துறவும் நாமும் – கடிதங்கள்

பெண்களின் துறவு, ஒரு வினா

வணக்கம் ஜெ

துறவிகளைப் பற்றி கூறியிருந்தீர்கள். இந்த ஒட்டுமொத்த பண்பாடும் அலைந்து திரிபவர்களால்தான் உருவானது. அவர்கள் இன்றி இங்கு எந்த ஞானமும் கிடையாது. இன்று அவர்கள் குறித்த நமது பார்வை பெரும் அபத்தமாக மாறியுள்ளது. அவர்களை உழைக்காமல் உண்பவர்களாகவும், போலிகளாகவும் சித்தரிக்கின்றனர். எம்.ஆர்.ராதா பாணி வசனங்களிலிருந்து இன்றைய சினிமா வரை இந்த அபத்தத்தைச் செய்கிறார்கள். சாமியார் என்றே சொல்லே இன்று கேலிப்பொருளாய்ப் போய்விட்டது. போலிகளும் இருப்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அந்தப் போலிகளையே முக்கிய பேசுபொருளாக்கி அதைக்கொண்டு இந்த மொத்த நடைமுறைகளும் ஏமாற்றுவேலை என்று நிறுவுவதையே இன்றைய பகுத்தறிவுச் சூழல் செய்கிறது. துறவிகளையெல்லாம் எதோ வாழ வழியின்றி, வாழ்க்கையை எதிர்கொள்ளத் திராணியின்றி, தங்களது திறமையின்மை காரணமாக துறவிகளாவதாக ஒரு பிம்பம் பரப்பப்படுகிறது. இன்னொரு பக்கம் இந்துத்துவார்கள், கோவணத்தோடு திரிபவனும் தங்களுக்கு கொடி பிடிப்பவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

”இனி மெல்ல மெல்ல மறைந்து வரும் இது, இனி உருவாகப்போவதில்லை” என்ற உங்கள் வரி பெரும் வெறுமையை அளித்தது. எல்லாவற்றையும் புத்தகங்களிலும், கணினிகளிலும் பதிவேற்றிவிட்டதால், துறவிகளுக்கான தேவையை நாம் கடந்துவிட்டோம் என்றாகிவிடுமா ? ‘அலைந்து திரிதலும்’, ‘அருகிலமர்தலும்’ இல்லாத இந்தப் பண்பாட்டை எண்ணிப்பார்க்க இயலவில்லை.

விவேக் ராஜ்

அன்புள்ள ஜெ

பெண்களின் துறவு பற்றிய கட்டுரையில் இன்றைக்கு துறவு என்னும் இயக்கமே இழிவுபடுத்தப்படுவதைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். இதை நானே பலகாலமாகக் கண்டுவருகிறேன். துறவு என்பது ஒரு வாழ்நிலை. அதற்கு ஒரு தோற்றம் உண்டு. அதை எவரும் போட்டுக்கொள்ளலாம். அப்படி போட்டுக்கொண்டதனால் அவர்களெல்லாம் துறவிகள் அல்ல. டாக்டர்கள் எத்தனை இருக்கிறார்களோ அத்தனை போலி டாக்டர்களும் இருக்கிறார்கள். ஆகவே டாக்டர்களே அயோக்கியர்கள் அல்லது போலிகள் என்று சொல்வதில்லை. ஆனால் துறவிகளைப் பற்றி அப்படிச் சொல்லி பரப்பப் படுகிறது. இது தற்செயலான விஷயம் அல்ல. இதற்குப்பின் ஒரு பெரிய திட்டம் உள்ளது. வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் கூட நடக்காதவை இப்போது நடக்கின்றன.

இன்று துறவிகளை அவமதிப்பு செய்வது, அடிப்பது எல்லாம் எங்கும் பரவலாக உள்ளது. அதைச் செய்பவர்கள் தங்களை முற்போக்காகக் காட்டிக்கொள்கிறார்கள். சில இடங்களில் மாற்றுமதத்தவர் செய்கிறார்கள். அப்போதெல்லாம் இந்துமத நம்பிக்கை உடையவர்களே வெறுமே பார்த்துவிட்டு செல்பவர்களாக இருக்கிறார்கள். நானே ஒருமுறை கண்டேன். பஸ்ஸில் ஒரு துறவி இருந்தார். பிச்சை எடுக்கும் துறவிகூட அல்ல. ஏதோ மடத்தில் இருப்பவர். அவர் டிக்கெட் எடுத்துவிட்டு அமர்ந்திருந்தார். நாலைந்து பையன்கள் அவரை கேலி செய்தனர். ஒரு கட்டத்தில் அவர் வைத்திருந்த குடுமியை பிடித்து இழுத்தனர். மண்டையில் குட்டினர். அவர் பேசாமல் கண்மூடி அமர்ந்திருந்தனர். பஸ்ஸில் ஒருவர் கூட தட்டிக்கேட்கவில்லை

பஸ்ஸின் பின்னால் இருந்த நான் போய் சத்தம்போட்டேன். உடனே அந்த இளைஞர்கள் என்னை அடிக்க வந்தனர். நான் குடையை ஓங்கியதும் கண்டக்டர் அவர்களை அதட்டி விலகச் செய்தார். அவர்கள் விலகி நின்று கேலி செய்தனர். அப்போதுகூட பஸ்ஸில் ஒருவர்கூட ஒன்றும் சொல்லவில்லை. சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த துறவி என்னையும் பொருட்படுத்தவில்லை. பஸ் நின்றதும் பேசாமல் இறங்கிச் சென்றார். அந்த இளைஞர்கள் அமர்ந்தார்கள். ஒரு கிழவர் என்னிடம் “இந்த சாமியாருக்கெல்லாம் நல்ல சாப்பாடு” என்றார். நான் அவரிடம் “நீ என்ன தெருவிலே பொறுக்கியா திங்கிறே பேமானி?”என்று கேட்டேன். அமைதியாகிவிட்டார்.

இப்படித்தான் நம் ஆட்கள் இருக்கிறார்கள். இங்கே மெய்ஞானம் துறவு எதற்கும் மதிப்பில்லாமல் ஆவது நவீனக்கல்வியால் அல்ல. அதுவும் காரணம். அதைவிடக் காரணம் பணம் போல உலகியல் விஷயம்தவிர எதற்குமே எவரிடமும் மதிப்பில்லை என்பதுதான். ஓர் இந்து துறவியை அவன் இவன் என வசைபாடுபவன் அப்படி ஒரு கிறிஸ்தவத் துறவியை, ஓர் இஸ்லாமிய மதகுருவைச் சொல்வானா? ஒரு அரசியல்தலைவனைச் சொல்வானா? இந்த மனநிலைதான் நம்மை அன்றும் இன்றும் வெறும் கூட்டமாக அடிவாங்கும் மந்தையாக வைத்திருக்கிறது.

என்.நாராயணன்

முந்தைய கட்டுரைதற்சிறை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் கடிதம்