முதற்காதலின் பொன்மணிக்கிளை

நான் என் பத்தொன்பது வயதில், நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிக்கும் காலகட்டத்தில், சாந்தி கிருஷ்ணா நடித்த பன்னீர்புஷ்பங்கள் என்ற படத்தைப் பார்த்தேன். தமிழுக்கு மிகப்புதிய படம் அது. முதிரா இளமைக்கால காதல். இயல்பான ஆண்பெண் ஆணவச் சிக்கல்கள், அதைவிட இயல்பான காமம். நாடகத்தனமான உச்சகட்டம் இல்லாத படம். அன்று அது ஒரு மலையாளப்படம் என்று தோன்றியது.

அந்தப்படத்தில் இளையராஜா இசையமைத்த அற்புதமான பாடலாகிய ‘ஆனந்த ராகம் கேட்கும் காலம்’ அன்று ஒரு பித்து போல பல மாதங்கள் எங்களை ஆட்கொண்டிருந்தது. அந்தப்பாட்டின் திணறல் என்னவென்றால் அதை நினைத்துத்தான் பார்க்கமுடியும். முனகக்கூட முடியாது. அப்படியொரு உச்சகட்ட மெட்டு.

அதில் சாந்தி கிருஷ்ணா தமிழ்ச்சாயலே இல்லாத பெண்ணாக தோன்றினார். அப்போது அவருக்கு பதினேழு வயது. கொஞ்சம் வெள்ளைக்காரச் சாயல் என்று நினைத்தேன். ஆனால் அவருடையது உண்மையில் ஒரு தென்கனரா முகம். மங்களூரில் அடிக்கடி காணக்கிடைப்பது.

ஆனால் சாந்திகிருஷ்ணாவின் பெற்றோர் கேரளத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் பிராமணர்கள். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அவருடைய அண்ணா. அண்ணாமலை, பாட்சா போன்ற படங்களின் இயக்குநர். சாந்தி கிருஷ்ணா பரதன் இயக்கிய நித்ரா என்னும் படத்தில் அறிமுகமானார். அன்றுமுதல் மலையாளிகளுக்குப் பிரியமான நடிகை. சகோரம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்றிருக்கிறார்.

சாந்தி கிருஷ்ணா சாகரம்சாந்தம், ஈணம், ஸ்வப்னலோகம் போன்ற படங்களில் மலையாளநடிகர் ஸ்ரீநாத்துடன் இணைந்து நடித்தார். ஸ்ரீநாத் திரிச்சூரைச் சேர்ந்தவர். சாந்தி கிருஷ்ணாவை விட எட்டு வயது மூத்தவர். தமிழில் சாந்தி கிருஷ்ணா அறிமுகமான அதே ஆண்டு, 1981ல் ரயில் பயணங்களில் என்ற படம் வழியாக அறிமுகமானார். ஆனால் மலையாளத்தில்தான் நடிகராக புகழ்பெற்றார்.

இது ஞங்களுடே கதா என்ற படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்ரீநாத் சாந்தி கிருஷ்ணாவை காதலிக்கத் தொடங்கினார். அன்று அவர்கள் மிகப்புகழ்பெற்ற காதல்ஜோடியாக திரையில் அறியப்பட்டனர். அவர்களை பார்ப்பதற்காகவே இளைஞர்கள் திரையரங்குக்கு வந்தனர்.

1984ல் ஸ்ரீநாத் சாந்தி கிருஷ்ணாவை மணந்தார். சாந்தி கிருஷ்ணா திரையுலகை விட்டு விலகினார். அவர்கள் பதினொரு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். 1995ல் அவர்கள் சட்டபூர்வமாகப் பிரிந்தனர். ஸ்ரீநாத் லதாவை மணந்தார். சாந்தி கிருஷ்ணா சதாசிவம் என்பவரை மணந்தார். 2016ல் சாந்தி கிருஷ்ணா சதாசிவத்தையும் சட்டபூர்வமாக பிரிந்தார்.

2010ல் எர்ணாகுளம் கோதமங்கலத்தில் ஷிக்கார் என்னும் சினிமாவின் படப்பிடிப்புக்காக வந்த ஸ்ரீநாத் விடுதியறையில் இறந்து கிடந்தார். அவருக்கு கடும்போதைப்பழக்கம் இருந்தது என்றும், அது தற்கொலையாக இருக்கலாமென்றும் அன்று இதழ்கள் கிசுகிசு எழுதின. அவர் அரசுசமரியாதையுடன் எரியூட்டப்பட்டார்.

சாந்தி கிருஷ்ணா 1991ல் மீண்டும் நடிக்க வந்தார். தாய் கதாபாத்திரங்களை நடித்தார். 2017ல் மீண்டும் நடிக்க வந்தார்.

இச்செய்திகள் எல்லாம் பொதுவெளியில் உள்ளன. இவை அவ்விருவரின் தனிவாழ்க்கை சார்ந்தவை. அவற்றுக்குள் நாம் நுழையலாகாது. ஆனால் நடிகர்களும் நடிகைகளும் பொதுமேடையில் நின்றிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துக்கொண்டே நாம் வளர்கிறோம். அவர்கள் நம் வாழ்க்கையின் பகுதிகளாக, நம் வாழ்க்கைக் காலகட்டங்களின் அடையாளங்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். அவர்களை நாம் வெறும் நடிகர்களாகப் பார்க்கமுடிவதில்லை. அவர்களின் கதாபாத்திரங்களும் அவர்களுடன் இணைந்துள்ளன. உண்மையில் அவர்கள் வாழ்வது இரண்டு வாழ்வு. தனிவாழ்வும் திரைவாழ்வும். இரண்டையும் முழுக்கப் பிரித்துவிட முடியாது.

ஸ்ரீநாத்தும் சாந்திகிருஷ்ணாவும் நடித்து 1984ல் வெளிவந்த மங்களம் நேருந்நு என்னும் மலையாளப்படம் புகழ்பெற்றது. அதில் இளையராஜா இசையமைத்த “ரிதுபேத கல்பன சாருத நல்கிய…” என்னும் பாடல் மலையாளிகளுக்கு என்றும் பிரியமான ஒன்று. மேடைகளில் அதை இருவர் இணைந்து பாடும்போது ஒரு ஆழ்ந்த உளநிலை உருவாகும்.

அப்படத்தில் ஸ்ரீநாத்தும் சாந்தி கிருஷ்ணாவும் காதலர்கள். அவர்கள் பிரியக்கூடும் என்னும் நிலையில் பாடும் அப்பாடல் வழக்கமான டூயட் அல்ல. கவிஞரான ஸ்ரீநாத் [மது] பாடும் பாட்டுடன் அவர் காதலியான சாந்தி கிருஷ்ணா [உஷா] இணைந்து கொள்கிறார்.

அந்த பாட்டும், அது படமாக்கப்பட்ட சூழலும், அவர்கள் இருவரின் இயல்பான அசைவுகளும் பார்வைகளும் அன்று இளைஞர்களை மிகக் கவர்ந்தவை. அப்படி ஒரு பெண்ணுடன் பாடிக்கொண்டு போகவேண்டும் என பாட்டே தெரியாத பையன்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். நான் அவ்வப்போது அந்தப் பாட்டைக் கேட்பதுண்டு, மலரும் நினைவுகளுக்காக.

யூடியூபில் சாந்தி கிருஷ்ணா அந்தப்பாடலை சமீபத்தில் பாடியதை கண்டேன். அறுபதை நெருங்கும் வயது. பழைய அழகின் சாயல்கொண்ட முகம். அந்தப்பாடலை அவர் பாடும்போது அந்த முகபாவனைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெல்லிய இனிமையைத்தான் அங்கே காணமுடிந்தது.

நினைவுகளை மனிதர்கள் எப்படி கடக்கிறார்கள்? அல்லது அவையே மனிதர்களை இயல்பாகக் கைவிட்டுவிடுகின்றனவா?

ரிதுபேத கல்பன சாருத நல்கிய
பிரிய பாரிதோஷிகம் போலே
ஒரு ரோமஹர்ஷத்தின் தன்யத புல்கிய
பரிரம்பணக் குளிர் போலே
ப்ரதம அனுராகத்தின் பொன்மணிச் சில்லையில்
கவிதே பூவாய் நீ விரிஞ்ஞு

ஸ்தலகாலமெல்லாம் மறந்து போய்
ஒரு சலஃபமாய் நின்னே திரஞ்ஞு
மதுமந்தஹாசத்தின் மாயயில் என்னே
அறியாதே நின்னில் பகர்ந்நு
ஸ்வரலோக கங்கயில் நீந்தி துடிச்சு
ஒரு ராஜ ஹம்சமாம் மாறி
ககன பதங்களில் பாறிப்பறந்நு
முழுத்திங்கள் பக்‌ஷியாய் மாறி

விரஹத்தின் சூடேற்று வாடிக்கொழிஞ்ஞு நீ
விடபறயுந்ந ஒரா நாளில்
நிறயுந்ந கண்ணுநீர் துள்ளியில்
ஸ்வப்னங்கள் சிறகற்று வீழுமா நாளில்
மௌனத்தில் முங்ஙுமென் கத்கதம் மந்த்ரிக்கும்
மங்களம் நேருந்நு தோழி

எம்.டி.ராஜேந்திரன், பாடலாசிரியர்

[தமிழில்]

பருவப்பெயர்ச்சியின் ஓவியத்தால்
அழகூட்டப்பட்ட
இனிய பரிசு போல
ஒரு மெய்சிலிர்ப்பின் நிறைவை அளிக்கும்
தழுவலின் குளிர் போல
முதற்காதலின் பொன்மணிக் கிளையில்
கவிதையே நீ பூவென மலர்ந்தாய்!

காலமும் இடமும் மறந்துபோன ஒரு
பட்டாம்பூச்சியாக உன்னைத் தேடினேன்
தேன்நிறைந்த புன்னகையின் மாயையில் என்னை
அறியாமல் உன்னில் பகிர்ந்தேன்
சுவரங்களின் கங்கையில் நீந்தி திளைத்து
ஓர் அன்னப்பறவையென மாறி
விண்வெளிக்கு எழுந்து
முழுத்திங்கள் பறவையென ஆனேன்.

பிரிவின் வெம்மையால் நீ வாடி உதிர்ந்து
விடைபெற்றுக்கொள்ளும் அந்த நாளில்
நிறையும் கண்ணீர் துளியில் கனவுகள்
சிறகறுந்து வீழும் அந்நாளில்
மௌனத்தில் மூழ்கும் என் துயர் முணுமுணுக்கும்
மங்கல வாழ்த்துக்கள் தோழி!

முந்தைய கட்டுரைஆனையில்லா!
அடுத்த கட்டுரைஉடல், உள்ளம் – கடிதங்கள்