தற்சிறை – கடிதங்கள்

தற்சிறை

அன்புள்ள ஜெ.வுக்கு,

நலம். தற்சிறை பதிவு வாசிப்பில் நீங்கள் அந்த குருவியாய் மாறினீர்களா இல்லை வாசிக்கும் என்னை மாற்றினீர்களா? இரண்டையுமே சமமாகவே உணர்ந்தேன். குருவியின் எண்ணங்களையும் அந்த கண்ணாடி ஒளிப்பில் அதன் அக போராட்டங்களையும் அதுவே மனுச மனத்தில் நடக்கும் தேடல்களையும் சரிசமமாக எழுத்தில் வடித்திருந்தீர்கள். என்னியல்பில் நான் அந்த ஜன்னலை திறந்திருப்பேனோ என யோசித்தேன். கண்டிப்பாக அவ்வாறுதான் செய்திருப்பேன். ஏனெனில் என் கண்ணுக்கு அதன் புற மோதல் மட்டுமே தெரிந்திருக்கும். எழுத்தாளனாய் அதன் அகத்துள் சென்றதுமல்லாமல் வாசிக்கும் எங்களையும் உணர, வாழ வைத்தீர்கள்.

எனக்கு வாசிக்கும்போதே தோன்றியது. நானும் அக்குருவி போலே சில பிரச்னைகளில் தீர்வு காண முற்படும்போது வழியன்றி ஒரே கதவை முட்டி முட்டி அப்படியே தேங்கி அதிலேயே அமிழ்ந்து போகிறேன். இதிலும் இரு சுகம் உண்டு. தீர்விற்கு வழி தெரியாத வலி ஒன்று. அதிலேயே உழலும் சுகம் இன்னொன்று. இப்போது யோசிக்கும்போது அப்படியான அனுபவங்களை சிலாகிக்க தோன்றுகிறது. நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் முடிக்க இயலவில்லை. ஏனோ எதையேனும் கொண்டு  உங்களிடம் தொடர்பிலிருக்க மனம் விழைகிறது. அது வாசிப்பின் சுகமா இல்லை உங்கள் எழுத்தின் பலமா இப்படி கட்டுண்டு செயலற்று வைத்திருக்கிறது. மீண்டு எழுந்தபின்னே இக்கடிதம் எழுத முடிந்தது.

மீண்டும் நன்றி

கண்ணன்

கோவை.

அன்பு ஜெ,

தற்சிறை வாசித்தேன். “தன்மீட்சி” என்ற சொல்லைப் போலவே அந்த சொல் என்னை மிகவும் பாதித்தது. எங்கள் வீட்டின் பால்கனியிலுள்ள சன்னலின் விளிம்பில் இரண்டு நாகணவாய் குருவிகள் நித்தமும், நானறிந்து ஒன்றரை வருடமாக, வந்து தட்டிக் கொண்டிருக்கும். பிற குருவிகளை இந்த ஆடிப்பிம்பம் காட்டும் சன்னல் அருகில் நாகணவாய்கள் வரவிட்டதே இல்லை. ஒரு முறை தன்னை விட மூன்று மடங்கிருக்கும் மணிப்புறாவுடன் சண்டை செய்து கொண்டிருந்தது. தன் பலத்தை நிரூபித்து அந்த இடத்தை ஆக்கிரமித்த மணிப்புறா இந்த இரு குருவிகளின் ஓயாத கீச்சுகளால் வெறுப்படைந்து பறந்துவிட்டது. சிறு குருவிகள் அது இல்லாத சமயத்தில் வந்து “அப்படி என்ன தான் இங்க இருக்கு” என்று பார்ப்பதுண்டு. அவைகள் பெரும்பாலும் மூர்க்கமாக டொக்கிடுவதில்லை. ஆனால் சிறிய அலகுடைய சிட்டுக் குருவி மட்டும் எப்போது வந்தாலும் மூர்க்கமாக டொக்கும். சில குருவிகள் அது ஆடி என்று கண்டுவிட்டதைப் போன்றே அதன் சிறகின் வனப்பை அதனிடம் காட்டிக் கொண்டிருக்கும். இப்படி ஏகப்பட்ட பறவைகளை பார்த்திருக்கிறேன். சிறிது நாட்களுக்கு முன்னர் பறவைகள் உட்காராத வண்ணம் அதை சரி செய்திருக்கிறோம். எப்படியாயினும் அது சுழலுக்கு ஒவ்வாதவைதான். அகற்றப்பட வேண்டியவையே.

“கண்ணாடியை ஒரு செங்குத்தான குளம் என்று நினைத்துக் கொண்டதா?” என்று வியந்திருந்தீர்கள். அந்த உவமை மிகப்பிடித்திருந்தது எனக்கு. விஷ்ணுபுர வரிகளை நினைவுகூற்ந்திருந்தீர்கள். ஆனால் எனக்கு ”செங்குத்தான குளம்” என்ற வார்த்தைகள் வெண்முரசின் விசித்ரவீரியன் கண்ட குளத்தை நினைவு படுத்தியது. “ஆடிகள் வழியாக மெல்லமெல்ல சித்ராங்கதன் மன்னரை நோக்கி வந்துகொண்டிருந்தான்” என்ற வரிகள் உடன் நினைவிற்கு வந்தது.

பின்னும் பால்ஹிகர் பித்துப் பிடித்து கத்திய வரிகள் என்னை வேறோர் சிந்தனைக்கு இட்டுச் சென்றது. ”ஆடிப்பிம்பங்கள்… பரிதாபத்துக்குரியவை அவை. ஆடிப்பிம்பங்களுக்கு வண்ணங்களும் வடிவங்களும் உண்டு. அசைவும் உயிரும் உண்டு. கண்களில் ஒளியுண்டு, குரலுண்டு. அனைத்தும் உண்டு. ஆனால் அவற்றால் தங்களைத் தாங்களே நடத்திக்கொள்ளமுடியாது…ஆடிப்பிம்பங்களால் கோடிகோடியாக பெருகத்தான் முடியும். அவை தாங்களாக எதையும் செய்துகொள்ளமுடியாது. எவ்வளவு பரிதாபம். எத்தனை பெரிய பொறி…இளைஞனே, தன் ஆடிப்பாவையிடம் மட்டுமே மனிதர்கள் தோற்கிறார்கள்.” ஒரு வகையில் பால்ஹிகர், பீஷ்மர், சித்ராங்கதன், விசித்ரவீரியன் யாவரும் சிறைப்பட்டிருந்தது தன் ஆடிப்பிம்பத்திடம் தான். ஆம் அதுவும் தற்சிறை தானே. குருவிகள் அப்படிப்பட்ட எந்த தத்துவத்தில் சிக்குண்டு சிறைப்பட்டிருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டேன். சிறுபிள்ளைகளை ஆடியில் காட்டினால் அரண்டுவிடும் என்று பாட்டி கூறுவாள். ஆடிகளைக் கடக்கும் ஆணும் பெண்ணும் ஒரு நிமிடமாவது சிறை படாமல் கடந்து செல்வதில்லை. சிறைக்கான பொறி தான் இந்த ஆடி. நீங்கள் சொல்வது போலவே மனிதர்கள் தோற்பது ஆடியிடம் தான். தற்சிறையே மனிதனை தோற்கடிக்கிறது.

அடியிலிருந்து குருவிக்கு இரண்டே நிகழ்த்தகவுகள் தான் இருக்க முடியும். இரண்டையும் சொல்லியிருந்தீர்கள். ஒன்று விடுபடுவது மற்றொன்று உயிர்விடுவது. மனிதர்களும் தன் ஆடி பம்பத்தை காணும் தருணத்தில் இத்தகைய இரு நிகழ்த்தகவுகளைச் சந்திக்கலாம். ஆனால் அதையும் தாண்டி ஒன்று உள்ளது. அது உணர்ந்த பின்னும் இறக்கி வைக்காமல் அப்படியே அமைதியாகி அதையே வாழ்வது. விடுபடுதலிலிருந்து வெகு தொலைவில் வந்துவிட்டவர்கள் இவர்கள். பீஷ்மரைக் போல என்று தான் சொல்வேன். பறந்தகலும் வாய்ப்புகள் இருந்தாலும் தற்சிறையால் மாள்வது இது தானோ.

இதை நான் முதுநாவல் சிறுகதைக்கும் பொருத்திப் பார்த்தேன். அப்படியானால் இடும்பன் நாராயணனும், காதரும் இறுதியில் கண்டடைந்தது அவர்கள் ஆடிபிம்பம் என்பதைத்தான். அவர்களின் இறுதி நாட்களின் அமைதியை பீஷ்மரின் அமைதியோடும், பால்ஹிகரின் அமைதியோடும் சற்றே ஒப்பிட்டுப் பார்த்தேன். “சில பறவைகள் அப்படித்தான்” என்று முதுநாவல் கதையை நிறைவு செய்திருந்தீர்கள். இன்று இந்த வரியையும், முது நாவல் சிறுகதையையும், பால்ஹிகரின் பித்து நிலைத் தனிமையையும், பீஷ்மரின் எட்டு மடங்கு மெளனத்தையும் ”தற்சிறை” என்னும் ஒற்றைச் சொல்லில் கண்டடைந்தேன். மேலும் சிந்திக்க ஏதுவான ஆழமான சொல். “தற்சிறை”. இந்த சொல்லி லேயே இந்த நொடி வரை சிறைபட்டிருந்தேன். விடுவித்துக் கொள்ளவே உங்களிடம் எழுதியிருக்கிறேன்.

இரம்யா.

முந்தைய கட்டுரைதுப்பறியும் கதையும் திகில்கதையும்
அடுத்த கட்டுரைதுறவும் நாமும் – கடிதங்கள்