை ஆஸ்திரேலியாவில் வேர்விட செய்யும் போராட்டம் பற்றிய தகவல்கட்டுரை அது. ஆனால் ஈழத்து அகதிவாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட எந்த கதையை விடவும் ஒரு படி மேலானது.

அதன்பின் இந்த தகவல் எதற்கு என்னும் கூற்றுக்கள் கொஞ்சம் பின்னடைவு கொண்டன.இணையம் வந்து பலவகை எழுத்துக்கள் வர ஆரம்பித்தன. சிற்றிதழ்ச்சுருக்கம் மறைந்தது. ஆனாலும் தகவல்சார் எழுத்தின் அழகியலைச் சொல்லிக்கொண்டேதான் இருக்கவேண்டியிருக்கிறது.

ஆசி.கந்தராசா

நேற்று என் கட்டிடப்பொறியாளர் ஆனந்த் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேராசிரியராக இருந்து கட்டுமானத்திற்கு வந்தவர். மாற்றுக் கட்டிட வகைமையில் தேர்ச்சிகொண்டவர். அடிப்படையில் ஒரு மகத்தான கலைஞர் அவர் என்பது என் கணிப்பு. அவர் பேசும்போது பொறியியல் செய்திகளாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் சொல்வதெல்லாம் எனக்கு கவிதையாகத் தோன்றிக்கொண்டிருந்தன.

பொருட்களின் எடைதாங்கு திறன், நீரின் விசையும் விரிவும் கொள்ளும் சமன்பாடு எல்லாமே பிரபஞ்ச உண்மைகள். தத்துவக் கருத்துநிலைகள் அளவுக்கே உள்ளத்தை விரியச்செய்பவை. உதாரணமாக கடினத்தன்மை, தாங்குதிறன் ஆகிய இரண்டுக்குமான வேறுபாட்டை அவர் சொன்னார். கண்ணாடி கடினமானது, அதில் ஒரு கீறலை வரைய முடியாது. ஆனால் தாங்குதிறன் குறைவானது, உடைந்துவிடும். கல்லும் அத்தகையதே. இரும்பு குறைவாகவே கடினமானது, ஆனால் தாங்குதிறன் கொண்டது.

“தாங்குதிறனின் அடிப்படை என்ன?” என்று நான் கேட்டேன். “நெகிழ்தன்மைதான். தன் திறனைவிட மிகுதியாக அழுத்தம் வந்தால் நெகிழ்ந்து வளைந்து இடம்விடவேண்டும். கண்ணாடி அதைச் செய்வதில்லை” என்றார் ஆனந்த். நான் ஒரு மகத்தான கவிஞனிடம் பேசிக்கொண்டிருக்கிறேனா என்று திகைத்துவிட்டேன்.

பாலசுப்ரமணியம் முத்துசாமி

நண்பர் பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதும் பொருளியல் கட்டுரைகள் பல மிக இயல்பாக மெய்த்தரிசனம் நோக்கிச் செல்வதைக் காண்கிறேன். உதாரணமாக இந்தியப் பொருளியலில் 90களில் நிகழ்ந்த மாற்றம் பற்றிய கட்டுரைகள். அவை செய்திகள் மட்டுமல்ல, முழுமையான உலகப்பார்வை கொண்டவை. அவை இங்கே நிகழும் மானுடநாடகமாக மாறுகின்றன,இலக்கியத்தின் எல்லைக்குள் நுழைகின்றன.

[அருண்மதுரா, பாலா, பாலசுப்ரமணியம் முத்துசாமி என பலபெயர்களில் எழுதியிருக்கிறார். பாலசுப்ரமணியம் முத்துசாமி என்னும் பெயரிலேயே நீடிக்கவேண்டும்]

இன்று பல அறிவியல் துறைகளில் புதிய அறிதல்கள் நிகழ்கின்றன. அவற்றை கூர்ந்தறியும் ஒருவர் தகவல்கள் வழியாக, கோட்பாடுகள் வழியாக, கற்பனைக்கும் உள்ளுணர்வுக்கும் இடமளித்து மேலே செல்வார் என்றால் புத்தம்புதிய இலக்கிய வகைமையாகிய அறிவியல் இலக்கியம் இங்கே நிலைகொள்ளும்.

லோகமாதேவி

லோகமாதேவி மூங்கில் பற்றியும், கருவேலம் பற்றியும் எழுதிய கட்டுரைகள் உண்மையில் புனைவுகள் உருவாக்கும் கற்பனைக்கு நிகரான விரிவு கொண்டவை. மிக எளிதாக பிரபஞ்சப்பார்வை ஒன்றை அளிப்பவை.

மூங்கில் பற்றிய கட்டுரை இயற்கையின் வெவ்வேறு நிகழ்வுகள் ஒரு மாபெரும் திரைக்கதை என பின்னிப்பிணைந்திருக்கும் பெருஞ்சித்திரத்தை அளிப்பது. [மூங்கில் மிகைமலர்வு- லோகமாதேவி ] மிகைமலர்வு என்னும் சொல்லே கவித்துவமானது. மலர்வு எப்படி எப்போது மிகையாக ஆகிறது? எவ்வாறு அழிவென உருக்கொள்கிறது?

கருவேலம் பற்றிய கட்டுரை மனிதனுக்கும் தாவரங்களுக்குமான உறவைப் பற்றிய ஒரு புதிய பார்வையை அளிப்பது. [சீமைக்கருவேலத்திற்காக ஒரு குரல் ]நாம் தாவரங்களில் எவற்றை எப்போது மருந்தென்றும் நோயென்றும் கொள்கிறோம்? எதை கதாநாயகனாகவும் எதை வில்லனாகவும் ஆக்குகிறோம்? தாவரம் என்பது இயற்கை என்றால் நாம் இயற்கையை பார்க்கும் பார்வையைத் தீர்மானிப்பது நம் தேவை மட்டும்தானா? தேவைக்கும் அச்சத்திற்கும் அப்பால் சென்று நம்மால் இயற்கையை பார்க்கமுடியாதா? கருவேலம் ஒரு புதிர்போல நின்றிருக்கிறது. தியாகியாகிய கதைநாயகன் போல, வில்லன் போல.

இக்கட்டுரைகளில் உள்ள குறைபாடு என்பது இவற்றை பெரும்பாலும் எதிர்வினைகளாகவே லோகமாதேவி எழுதியிருக்கிறார் என்பது. அவ்வாறன்றி தனித்து நிற்கும் அனுபவத்திறப்புகளாக, புறச்சுட்டிகள் இன்றி எழுதப்பட்டிருந்தால் தமிழின் மிகச்சிறந்த இலக்கியப்படைப்புகளின் வரிசையில் இவற்றை வைக்க தயங்கமாட்டேன். கட்டுரைகளில் செய்திகளைச் சொல்லும்போதே சென்றடையும் இடம், உச்சம் ஒன்று எழவேண்டும் என நினைவில்கொண்டாலே போதும்.

இன்னொன்று, இத்தகைய கட்டுரைகளில் கல்வித்துறை ஆய்வுக்கட்டுரைகள் போல ஏராளமான சுட்டிகளை அளிக்கலாகாது. அடிப்படையான பொதுவெளிச் செய்தி என்றால் அப்படியே அளிக்கலாம். மிக அரிதான செய்தி என்றால் மட்டும் கட்டுரைக்குள் அந்த நூலை, அல்லது ஆசிரியரைச் சுட்டலாம். அடிக்குறிப்பாக அளிப்பது அக்கட்டுரையின் வடிவ ஒருமைக்கு ஊறாக அமைவது. லோகமாதேவி தான் தமிழில் ஒரு முன்னோடி என்னும் தன்னுணர்வு கொள்ளவேண்டும். முழுவிசையுடன் வடிவ ஒருமையும் பார்வைவீச்சும் கொண்ட படைப்புக்களை எழுதவேண்டும்.

நீங்கள் நெல் ஆராய்ச்சியாளர். அதன்வழியாக இப்பிரபஞ்சத்தை ஆக்கியிருக்கும் நெறிகளுடன் மோதுகிறீர்கள். எந்த புனைவெழுத்தாளனை விடவும் முடிவிலியை நேருக்குநேர் எதிர்கொள்கிறீர்கள். குறுவைநெல் உருவாக்கத்தில் உங்கள் சாதனையை நான் அறிவேன். அதைப்பற்றி நீங்கள் எழுதலாம். அது பயனுள்ள தகவல்களாக இருக்கலாம். எங்கே அது அந்த எல்லையை விட்டு எழுந்து இலக்கியமாக ஆகிறது?

நெல்லுக்கு இயற்கை விதித்த விளைவுக்காலம் ஆறுமாதம். ஆய்வகத்தில் நெல்லை தேர்ந்து, மறுபெருக்கம் செய்து, மகரந்தங்கள் ஒட்டி, அதன் விளைவுக்காலத்தை குறைக்கிறீர்கள். மூன்றுமாத நெல்லை உருவாக்குகிறீர்கள். நெல்லின் காலத்துடன் விளையாடுகிறீர்கள். மானுடன் நீண்டகாலம் வாழ நெல் குறுகியகாலம் வாழ்கிறது. நெல்லின் காலம் என்னும் அந்தக் கருத்தாக்கத்தை உங்கள் எழுத்து தொட்டுவிட்டதென்றால் அது தகவல்கட்டுரையாக நிலைகொள்கையிலேயே இலக்கியமாகவும் ஆகிவிடுகிறது. [நெல்லும் தண்டபாணியும்]

இனி தமிழில் எழுதப்படவேண்டியவை இத்தகைய கட்டுரைகளே. எழவேண்டிய அலை அதுவே. அறிவியல் தன் தகவல்தன்மையை இழக்காமல், இயல்பாக மெய்யறிவின் சாயலைக் கொண்டு, புனைவின் எல்லைக்குள் நீண்டு வந்து நிலைகொள்ளும் எழுத்துக்கள். லோகமாதேவி அவ்வகை எழுத்தில் தமிழில் மிக முக்கியமான முன்னோடி.

அதை உணர்ந்தே அக்கட்டுரையை நான் அத்தனை முக்கியத்துவம் அளித்து பிரசுரித்தேன். இலக்கியமென்றால் என்ன, அதன் வழித்தடங்களும் வருங்காலமும் என்ன என்பதைப் பற்றி எனக்கு ஒரு தெளிவு உண்டு. இக்கட்டுரைகளுக்கு தமிழின் பழையபாணி வாசகர்கள், எழுத்தாளர்களிடமிருந்து வாசிப்பு வராது. ஆனால் தாங்கள் முன்னோடிகள் என்னும் உணர்வை நீங்களெல்லாம் அடையவேண்டும்.

ஜெ

நெல்லும் தண்டபாணியும்

மூங்கில் மிகைமலர்வு- லோகமாதேவி
சீமைக்கருவேலத்திற்காக ஒரு குரல்

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா
1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா
முந்தைய கட்டுரைமலையில் பிறப்பது… அருண்மொழிநங்கை
அடுத்த கட்டுரைசீவகசிந்தாமணி-உரை