வெண்முரசு, அருண்மொழி- கடிதம்

அன்புள்ள ஜெ

இன்று அருண்மொழி அம்மாவின் வெண்முரசு ஒரு நுழைவாயில் உரையின் இரண்டாம் பகுதியை கேட்டேன். பிரமாதமான உரை. கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருந்தேன். அந்த உரையின் ஆரம்பம் மிகப் பொருத்தமாக இருந்தது. அதிலும் ஷண்முகவேலின் அர்ஜுனன் இரும்பு பெருங்கதவை திறக்கும் ஒவியம் முகப்பென அமைந்ததை வெகுவாக ரசித்தேன்.

இந்த உரையில் ஒவ்வொன்றும் எனக்கு பிடித்திருந்தது. அதில் ஒன்றை பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும். உரையின் பிற்பாதியில் அருணா அம்மா கூறுவது போல் நான் வாசித்தவரை எங்குமே நேரடியாக ஆசிரியர் குரல் வந்தது இல்லை. எல்லாவற்றையும் உள விலக்கத்துடன் கையாளும் அந்த சமநிலை என்னை பெரும் வியப்பில் ஆழ்த்திய ஒன்று.

முன்பு ஒருமுறை குருஜீ சௌந்தர் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது யோக நித்ரா போன்ற பயிற்சிகளை கொண்டு நம் கற்பனையை அந்த பிரபஞ்ச மனவெளியுடன் இணைத்து கொள்வதை பற்றி கேட்டேன். ஆம், அப்படி செய்வதற்கு முடியும். ஆனால் அது அத்தனை எளிதல்ல, உதாரணமாக இரு கட்டுவிரியன்கள் ஒன்றுடன் ஒன்று புணரும் காட்சி இயற்கையில் மிக அழகானது, இதை பார்க்கும் எளிய மனம் நாம் இப்படி ஒரு பெண்ணோடு என எண்ணுமானால் எல்லாம் முடிந்தது. அதன்பின் எல்லையில்லாது விரிதலுக்கு மாறாக, வெறும் நுகர்வில் திளைத்து மடிய வேண்டியது தான் என்றார். அன்று ஒரு ஏற்போடு கேட்டு கொண்டேன்.

அதன் பிற்பாடு கிராதத்தில் சித்ரசேனன் என்ற கந்தர்வனின் கதையை வாசிக்கையில் அதை முழுதாக உணர்ந்தேன். அந்த பகுதி காமம் ததும்புவது தான். அங்கு காமம் இயற்கையின் காட்டின் முகில்களின் என இன்னொன்றின் அழகை கூறும். அப்போது புரிந்தது முற்றிலும் விலகி நின்று பார்க்கும் வல்லமை இல்லாதவரால் அதை எழுத முடியாது என்று.

உரையில் யாயதி-புரு கதையை கூறி அதிலிருந்து மனம் உடல் காமம் என்பதன் பிணைப்பை குறித்த கேள்வி ஒரு திறப்பாக இருந்தது. அதேபோல பிரெஞ்சு படைகளின் மாஸ்கோ கைப்பற்றலுக்கு பின் அவர்களுக்கு எழும் ஒரு சோர்வு. அது எழுப்பும் கேள்வி. அதை எப்படி வெண்முரசு எதிர்கொள்கிறது என்பவை சிந்திக்க தூண்டின. நான் போரும் அமைதியும் வாசித்ததில்லை. வெண்முரசிலும் எழுதழலை தாண்டவில்லை. இந்த காரணங்களால் அதை விரிவாக்கி கொள்ள முடியாமையின் சிறு வருத்தமெனக்கு. அதையும் கடந்துவிடலாம்.

அப்புறம் இறுதியாக நான்கு டால்ஸ்டாய்களை உள்ளே வைக்கலாம் என்று சொல்லுகையில் அவர் முகத்தில் எழும் சிரிப்பு, அதுவரை விரிவான வாசிப்பனுபவம் கொண்ட வாசகியான அருண்மொழி நங்கையிலியிருந்து எழுத்தாளனின் காதலியும் எழுவது காண்பதற்கு மிக மகிழ்வாக இருந்தது.

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைமரபிலக்கியம் – கடிதம்
அடுத்த கட்டுரைதங்கப்புத்தகம்