ஜெயமோகன் அவரகளுக்கு,
வணக்கம். நான் உங்கள் எழுத்துக்கள் மற்றும் video சில பார்த்தும் உங்கள் விசிறியானவன். ஒரு இதயநோய் மருத்துவன். தமிழ் மீது பற்றுக்கொண்டவன்.
தெண்பாண்டி சீமை.இந்த சொற்றொடர் பிரயோகம் தமிழ் சினிமா பாடல்களில் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
1.தெண்பாண்டி சீமையில தேரோடும் வீதியில.
2.தெண்பாண்டித்தமிழே
3. தெண்பாண்டிக்கூடலா
4. தேனே தெண்பாண்டி மீனே…
இன்னும் நிறைய…
இது எதனால் ?உங்கள் கருத்துக்கள் கேட்க விரும்புகிறேன், மிகவும் சுவைபட இருக்கும் என நம்புகிறேன்.
டி.மூர்த்தி
அன்புள்ள மூர்த்தி அவர்களுக்கு,
சினிமாப்பாட்டில் தென்பாண்டி என வருவது முதன்மையாக அது தந்தான என்னும் சந்தத்தில் அமைவதனால்தான்.
அந்தச் சொல்லாட்சி நாட்டார்பாட்டுகளில் உண்டு. காரணம் மதுரைக்கு தெற்கே உள்ள நாட்டார் பாடல் வகை தெம்மாங்கு எனப்படுகிறது. தென்பாங்குப் பாட்டு என்பதன் மரூஉ அது.
அதைப் பாடுகிறவர் தன்னை தென்பாண்டி நாட்டான் என்றும் தன் நிலத்தை தென்பாண்டிநிலம் என்றும் சொல்வதுண்டு.
சினிமாப்பாட்டில் தெம்மாங்குப் பாட்டின் செல்வாக்கு நேரடியானது. அது தெருக்கூத்தில் இருந்து நாடகத்துக்குச் சென்று அங்கிருந்து சினிமாவுக்குச் சென்றது. புகழ்பெற்ற பல பாடல்கள் தெம்மாங்கு மெட்டு கொண்டவை. [உதாரணம், மாமா மாமா மாமா, என்னடி ராக்கம்மா, ஒத்தரூவா தாரேன்…]
தெம்மாங்கு சினிமாவுக்குச் சென்றபோது தென்பாண்டி என்னும் சொல்லாட்சியையும் எடுத்தாண்டிருக்கிறார்கள்.
ஜெ
அன்புள்ள ஜெ,
இளம் வாசகன் பேசுகிறேன்.
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு என் இனிய வணக்கம்.
இப்போது நான் எழுத்தொடங்கியிருக்கிறேன்.என்னுடைய கேள்வி , கவிதை, கட்டுரை,சிறுகதை,நாவல்,உரைநடை, குறுநாவல் போன்ற வகைமைக்குள்தான் இயங்க வேண்டுமா ? ,எழுத வேண்டுமா ?
அன்புடன்
ப.கலைச்செல்வன்
அன்புள்ள கலைச்செல்வன்,
இன்றிருக்கும் எந்த வடிவும் மாறா இலக்கணம் அல்ல. இலக்கணங்களை மீறி தாராளமாக எழுதலாம். அப்படி பல முயற்சிகள் எப்போதுமே நடைபெற்றிருக்கின்றன. கவிதை நாடகங்கள் [சுந்தரம்பிள்ளையின் மனோன்மணியம், ஆ.பழனியின் அனிச்ச அடி] கவிதை நாவல்கள் [நாமக்கல் கவிஞரின் அவனும் அவளும்] கவிதைபோன்ற உரைநடையாகிய உரைவீச்சு [என்.ஆர்.தாசன்] என பல வடிவங்கள் முயலப்பட்டுள்ளன.நீங்களும் புதியன காணலாம்
ஜெ