விஷ்ணுபுரம் கடிதம்

விஷ்ணுபுரம் வாங்க
https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்த ஊரடங்கில் ஒரு இருபது நாட்களைப் பயன்படுத்திக்கொண்டு விஷ்ணுபுரம் நாவலை வாசித்து முடித்தேன். வாசித்து முடித்துதுமே நாவலைப் பற்றி உங்களுக்கு எழுத வேண்டும் என்று எண்ணினேன். எதைப்பற்றியும் பேசியே பழகிய எனக்கு எழுதுவது ஒரு பெரிய தடைதான். ஆனாலும் முயற்சித்து இதை பற்றி எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது.

என்னுடைய இளமை ஏற்படுத்திய கேள்விகளிலிருந்து என்னுடை எல்லா உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் ஏற்படுத்தும் கேள்விகள் வரை அனைத்து பதில்களையுமே எல்லாரையும் போல உலக தத்துவங்களிலிருந்து தேட தொடங்கியவன் நான். பின்பு அதன் போதாமையின் காரணமாக அல்லது என் இளமை ஏற்படுத்தும் அவசர உணர்வின் காரணமாக அங்கும் இங்கும் மனம் சிதறி அழைந்து கடைசியில் ஆன்மீக சிந்தனைகளுக்கே வந்து சேர்ந்தேன். பக்தி, யோகம் போன்ற பல விசயங்களை வாசித்தும் கேட்டும் கற்று வருகிறேன்.

உங்கள் இலக்கிய பேச்சுகளிலும்  கட்டுரைகளிலும் இந்திய ஆன்மீகம் , இந்திய ஞானம் சம்மந்தமாக பல கருத்துக்களை வெளிப்படுத்துகிறீர்கள். அதை கேட்ட பின்னரே உங்கள் மீதான ஒரு மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் பின்பே தங்கள் படைப்பகளை வாசிக்கத் தொடங்கினேன்.

பொதுவாக நாவல்கள் மூலம் எந்த மெய்ஞானத்தையும் கண்டுகொள்ள முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அது உண்மையாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நாவல்களில் வரும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை முறையும் அவர்களது மன ஓட்டங்களும்  அவர்கள் சந்திக்கும் சூழ்நிலைகளும் என்னளவில் மிக முக்கியமானவை அதற்காகவே தொடர்ந்து வாசிக்கிறேன். அப்படியே விஷ்ணுபுரத்தையும் வாசிக்க தொடங்கினேன்.

நாவலில் விஷ்ணுபுரத்தின் பிரம்மாண்டம் அது ஏற்படுத்தும் ஒரு மாயை எல்லாம் தாண்டி அதில் வரும் மனிதர்கள்தான் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். கிட்டத்தட்ட எல்லோருமே ஒரு கேள்விகளோடும்  அதற்கான பதிலை கண்டடையும் நோக்கத்தோடும் வரும் மனிதர்களாகவே வருகின்றனர். நான் பெரிதென கருதிய என்னுடைய கேள்விகளை சாமானிய மனிதன் சுட சாதரணமாக பேசிச்சென்றது வியப்பாக இருந்தது.

ஒருவகையில் எவருக்கும் அதன் பதில்கள் கிட்டவில்லை என்பது சந்தோசமாகவும் இருந்தது. சுயநலமான எண்ணம்தான் என்றபோதும் அப்படியே தோன்றியது.

ஞானசபையில் நடந்த தர்க்கங்கள் என்னை மிகவும் பிரம்மிப்பூட்டயது. இந்திய ஞானம் மெய்யியல் கர்மம் முக்தி என்று மனதை மற்றவர்கள் பதில்களால் நிறப்பி நிறப்பி இருகிப்போய் அதன் புழுக்கத்தில் இருந்த எனக்கு இந்த ஞானசபையின் முடிவில் ஒரு பெரிய நிம்மதி கிட்டியது. இது எதுவும் உண்மையில்லை என்றும் புதிதாக கேள்விகளையும் சந்தேகங்களையும் என்னுள் கூர்மைபடுத்திக்கொள்ளவும் இது மிகவும் உதவியது. இதுவரை எதுவும் தெரியவில்லை, இன்னமும் ஒன்றும் தெரியவில்லை என்று உறுதிப்படித்திக்கொண்டேன்.

சுடுகாட்டு சித்தன் போல மனம் அமைந்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லையோ என்னவோ. இந்த பெரும் நாடகத்தில் தெடர்ந்து செயல்பட இந்த நாவல் மிகுந்த ஊக்கம் தருகிறது.

நன்றி

மேக்சின்

அன்புள்ள மேக்சின்

நேற்று நான் என் மகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். என் இளமையில் நான் உழன்ற கேள்விகள், கொந்தளிப்புகளைப் பற்றி. விஷ்ணுபுரம் நாவலில் அந்த அலைக்கழிதல்கள் உள்ளன. அதில் எல்லாமே நான்தான். சங்கர்ஷனன், பிங்கலன், பாவகன், அஜிதன் அனைவருமே. என் கொந்தளிப்பை பல முகங்களாக ஆக்கி மோதவிட்டு, வரலாற்றில் விரியவிட்டு அதை எழுதினேன். அது நிகழும் களம் என இந்தியாவின் மொத்த வரலாற்றையே ஓர் ஊரில் உருவகித்தேன்.

அன்று எழுதும்போது அதில் விடைகள் இல்லை, வினாக்களே உள்ளன என்று தோன்றியது. இன்று அதை நினைக்கையில் தெளிவான விடை உள்ளது என்று படுகிறது

ஜெ

விஷ்ணுபுரம் வாசிப்பு- மஞ்சுநாத்

விஷ்ணுபுரம் கடிதம் – கார்த்திக்

விஷ்ணுபுரம் பற்றி சரவணன் சந்திரன்

விஷ்ணுபுரம் வாசிப்பு -பிரவீன்

விஷ்ணுபுரம் வாசிப்பு- கடிதங்கள்

முந்தைய கட்டுரைதுறவும் நாமும் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅந்த முகில் இந்த முகில்