தடுப்பூசித் தவம்

அன்புள்ள ஜெ

பயணத்தில் இருப்பதாக எழுதியிருந்தீர்கள். உங்கள் மேல் ஓர் அக்கறை சார்ந்த பதற்றம் இருப்பதனால் கேட்கிறேன், தடுப்பூசி எடுத்துக்கொண்டுவிட்டீர்களா?

எஸ்.ஆர்.

***

அன்புள்ள எஸ்.ஆர்,

இப்படி கேட்பவர்கள் எல்லாரும் பெண்களாகவே இருக்கிறீர்கள்.

நான் கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்துக்கொண்டு எண்பத்தைந்து நாளாகிறது இன்று. அப்போது நாகர்கோயில் பென்ஸாம் ஆஸ்பத்திரியில் நானும் இன்னொருவரும் மட்டுமே ஊசி போட்டுக்கொள்ள வந்திருந்தோம். கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருந்தது கொரோனா வார்டு

ஆனால் அதன்பின் இரண்டாம் அலை வந்தது. பென்ஸாம் மருத்துவமனைக்கு இரண்டாவது டோஸுக்காக அழைத்தால் ‘நாங்கள் தடுப்பூசி போடுவதில்லை. இங்கே தடுப்பூசியே வருவதில்லை’ என்று சொன்னாகள்.

அதன்பின் தெரிந்த அனைவரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். எங்குமே ஊசி கிடைப்பதில்லை. பலர் மருத்துவத் துறையில் இருப்பவர்கள்.

இன்று குமரிமாவட்டம் முழுக்க நிலைமை இதுதான். காலை நான்கு மணிக்கே சென்று கொட்டும் மழையில் குடையுடன் காத்து நிற்கிறார்கள்.ஒன்பது மணிக்கு அலுவலகம் திறக்கப்பட்டு முந்திவந்தவர்களுக்கு முதலில் என்னும் அடிப்படையில் டோக்கன் வழங்கப்படுகிறது. ஐந்தாயிரம்பேர் வரிசையில் நிற்கையில் முந்நூறுபேருக்கு டோக்கன். எஞ்சியோர் திரும்பிவிடவேண்டும்.

அந்த முந்நூறு டோக்கனிலும் அதிகாரிகள் சிபாரிசுடன் முன்னால் நுழைபவர்கள் பலர். முண்டியடித்து முன்னால் செல்பவர் பலர். தடுப்பூசிக்காக அத்தனை சமூக இடைவெளியையும் விட்டு முட்டிமோதுவதை காணலாம். தடுப்பூசி மையங்களில் சண்டை என தினத்தந்தி செய்திகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.

இப்போது சில நாட்களாக தடுப்பூசியே போடப்படவில்லை. எங்குமே கிடைப்பதில்லை என்று செய்தி. சில தனியார் மருத்துவமனைகளில் சில ரகசிய வழிகள் வழியாக சில ஆயிரம் ரூபாயில் ஊசி போடப்படுகிறது என்கிறார்கள். எனக்கு அது செவிச்செய்திதான்.

தடுப்பூசிகள் போடப்படாத சூழலில் மூன்றாம் அலை என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று. அதை எதிர்கொள்ளவேண்டியதுதான். என் வீட்டில் என் மனைவி முதல் ஊசி கோவாக்ஸின் போட்டுவிட்டாள். இரண்டாம் ஊசி கிடைக்கவில்லை. மகள் எதையும் போடவில்லை. எனக்கும் என் மகனுக்கும் கொரோனா வந்துசென்றதனால் கொஞ்சம் தைரியமாக இருக்கிறோம்.

இந்தியாவின் தடுப்பூசித்திட்டம் ஊழல், உதாசீனம் ஆகியவற்றாலானது. மத்திய அரசு முழுக்கச் செயலிழந்து மக்களை கைவிட்டுவிட்டது என்பதே உண்மைநிலை. எனக்கு இன்று மைய அரசின் செயலி ‘உங்களுக்கு கோவிஷீல்டு இரண்டாம் டோஸ் போடும் நாள் இன்று. அருகிலுள்ள தடுப்பூசி மையத்தை அணுகுங்கள்” என தானியங்கிச் செய்தி வந்தது. பரவாயில்லையே என தேடினேன். அருகில் எங்குமே மருந்து இல்லை என காட்டியது.

சரி வேறெங்கே என தேடினால் எங்குமே இல்லை. குமரிமாவட்டம், நெல்லை, ஈரோடு எங்குமே இல்லை என்றுதான் காட்டுகிறது. சோறு இல்லை என்று சொல்லத்தான் தூங்குபவனை தட்டி எழுப்பியிருக்கிறார்கள்.

நானெல்லாம் கொஞ்சம் விதியை நம்புபவன். ஆகவே கொரோனா மறுபடி வராது, வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என வழக்கமான அலைச்சலில் இருக்கிறேன். குடும்பத்திற்கு ஊசி போட்டுவிட்டால் நன்றாக இருக்கும். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஆலயம் எவருடையது? கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைவரவிருக்கும் எழுத்து